அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதை போல சமூகப்பணி எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. "போகுமிடம் வெகு தூரம், போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் அன்றைய நிலையாக இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் காலம் காலமாக பல துறைகளில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் பெண் விடுதலையின் ஆணிவேர்களில் ஒருவராக பார்க்கப்படும் வை.மு. கோதைநாயகி அம்மாள் குறித்து இங்கே காணலாம்.
ஆரம்பகால வாழ்க்கை
என்.எஸ்.வெங்கடாச்சாரியார் மற்றும் பட்டம்மாள் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தையாக 1901, டிசம்பர் 1ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்வளூரில் பிறந்தவர் கோதைநாயகி அம்மாள். இவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது தாய் பட்டம்மாள் இறந்துவிட்டார். அன்றைய காலத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்ததால் கோதைநாயகிக்கு ஐந்தரை வயது இருக்கும் போது வை.மு. பார்த்தசாரதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டு மரபின்படி அவர்களின் குடும்ப பெயரான ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயரின் சுருக்கமான வை.மு. என்ற எழுத்துக்களை தன் பெயர் முன் சேர்த்துக்கொண்டார் கோதைநாயகி அம்மாள்.
இலக்கியப் பணி
தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி நாலடியார் முதலிய பல தமிழ் இலக்கியங்களை வை.மு. கோதைநாயகி அம்மாள் கற்றுக்கொண்டாலும் திருமணத்திற்கு பிறகு கல்வியை தொடராத காரணத்தால் அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் வீட்டில் எப்போதும் திருவாய்மொழி, பாசுரங்கள் பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்குத் தமிழ்நடை சரளமாக வரத் தொடங்கியது. சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கற்பனைக் கதைகளை கூறும் திறன் கோதைநாயகிக்கு எழுதப்படிக்க தெரியாமல் போனது அவருக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
இதை அறிந்த கணவர் பார்த்தசாரதி கோதைநாயகியின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவரைக் கல்வி கற்கச் செய்தார். பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். கச்சேரிகளில் கேட்ட பாடல்களை அப்படியே பாடும் திறன் கோதைநாயகியை தொற்றிக்கொண்டது. காலப்போக்கில் கோதைநாயகியின் கதை புனையும் திறனும், இசை அறிவும் மேம்பட அவருக்கு தானே நாடகங்களை எழுத வேண்டும் என்ற ஆவல் துளிர்விடத் தொடங்கியது. கோதைநாயகி எழுதப்படிக்க தொடங்கிய காலம் என்பதால் அவருக்கு முழுமையாக எழுதுவதில் சிரமம் இருந்தது. இதனால் தனது தோழி பட்டம்மாள் உதவியுடன் முதல் நாடக கதையை எழுத தொடங்கினர். கோதைநாயகி கூற தோழி பட்டம்மாள் எழுத 'இந்திர மோகனா' என்ற முதல் நாடக கதை உருவானது. இந்த நாடகத்தையை 1924ம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.
'இந்திர மோகனா' நூல் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற தொடங்கியது. இதன் மூலம் வை.மு கோதைநாயகியின் பெயர் முதன்முதலில் இலக்கிய உலகில் இடம் பிடித்தது. முதல் நூலுக்கு கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது. அதன் பின் மிகுந்த முயற்சியும் பயிற்சியும் செய்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு ‘வைதேகி’ என்ற தனது இரண்டாவது நாவலை தானாக எழுதி வெளியிட்டார். பல்வேறு இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த கோதைநாயகி தான் எழுதும் நாவல்களின் இடையே இலக்கியப் பாடல்களை இணைத்து எழுதினார். அதே போல் ஒவ்வொரு நாவலின் இறுதியை திருக்குறளால் முடிக்கும் புதுமையைக் கையாண்டார்.
பத்திரிகைத் துறை
தாமே ஒரு பத்திரிக்கையை சொந்தமாக நடத்த வேண்டும் என்று விரும்பிய கோதைநாயகி ‘ஜகன் மோகினி’ என்ற மாத இதழை விலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். மாத இதழை வெளியிடுவதுடன் தனது நாவல்களையும் ‘ஜகன் மோகினி’ இதழில் வெளியிட்டார். இதன் மூலம் தமிழ் பத்திரிகைத் துறையின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற முதல் பெண் இவரே. மேலும் துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்ணும் இவரே. பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றைப் கோதைநாயகி தனது எழுத்தாற்றல் மூலம் நாவல்களில் வெளியிட்டார். இது தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கோதைநாயகி தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டார். இதனால் அன்றைய காலத்தில் தமிழ்நாட்டில் ‘ஜகன் மோகினி’ முன்னணி இதழ்களில் ஒன்றாக முன்னேறியது. அவர் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது. வை.மு. கோதைநாயகி அம்மாள் மொத்தம் 115 நாவல்களை எழுதியுள்ளார்.
மேலும் படிக்க : மதுரையை எரித்த கண்ணகியின் காதல் தவத்தை காதலர் தினத்தில் தெரிஞ்சுகோங்க
அரசியல் பயணம்
மேடை பேச்சுகளில் சிறந்து விளங்கினார் கோதைநாயகி. பேசும் போது இடையிடையே குட்டிக் குட்டிக் சொல்வார் என்பதால் இவரின் பேச்சுக்களை கேட்க ஏராளாமானோர் கூடுவார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்க பேச்சாளராக வை.மு. கோதைநாயகி அம்மாள் விளங்கினார். இராஜாஜி, காமராசர், தீரர் சத்தியமூர்த்தி போன்ற பெரும் தலைவர்களின் நட்பு கிடைத்தது. ஒரு பொதுக் கூட்டத்தில் கோதையம்மாள் பேசியதைக் கேட்டு தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி உத்தரவிட்டார ராஜாஜி.
விடுதலைப் போராட்டம்
1925ம் ஆண்டு சென்னைக்கு வருகை தந்த மகாத்மா காந்தியை கோதைநாயகி சந்தித்தார். காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது உறுதியான நாவன்மையும் கோதைநாயகி கவர்ந்தது. இதனால் எப்போதும் பட்டாடை உடுத்தும் பழக்கமுடைய கோதைநாயகி அன்று முதல் பட்டாடை மற்றும் ஆடம்பர நகைகளை தவிர்த்து கதர் புடவையை அணியத் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த அம்புஜம்மாளுடன் சேர்த்து கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிறரையும் கதர் ஆடை உடுத்தும்படி வலியுறுத்தினார்.
1931ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கள்ளுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த போது திருவல்லிக்கேணியில் இருந்த கள்ளுக்கடைக்கு எதிராக கோதைநாயகி மறியலில் ஈடுபட்டார். இதனால் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கோதைநாயகி சிறையில் இருக்கும் போதும் தனது எழுத்துப் பணியை தொடர்ந்தார். அங்கிருந்த பெண் கைதிகளுடன் பேசி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு 'சோதனையின் கொடுமை' என்ற நாவலை எழுதினார்.
மேலும் படிக்க : சாவித்திரிபாய் புலே : இந்தியாவில் பெண் கல்விக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி
திரைப்படத்துறை
திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ‘தயாநிதி’ என்ற நாவல் சித்தி என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. அதன் பின் ‘அனாதைப் பெண்’ ‘தியாகக் கொடி’,‘ராஜமோஹன்’,‘நளினி சேகரன்’ போன்ற நாவல்களும் பிற்காலத்தில் திரைப்படமாக வெளிவந்தன. சிறந்த கதையாசிரியர் விருது ‘சித்தி’ படத்திற்காக கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.
சமூகப்பணி
மகாத்மா காந்தி மறைந்த பின்னர் அவரின் நினைவாக 'மகாத்மா ஜி சேவா சங்கம்' என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அச்சங்கத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார். பெண்களுடைய திறமைகள் வெளியே தெரிவதில்லை என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்களை அழைத்து வந்து தம்மோடு கச்சேரிகளில் பாட வைத்தார். பெண்கள் எழுத்துத் துறையிலும், இசைத் துறையிலும், நாட்டியத் துறையிலும் முன்னுக்கு வர பாடுபட்டார்.
இந்நிலையில் வை.மு. கோதைநாயகி அம்மாள் 1960ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி தனது 59வது வயதில் இயற்கை எய்தினார். இவர் மறைந்தாலும் பல பெண் எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாக இன்றும் திகழ்கிறார் தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation