இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. வீடுகளில் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் பரிமாறும் ஒரு பண்டிகை இது. தீபாவளி என்று கூறினால் வீடுகளில் வண்ணமயமான கொண்டாட்டம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். பண்டிகை காலங்களில் வீட்டு வாசலில் அழகான கோலங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிப்பது பெண்களின் முக்கிய வேலை. நம் வீடுகளில் பயன்படுத்தும் கோலப் பொடியை பலரும் கடைகளில் வாங்குகிறார்கள். அந்த வரிசையில் வீட்டில் ரங்கோலி கோலம் போடுவதற்கு ஆர்கானிக் முறையில் வீட்டிலேயே கோலப் பொடியை தயாரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான விஷயம் இந்த கோலம். நம் முன்னோர் காலத்திலிருந்து பல வீடுகளின் வாசலில் கண்டிப்பாக காலையில் மற்றும் மாலை வேலைகளில் கோலம் போடுவது வழக்கம். ஒவ்வொரு நாளையும் துவங்குவதற்கு முன்பு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக கோலம் போடுவார்கள். ஒரு சிலர் இதனை தெய்வீகத்தின் சின்னமாக கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த அரிசி மாவில் கோலம் போடும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த அரிசி மாவில் கோலம் போடுவதால் சிறு உயிரினங்களான பூச்சிகள் எரும்புகள் மற்றும் குருவிகள் உண்ணும் வகையில் இது ஒரு உணவாக மாறுகிறது.
ஆனால் காலப்போக்கில் இந்த அரிசி மாவு கோலம் போடும் பழக்கம் மாறி கலர் மாவு கொண்டு கோலம் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த கலர் கோல பொடி முழுவதும் கெமிக்கல் தான். இந்த நிலையில் நம் வீட்டிலேயே அரிசி மாவால் தயாரிக்கும் கலர் கோலப் பொடியை செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
ஆர்கானிக் ரங்கோலி:
இந்த வருட தீபாவளிக்கு ஆர்கானிக் கலர் கோலப் பொடி பயன்படுத்தி உங்கள் வீட்டு வாசலில் ரங்கோலி செய்து பாருங்கள். இதற்கு தேவையான முக்கிய பொருள் பச்சரிசி மாவு. முதலில் இந்த பச்சரிசி மாவை கொண்டு வெள்ளை நிற கோலப்பொடியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். கோல பொடியை அரைப்பதற்கு முன்பு இந்த பச்சரிசியை நன்றாக தண்ணீரில் அலசி வெயிலில் காயவைத்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும். இப்போது இந்த வெள்ளை நிற கோலப்பொடியை உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் தயாரிக்கலாம்.
மஞ்சள் நிற கோலப்பொடி தயாரிக்க சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவை சம அளவில் எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதேபோல மாதுளம் பழ தோல், ஆரஞ்சு பழத்தோல், சாமந்திப் பூவின் இதழ்கள் மற்றும் கேரட் தோல்களை காய வைத்து அரைத்து எடுத்தால் ஆரஞ்சு நிற கலர் உங்களுக்கு கிடைக்கும். இதனை அரிசி மாவுடன் சேர்த்து ஆரஞ்சு கலர் கோலப்பொடியை தயாரிக்கலாம். அதேபோல உலர்ந்த ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேகரித்து அரைத்து சிவப்பு நிற கோலப்பொடியை தயாரிக்கலாம். மேலும் பச்சை நிறத்தில் கோலப்பொடி வேண்டுமென்றால் கீரை அல்லது கொத்தமல்லி இலைகளை நன்றாக உலர்த்தி பொடியாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து கொள்ளுங்கள். கருப்பு நிற கோலப்பொடி தயாரிக்க அடுப்பு கறியை நன்றாக தூளாக்கி அரிசி மாவுடன் சேர்த்தால் கருப்பு நிற கோலம் பொடி ரெடி. இதுபோல வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகள் வைத்து உங்களுக்கு பிடித்த ரங்கோலி கலர் பொடியை ஆர்கானிக் முறையில் தயாரித்து பாருங்கள்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation