காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான முதல் உணவாகும், ஏனெனில் இந்த உணவானது இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த நீண்ட இடைவெளியை முறித்து, அன்றைய தினத்தைத் தொடங்குவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகிறது.
ஆரோக்கியமான காலை உணவு என்பது ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. சராசரியாக 6-8 மணிநேர தூக்கத்திற்கு பிறகு, சாப்பிடாமல் இருந்தால் அந்நாளை தொடங்குவதற்கான ஆற்றலை உங்களால் பெற முடியாது.
சிலர் காலை உணவைத் தவறாமல் சாப்பிடுகின்றனர், ஆனால் சிலர் தாமதமாக எழுந்து, வேலைக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால், காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். நீங்களும் அப்படி செய்கிறீர்களா, காலை உணவைத் தவிர்ப்பதால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
பரபரப்பான வீட்டு வேலை மற்றும் அலுவலகம் செல்லும் அவசரத்தில் காலை உணவைப் பலரும் தவிர்க்கிறார்கள். இதனால், உடல் எடை அதிகரிப்பதோடு, தலைவலி, ஆற்றல் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
அதிகம் உட்கொள்ளல் மற்றும் எடை அதிகரிப்பு
காலை உணவைத் தவிர்த்தால், உடல் எடை குறையாது. மாறாக நாள் முழுவதும் பசியுடன் இருப்பதால், பசியை போக்க ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருப்போம். இந்நிலையில் உடல் எடையும் அதிகரிக்கிறது.நீங்கள் உடல் எடை குறைப்பதற்காகக் காலை உணவைத் தவிர்க்கிறீர்கள் என்றால், இந்தப் பழக்கம் உங்கள் உடல் எடை அதிகரித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எழுந்த சிறிது நேரத்திலேயே ஆற்றல் நிறைந்த, சத்தான காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு சாப்பிடுவது, நாள் முழுவதும் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி அதிகமாக சாப்பிடும் வாய்ப்பையும் குறைக்கிறது. இதன் மூலம் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து, சத்தான ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
எனவே, நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்கள் என்றால், சத்தான காலை உணவை சாப்பிடுவது தான் உடல் பருமனைத் தடுக்கும் ஒரே வழி.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு கெடுதல் உள்ளதா!!!
ஆற்றல் பற்றாக்குறை
காலை உணவைத் தவிர்த்தால் அடிக்கடி பசி எடுக்கும். இதனால் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிடும் சூழலும் உருவாகி விடும். இப்படிச் செய்வதால், நாள் முழுவதும் சோர்வாகவும், ஆற்றல் இல்லாமலும் உணர்வீர்கள். அதேசமயம் ஆரோக்கியமான காலை உணவை வழக்கமாக சாப்பிட்டால் இவ்வாறு நடக்காது.
எனவே, உங்கள் இரத்த சர்க்கரை, இன்சுலின் மற்றும் ஆற்றல் அளவை சீராக வைத்துக்கொள்ளத் தவறாமல் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுங்கள். காலை உணவு சாப்பிடுவது, உங்கள் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை மீட்டெடுத்து, தொடர்ந்து நாள் முழுவதும் செயல்படுவதற்கான ஆற்றலை மூளைக்கு வழங்குகிறது. காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்.
முடி உதிர்வை தூண்டுகிறது
காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்று முடி உதிர்தல். இது அனுபவபூர்வமாக நான் கண்டறிந்த உண்மையும் கூட. குறைந்த அளவு புரதத்தைக் கொண்ட உணவு உங்கள் கெரட்டின் அளவைப் பாதிக்கும், முடி வளர்ச்சியைத் தடுக்கும், மேலும் முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
அன்றைய நாளின் சிறந்த உணவான காலை உணவு, முடியின் வேர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே, உங்களுக்கு வலுவான கூந்தல் வேண்டுமென்றால், புரதச்சத்து நிறைந்த காலை உணவை தினமும் சாப்பிடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்! உங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!
ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
காலை உணவு நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுவதில் ஆச்சரியமில்லை.
காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி சத்தான காலை உணவை சாப்பிடுபவர்கள், தங்கள் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சரியாகப் பெறமுடியும். உங்கள் காலை உணவில் புரதம், முழு தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள பால், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொண்டால், அன்றைய நாளில் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி
காலை உணவைத் தவிர்த்தால், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் வரலாம். நாளின் முதல் உணவை சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவுகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த குறைந்த குளுக்கோஸ் அளவை ஈடுசெய்வதற்காக சில ஹார்மோன் வெளியீடு தூண்டப்படுகிறது. இதனால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது.
கிட்டத்தட்ட 12 மணி நேர இடைவெளிக்கு பிறகு நீங்கள் சாப்பிடும் முதல் உணவு என்பதால், காலை உணவைத் தவிர்க்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் தலைவலியை தவிர்க்க விரும்பினால், உங்கள் காலை உணவை மறக்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.
அதிகரிக்கும் பதற்றம்
அதிகரித்து வரும் மன அழுத்ததால் நீங்கள் சிரமத்துக்குள்ளாகி இருந்தால், தினமும் காலை உணவை சாப்பிடுங்கள். நம் உடல் மன அழுதத்துக்கு உள்ளாகும் போது, அண்ணீரகச் சுரப்பிகள் கார்ட்டிசால் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. காலை உணவை சாப்பிடுவது கார்ட்டிசாலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
காலை 7 மணிக்கு, கார்ட்டிசாலின் அளவு அதிகமாக இருக்கும். இவ்வாறு அதிகமாக இருக்கும்போது, நீங்கள் மிகவும் பதற்றமாக அல்லது எரிச்சலாக உணர்வீர்கள். ஆகையால் உங்கள் ஹார்மோன் அளவை சீராக வைத்திருக்க ஏதாவது சாப்பிடவேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தை குறைக்க உதவும் எளிய வழிகள்!!!
நல்ல ஆரோக்கியத்துடன் சரியான உடல் எடையைப் பராமரிப்பதில் அக்கறை உள்ளவர்கள் சத்தான காலை உணவை தவறாமல் சாப்பிடுங்கள். இதன் மூலம் பெரும்பாலான வாழ்க்கை முறை நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தினசரி வழக்கத்தில், காலை உணவு சாப்பிடுவதை இன்றியமையாத பகுதியாக மாற்றிடுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation