
World Diabetes Day 2025: உலகெங்கிலும் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) ஒரு பெரிய அச்சுறுத்தலாக அதிகரித்து வரும் நிலையில், அதன் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் (World Diabetes Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று கிடையாது. நீரிழிவு நோயின் வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, 1991 ஆம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு (International Diabetes Federation - IDF) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) இணைந்து இதை உருவாக்கியது. பின்னர், ஐக்கிய நாடுகளின் தீர்மானம் 61/225 நிறைவேற்றப்பட்டதன் மூலம், 2006 ஆம் ஆண்டில் இது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த தினத்தை அனுசரிக்க நவம்பர் 14 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. 1922 ஆம் ஆண்டில், நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இன்சுலினை கண்டுபிடித்த சர் ஃப்ரெட்ரிக் பாண்டிங் (Sir Frederick Banting) பிறந்த தினம் நவம்பர் 14 ஆகும். இது விஞ்ஞானத்தின் ஒரு மாபெரும் மைல்கல்லை நினைவுபடுத்துகிறது. அதனடிப்படையில், இன்று உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும்
உலக நீரிழிவு நோய் தினம் 2025-இன் மையக் கருப்பொருளாக "நீரிழிவு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 14 ஆம் தேதிக்கான சிறப்பு கவனம் ஈர்க்கும் விதமாக 'நீரிழிவு மற்றும் பணியிடம்' (Diabetes and the workplace) என்று பரப்புரை குறிப்பிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், சரியான கவனிப்பு மற்றும் நல்வாழ்விற்கான ஆதரவை பெற்றால், ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வாழ முடியும் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர்; எப்படி தெரியுமா?
இந்த தினம், ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோயை அணுகுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை ஒவ்வொரு நிலையிலும் தடுப்பு நடவடிக்கைகள், பயனுள்ள அணுகுமுறை மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் உத்திகள் ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது. நீரிழிவு நோய்க்கான சவால்கள் மற்றும் முன்னேற்றங்களை நாம் சிந்தித்து பார்ப்பதன் மூலம், ஆராய்ச்சியின் மதிப்பு, சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் வாழ்க்கை முறை அணுகுமுறைகளின் அவசியத்தை உலக நீரிழிவு நோய் தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
உலகளவில் சுமார் 589 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாகும். மேலும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். மேலும், சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பின்படி (IDF), அனைத்து தரப்பிலும் ஏறத்தாழ பாதி பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அதிக விழிப்புணர்வு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிக்கல்களை தடுக்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் அணுகக்கூடிய கவனிப்பு ஆகியவற்றின் அவசர தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முன், குறிப்பாக 'ப்ரீடயாபடீஸ்' (Prediabetes) எனப்படும் இரத்த சர்க்கரை அளவு சற்றே அதிகமாக இருக்கும் நிலையில், நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை உலக நீரிழிவு நோய் தினம் வலியுறுத்துகிறது. இந்த ஆரம்ப நிலையில், எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும். அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை குறைப்பது, தொடர்ந்து உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அருந்துவது, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவை கடைபிடிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இந்த மாற்றங்களை செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் நீரிழிவு நோயாக முன்னேறும் அபாயத்தை குறைக்கவும் முடியும். இதன் மூலம் மக்கள் ஆரோக்கியமான மற்றும் நீண்ட காலம் வாழும் வாய்ப்பை பெறுகிறார்கள். நீரிழிவு நோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு உறுதியளிப்போம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]