13 வயது முதல் 16 வயது வரையான காலக்கட்டம் ’பதின்ம பருவம்’ என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை டீன் ஏஜ் வயது என்கின்றனர். இந்த பருவத்தில் தோன்றும் காதலுக்கு பதின்பருவ காதல் என்று பெயர். இதற்கு ‘அறியாப்பருவ காதல்’ என்று இன்னொரு அழகான பெயரையும் வைக்கலாம். இந்த வயதில் காதலிப்பது சரியா? தவறா? என்ற விவாதங்கள் ஒருப்புறம் இருக்கட்டும். பல வருடங்களாக காதலித்து வாழ்க்கையில் இணைந்த பெற்றோர்கள் கூட இந்த வயதில் தோன்றும் காதலை எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களின் அனுபவம்.
இது வெறும் பதின்ம பருவம் காதல் மட்டுமில்லை. இருவரும் சேர்ந்து, தனித்து வாழ தகுதியில்லாத காதலாகவும் பார்க்கப்படுகிறது. மனிதனாய் பிறந்த அனைவருக்குமே பருவ வயதில் காதல் பூப்பது இயற்கையான ஒன்று. எதிர்பாலினத்தின் மீது தோன்றும் ஈர்ப்பை காதல் என்று சொன்னால் அது முறையாகாது. கண்டதும் காதல், கண் தெரியாதவர்களுக்கு ஹெல்ப் செய்தால் காதல் என இதுப்போன்ற உருட்டுகள் சினிமாவில் சாத்தியப்படலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் காதலை உணரும் தருணம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதை உணர, ஆண்-பெண் இருவரும் வயதாலும், மனதாலும் பக்குவம் அடைந்திருக்க வேண்டும்.
அதற்காக 30 வயதில் தான் காதலிக்க வேண்டுமா? என்றால் அப்படியில்லை. பதின்ம பருவத்தில் தோன்றும் காதல், பல நேரங்களில் தோல்வியை சந்திக்கிறது. அதற்காக படிப்பில் கவனத்தை சிதறடிப்பது தொடங்கி, சில சமயங்களில் தற்கொலை எண்ணம் வரை இது இழுத்து செல்கிறது. இந்த பயம் தான் பெற்றோர்களை கலங்க வைப்பது. சிலர் இதிலிருந்து எளிதில் வெளியே வந்து சகஜமாகி விடுவார்கள். ஆனால் சிலர் மனதளவில் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பார்கள். இதனால் அவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்வி குறியாகும் வாய்ப்புள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:குழந்தையை அடித்து வளர்ப்பது சரியானதா?
குறிப்பாக பதின்ம வயதினைக் கடந்துவிட்டாலே போதும். ஓரளவுக்கு முதிர்ச்சி வந்துவிடும். காதல் குறித்த புரிதல், துணையை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றில் ஒரு தெளிவும் வந்துவிடும். சொல்லப்போனால் சில ஆண்களுக்கு காதல் வந்த பின்பு தான் பக்குவமும் வரத் தொடங்கும்.
டீன் ஏஜ் வயதில் அட்வைஸ் செய்தாலே அவர்கள் எதிரியாக தெரிவார்கள். பெற்றோர் மீது எரிச்சல் வரும். பிடித்த தோழன் மற்றும் தோழியோடு மட்டுமே பேச பிடிக்கும். மனம் தனிமையை அதிகம் நாடும். இதற்கெல்லாம் இடம் கொடுத்தால் மட்டுமே டீன் ஏஜ் காதல் எட்டி பார்க்கும். அதற்கு வாய்ப்பே தராமல் எப்போதுமே ஜாலியாக இருக்கலாம். நண்பர்களுடன் பேசி மகிழலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம். ரூமில் தனியாக உட்கார்ந்து யோசிக்காமல் குடும்பத்தாருடன் சிரித்து பேசி ரிலாக்ஸ் செய்யலாம்.
இந்த காலக்கட்டத்தில் ரீல் லைஃப் சினிமாவில் காட்டப்படுவதை உண்மை என நினைத்து அதை பின் தொடரும் பல நிகழ்வுகளை அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். சினிமாவில் காட்டும் பள்ளிப்பருவ காதல், பார்க்காத காதல் போன்றவற்றை வெறும் 3 மணி நேர பொழுதுப்போக்காக மட்டுமே பார்த்துவிட்டு அதிலிருந்து கடந்து வாருங்கள். அதை நிஜ வாழ்க்கைக்குள் கொண்டு வராதீர்கள்.
பிள்ளைகளின் பதின்பருவ காதலை கையாள்வதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுடன் எல்லா நேரத்திலும் துணையாக நில்லுங்கள். அவர்களை அடித்து, மிரட்டி உங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்காதீர்கள். நீங்களும் இந்த பருவத்தை தாண்டி வந்தவர்கள் என்பதால், சிக்கலை தெளிவாக புரிந்து கொண்டு அவர்கள் தோள் சாயும் தோழன்/தோழியாக இருங்கள். இந்த நேரத்தில் அவர்கள் மீது நீங்கள் காட்டும் வெறுப்பு, வன்மம் ஆகியவை பிற்காலங்களில் ஆறாவடுவாய் அவர்களின் மனதில் நின்று விடும்.
அவர்களின் தேவையை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். எல்லா பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளும் பெற்றோர்கள் இருந்தால், எந்த பிள்ளைகளும் மற்றவர்களின் உதவியை நாடி செல்ல மாட்டார்கள்.
பிரபல திரைப்பட இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி, நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் பேசும் பொருளானது. டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி? என்பதற்கு ஒரு பதிவின் மூலம் உதாரணம் கொடுத்தார் கிருத்திகா.” நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை முழு மகிமையில் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.” என்று ட்வீட் செய்து இருந்தார். ஒரு தாயாக கிருத்திகாவின் இந்த தைரியமான பதிவு சமூக ஆர்வலர்களாலும் பெற்றோர்களாலும் வரவேற்கப்படுகிறது. டீன் ஏஜ் வயதில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனை தான் இதுவும். இன்ப நிதி குறித்து சர்ச்சையை அவர் கையாண்ட விதம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஆகவே, பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளும் சரி, அவர்களின் பெற்றோர்களும் சரி இந்த பருவத்தில் வரும் காதலை மனமும், உடலும் சிதையாமல் கடந்துவிட்டால் இதற்கு பின்னான காலம் சிறப்பாக அமையும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]