சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவரான எல். கீர்த்தனா டெல்லியில் மார்ச் 17 முதல் மார்ச் 21 வரை டெல்லியில் நடந்த 52வது தேசிய சுண்டாட்ட சாம்பியன்ஷிப்பில் தமிழகம் சார்பாக பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். 8 வயது முதல் தனக்கு பிடித்தமான விளையாட்டில் ஜொலிக்க பல மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்ட கீர்த்தனா டெல்லியில் சாதனை படைத்து தமிழகம் திரும்பியுள்ளார். கீர்த்தனாவையும் கேரம் விளையாட்டினையும் எப்போதும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். அவர் தினந்தோறும் செய்வது இரண்டு வேலைகள் மட்டுமே. கேரம் பயிற்சி எடுப்பது, ஜூனியர்களுக்கு கேரம் சொல்லிக் கொடுப்பது. குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் துவண்டு போய்விடாமல் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அயராது உழைக்கிறார்.
கேரம் சாம்பியன் கீர்த்தனா
கீர்த்தனா தேசிய கேரம் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது நான்காவது முறை. முந்தைய வாய்ப்புகளில் 4 சுற்றுகள், காலிறுதி வரை சென்று தோற்று வெளியேறிய நிலையில் இம்முறை இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் காசிமாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். கீர்த்தனாவின் கேரம் பயிற்சியாளர் வேறு யாரும் அல்ல. காசிமாவின் தந்தையே. இருவரும் நண்பர்கள் என்ற போதிலும் களத்தில் விட்டுக் கொடுப்பதில்லை. இருவருமே ஒரு கிளப்பில் பயிற்சி எடுப்பவர்கள்.
கீர்த்தனாவை துரத்தும் வறுமை
கேரம் விளையாடுவதற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் குடும்பத்தை பற்றி பேசுகையில் கீர்த்தனா கண் கலங்குகிறார். கேரம் விளையாடுவதற்கு ஊக்குவித்த தந்தை லோகநாதன் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் இந்தராணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். அண்ணனும், தம்பியும் துணிக் கடலையில் வேலை செய்து வருவாய் ஈட்டுகின்றனர். டெல்லி செல்வதற்கு தாயின் நகைகளை அடகு வைத்ததாக கூறும் தருணத்தில் நா தழுக்கிறார்.
காலை முதல் மாலை வரை கேரம் விளையாடி பயிற்சி எடுக்கும் கீர்த்தனா மாலை நேரத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கேரம் விளையாட சொல்லிக் கொடுக்கிறார். அடுத்தக்கட்டமாக உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள கீர்த்தனாவிற்கு உறுதுணையாக நிற்கும் குடும்பத்திற்காக ஜெயிக்க வேண்டும் என வைராக்கியம் உள்ளது. தனது திறமைக்காக அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் நிதி நெருக்கடியை போக்கி தாயின் முகத்தில் புன்னகையை வரவழைக்க கீர்த்தனா விரும்புகிறார். கீர்த்தனாவின் கனவுகள் நிறைவேற ஹெர் ஜிந்தகி குழு சார்பாக வாழ்த்துகள்.
மேலும் படிங்கஉலகின் டாப் 7 பணக்கார பெண்கள் யார் தெரியுமா ? பட்டியலில் இந்திய பெண் உண்டா ?
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation