சுதந்திர வேட்கையை பாய்ச்சும் சுதந்திர தின விழா பேச்சு! மாணவர்களே உங்களுக்காக...

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் சுதந்திர தின பேச்சுபோட்டியில் என்ன பேச வேண்டும் ? எவ்வாறு பேச வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இந்த பதிவு...

Independence day speech

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெறுவது வழக்கம். சுதந்திரம் பெறுவதற்கு நம் நாட்டு மக்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்து எண்ணற்ற தியாகிகளை போற்றிப் புகழ்வதற்கு சுதந்திர தின பேச்சு போட்டி ஒரு அற்புத வாய்ப்பாகும். இந்த ஆண்டும் வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று உண்மையான உணர்வுபூர்வமான சுதந்திர போராட்ட வரலாற்றை பற்றி உரையாற்ற மாணவர்கள் தயாராக உள்ளனர். சிலருக்கு பேசும் ஆர்வம் இருந்தாலும் எங்கு தொடங்கி எதில் முடிப்பது என கேள்வி இருக்கும். அவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவு பகிரப்படுகிறது.

best speech for independence day

நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பள்ளி, கல்லூரி அல்லது சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஒருபோதும் தவறவிடாதீர்கள். சுதந்திர தின உரையை எளிமையாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் வழங்க வேண்டும்.

சுதந்திர தின உரை :

அனைவருக்கும் காலை வணக்கம்

இன்று நாம் பாரத திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவை கொண்டாட இங்கு ஒன்றுகூடியுள்ளோம். லட்சக்கணக்கான உயிர் தியாகங்கள், வார்த்தையில் விவரிக்க இயலாத இழப்புகளை எதிர்கொண்டு பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்கு பிறகு கொடுங்கோல் ஆங்கிலேயே ஆட்சியின் சங்கிலியை உடைத்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் பாரத தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாள் வெறும் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றைப் பற்றியது மட்டுமல்ல நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தேசத் தலைவர்களிடம் இருந்த வலிமையும், ஒற்றுமையையும் நினைவுகூரும் நாளாகும்.

இந்த சுதந்திர தினத்தில் பாலின பாகுபாடின்றி அனைவருக்குமான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சமூகநீதியின் முக்கியத்துவத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தேசத்தின் விடுதலைக்காக அயராது போராடிய லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தை போற்றிப் புகழ வேண்டும். வளமான இந்தியாவை உருவாக்க நம்முடைய தலைவர்கள் வகுத்த வழி மற்றும் தொலைநோக்கு பார்வை கோடிக்கணக்கான மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டது. பொறுப்புள்ள குடிமகனாக நம் நாட்டை முன்னேற்ற பாதையிலும், வல்லரசு நாடாக மாற்றுவதிலும் போதுமான பங்களிப்பை உறுதி செய்து பணியாற்ற வேண்டியது இந்த நாட்டிற்கு நாம் செய்யும் தலையாய் கடமையாகும்... இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதில் மாணவர்களாகிய நமக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த அற்புதமான நாளில் தேசியக் கொடியை வணங்கி ஒளிமயமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம். சுதந்திரமும் ஒருவித கட்டுப்பாடு என்பதை உணர்ந்து செயல்படுவோம். சுதந்திர தினம் என்றால் விடுமுறை கிடைக்கும் என நினைக்காமல் லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தை போற்றி புகழ்ந்து சுதந்திரத்தை கொண்டாடுவோம். நாம் அனைவருமே இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். பாரத தேசத்தை மேலும் மேன்மை அடைய ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

ஜெய் ஹிந்த்! வாழ்க பாரதம்

குறிப்புகள் :

நீங்கள் மேடையில் சரளமாக பேசுவதற்கு பலமுறை ஒத்திகை பார்க்கவும். உங்கள் உரை அனைவருக்கும் கேட்கும் வகையில் சத்தமாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP