சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்களுக்கான உரிமைகள், பாலின சமத்துவம், கல்வியை உறுதிப்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருள் எல்லா பெண்களுக்கும் உரிமை, சமத்துவம் கடைபிடிப்பு, அதிகாரமளித்தல் ஆகும். மகளிர் தினத்திற்கான ஊக்கமளிக்கும் சிறப்புரை இங்கு பகிரப்பட்டுள்ளது.
மகளிர் தின சிறப்புரை
மகளிரின் சாதனைகளை கொண்டாடுதல்
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். நாம் இங்கு உலகெங்கிலும் வியக்க வைக்கும் சாதனைகளை படைத்த பெண்களை கொண்டாட கூடியிருக்கிறோம். குறிப்பாக இந்திய பெண்களின் சாதனைகளை போற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் வலிமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தும் பெண்களை நாம் பாராட்ட வேண்டும்.
இந்திய வரலாற்றை புரட்டினால் சமூகத்தை வடிவமைப்பதிலும், சம உரிமைக்காக பாடுபட்டதிலும் பெண்களின் பங்களிப்பை புரிந்து கொள்ள முடியும். விண்வெளியில் தடம் பதித்த முதல் இந்திய வம்சாவளியான கல்பனா சாவ்லா பல தலைமுறை பெண்களுக்கு முன்னோடி ஆவார். பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைமையான அருந்ததி பட்டாச்சார்யா தடைகளை உடைத்து பெண்கள் தலைமை பண்புக்கு வர முடியும் என எடுத்துக்காட்டாக விளங்குபவர். மகளிர் தினம் கொண்டாடும் இந்நேரத்தில் சமூகத்தில் இந்திய பெண்களின் சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். பயோ டெக்னாலஜி தொழில்துறையில் முன்னோடியான கிரண் ஷா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட பலர் பெண்களின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
வீட்டிலும், பணி இடத்திலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும், ஊக்கமளித்தும் எல்லா பெண்களும் உயரத்தை அடைவதில் கவனமாக இருப்போம்.
பெண்களும் எதிர்கால நலனும்
அனைவருக்கும் வணக்கம்
இந்த சர்வதேச மகளிர் தினத்தில் வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு இளம் பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதை குறிக்கோளாக கொள்வோம். பெண்களுக்கு கல்வி அறிவை வழங்குவது, சம வாய்ப்பினை கொடுப்பது மட்டுமே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
தடைகளை தகர்த்து எறிந்து பெண்கள் தங்களுடைய கனவுகளை அடைய கல்வி மிக முக்கிய ஆயுதமாகும். தரமான கல்வியை அளிப்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல சமூகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு பெண்ணும் கல்வியை பெற்றிட தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் யாரும் பாலின பாகுபாடால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வோம். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றாக பயணிப்போம் என உறுதி ஏற்போம்.
தடைகளை உடைத்த சிங்கப் பெண்கள்
எல்லோருக்கும் அன்பான வணக்கம்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!. இந்த நாளில் விளையாட்டு துறையில் பெண் படைத்த பெரும் சாதனைகளை ஆர்ப்பரித்து கொண்டாடுவோம். பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை புரிந்து மூட நம்பிக்கைகளை உடைத்து தாங்கள் யார் என்று காண்பித்துள்ளனர்.
இந்திய விளையாட்டு துறையில் ஜொலிக்கும் பெண்களுக்காக கரகோஷம் எழுப்புவோம். பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலமும் வென்றனர். ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி பி.வி.சிந்து விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் பல பெண்களுக்கு சிறந்த முன்னோடி ஆவார். மகளிர் கிரிக்கெட்டில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், ஸ்மிருதி மந்தனாவும் அணியை சிறப்பாக வழிநடத்துகின்றனர். விளையாட்டில் சாதிக்க பாலினம் தடையல்ல என்பதை இவர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். எனவே மீண்டும் ஒரு முறை பல்வேறு விளையாட்டுகளில் ஜொலிக்கும் இந்திய பெண்களுக்கு பலத்த கைதட்டல்கள். அவர்கள் வெறும் வீராங்கனைகள் அல்ல கடின உழைப்பால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என காண்பித்த நட்சத்திரங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation