வீடு, பேருந்து, கல்லூரி, பள்ளிக்கூடம், இரயில் நிலையம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனால், இந்த புத்தாண்டில் எல்லா வயது பெண்களும் பாதுகாப்பாக இருக்க தேவையான 9 முக்கிய குறிப்புகளை இந்த பதிவின் மூலமாக படித்தறிந்து பயன்பெறலாம்.
1. இருசக்கர வாகனம் ஓட்டும்போது
இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் சேலைத்தலைப்பு, துப்பட்டா ஆகியவை வாகனத்தில் சிக்கிக் கொள்ளாத வகையில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை வாகனத்தில் அமரும் போதும், சேலைத்தலைப்பு அல்லது துப்பட்டாவை மறக்காமல் சரிபார்க்க வேண்டும்.
2. ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கும் போது
பொது இடங்களில் தேவையில்லாமல் பர்ஸை திறந்து பார்ப்பது அல்லது பணத்தை எண்ணுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்து பணத்தை எண்ணக்கூடாது. ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுத்துவிட்டு திரும்பும் போது யாரேனும் பின்தொடர்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
3. ரயில்/ பேருந்தில் பயணிக்கும் போது
ரயில் அல்லது பேருந்துகளில் இரவு நேரத்தில் பயணிக்கும் போது, தனியாக அமர்ந்து பயணிப்பதை தவிர்க்கவும். சற்று கூட்டமாக இருக்கும் இடங்களில் அமர்ந்து வருவது நல்லது. மேலும் செல்போனில் மூழ்கி விடாமல், சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
4. பொது இடங்களுக்கு செல்லும் போது
வேலைக்கு செல்லும் போது, அல்லது திரையரங்கு, மால் போன்ற கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது தங்க நகைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. திருமண விழாக்களுக்கு அல்லது குடும்ப விழாக்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: என் மகன் மூக்கில் விரல் வைக்கிறான், எப்படி தடுப்பது?
5. செல்போன் பயன்படுத்தும் போது
செல்போனில் தேவையற்ற செயலிகளை, அல்லது பாதுகாப்பற்ற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். தெரியாத எண்களில் இருந்து லிங்க் ஏதேனும் வந்தால், அதை தொட்டு விடக்கூடாது. லோன் ஆப்களில் கடன் வாங்கக்கூடாது. OTP, ஏ.டி.எம் கார்டு எண் போன்றவற்றை யாரேனும் கேட்டால் சொல்லக்கூடாது. செல்போனில் வங்கி தகவல்கள், புகைப்படங்கள் உட்பட பல முக்கிய தகவல்களை நாம் வைத்திருப்போம். இது போன்ற விஷயங்களை செய்தால், நமக்கே தெரியாமல் நம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, நம் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது, அல்லது வங்கியில் இருக்கும் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
6. ரகசிய கேமரா
நீங்கள் படிப்பு அல்லது வேலை காரணமாக விடுதிகளில் தங்கி இருந்தாலோ, அல்லது துணிக் கடைகளில் ஆடை அணிந்து பார்த்தாலோ கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், மால்கள், துணிக்கடைகள், திரையரங்குகளில் உள்ள கழிவறைகள் அல்லது ஓட்டல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளது.
7. ரகசிய கேமராக்களைக் கண்டுபிடிக்கும் வழிகள்
- அறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு பார்க்கும் போது, ரகசிய கேமராக்களில் இருக்கும் எல்.இ.டி விளக்குகள் ஒளிரும். இதை வைத்து கேமரா இருப்பதை அறியலாம்.
- துணி கடைகளில் உடை மாற்றும் அறையில் இருக்கும் கண்ணாடியின் மீது விரலை வைத்து பார்க்க வேண்டும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் பிம்பத்தின் விரலுக்கும் இடையில் இடைவெளி இல்லை என்றால், அங்கு ரகசிய கேமரா உள்ளது என்று அர்த்தம்.
- தற்போது ரகசிய கேமராக்களை கண்டறிய பல மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. அவற்றின் மூலமாகவும் ரகசிய கேமரா உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்.
- பொதுவாக, நாம் அதிகம் கவனம் செலுத்தாத இடங்களில் தான் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும். உதாரணமாக அறையின் கதவுகள், மின்விளக்கு, ஹேங்கள், அலங்கார பொருட்கள், கடிகாரம் போன்ற இடங்களில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
8. பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க, பெற்றோர்கள் குழந்தையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். எல்லா பிரச்சனையையும், அவர்கள் உங்களிடம் கூறும் வகையில் சகஜமாக பழக வேண்டும். குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும். விவரம் அறியாத பிஞ்சு குழந்தைகள் கூட பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லித் தர வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களோ, அல்லது வெளி இடத்தில் யாரேனும் தவறாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ உடனடியாக தெரியப்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஏதேனும் ஒரு தற்காப்பு கலை பயிற்றுவிக்க வேண்டும்.
9. காவலன் செயலி
தமிழக காவல்துறை அறிமுகப்படுத்திய ‘காவலன்’ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலையில் இந்த செயலி கைகொடுக்கும். நாம் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், நாம் இருக்கும் இடம் பற்றிய தகவல் உடனடியாக காவல்துறைக்கு கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: கணவன் - மனைவிக்குள் சண்டை வர காரணமாக இருப்பவையும், அதற்கான தீர்வும்
இவற்றையும் நினைவில் கொள்ளுங்கள்
பணிபுரியும் இடத்தில், அல்லது பொது இடங்களில் யாரேனும் தவறான உள்நோக்கத்துடன் பேசினால், நடந்துக்கொண்டால் பயப்படாமல் தைரியமாக கையாள வேண்டும். உடனே, மேலிடத்தில் புகார் அளிக்க வேண்டும். செல்போனில் தொடர்பு கொண்டு தவறாக பேசினால், அல்லது வாட்ஸ் அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினால் சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும். கைப்பை அல்லது பர்ஸில் பெப்பர் ஸ்ப்ரே, கத்தி போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation