"காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா"
பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா பாடலில் இடம்பெறும் இந்த வரிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் பொருந்தும். இயற்கையின் விதிப்படி காலையில் எழுந்து அன்றாட வேலைகளை மாலைக்குள் முடித்து இரவில் தூங்கி உடலுக்கு ஓய்வளிப்பதே சிறந்த வாழ்க்கை முறையாகும். இரவுப் பணி அறிமுகமான பிறகு ஏற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பலருக்கும் உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.
பல துறைகளில் இரவுப்பணி என்பது சகஜமாகி விட்டாலும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இரவுப்பணியால் உடல்நலன் பாதிக்கப்படுமா ? இரவு பணிக்கும் அஜீரண பிரச்சினைக்கு தொடர்பு உள்ளதா ? இரவு பணிக்கு செல்லும் முன் என்ன உணவுகளை சாப்பிடலாம் என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் சூரியன் உதித்து மாலையில் சூரியன் மறைவதற்குள் உணவுகளை சாப்பிடுவதே இயல்பான பழக்கம் ஆகும். சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் நமது ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. இதனால் இரவு நேரத்தில் சாப்பிடுவது சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே நேரம் இரவு உணவில் சரியான அளவில் உட்கொண்டால் நமக்கு நன்மைளும் கிடைக்கும்.
பொதுவாக இரவு பணி செல்பவர்களுக்கு பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மற்ற மனிதர்களை விட இரவு பணி பார்பவர்களுக்கு 25 விழுக்காடு உடல் பருமன் வர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மற்ற மனிதர்களை விட தொப்பை வர 35 விழுக்காடு வாய்ப்பு அதிகம்.
சுழற்சி முறையில் இரவு பணி செய்பவர்களுக்கும், இரவுப் பணி மட்டுமே செய்பவர்களுக்கும் உடல் பருமன் வர வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. பல நிறுவனங்களில் சுழற்சி பணி என்ற பெயரில் திங்களன்று ஒரு ஷிப்ட், செவ்வாயன்று ஒரு ஷிப் என வெள்ளிக்கிழமை வரை வெவ்வெறு ஷிப்ட் போட்டு சனிக்கிழமை இரவு பணிக்கு மாற்றி ஞாயின்று விடுப்பு கொடுக்கிறார்கள். இது ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும். இரவு பணி செய்பவர்களின் உடலில் ட்ரை கிளிசரைட் கொழுப்பும் அதிகம் உள்ளது.
இரவு பணியில் இவ்வளவு பிரச்சினையா ? இரவு பணிக்கு செல்ல மறுத்தால் வேலை பறிபோகுமே என கவலைப்படுகிறீர்களா ? நமக்கு வேறு வழியில்லை. ஆனால் உணவுமுறைகளில் மாற்றம் செய்து முடிந்தவரை உடல்நலனை பாதுகாக்கலாம்.
மேலும் படிங்க நல்ல கண்பார்வைக்கு தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க!
வழக்கமாக நாம் சாப்பிடவுன் தூங்குவதில்லை. ஒன்பது மணிக்கு சாப்பிட்டால் பத்து மணிக்கு தூங்குகிறோம். மீண்டும் காலையில் எட்டு மணி அளவில் சாப்பிடுகிறோம். இதனிடையே 11 மணி நேரம் வயிறு காலியாக தான் இருக்கிறது. இரவு பணிக்கு செல்லும் போது இரவு எட்டு மணிக்கு டிபன், பத்து மணிக்கு டீ அல்லது காஃபி மீண்டும் 12 மணி அல்லது ஒரு மணி அளவில் டீ, காஃபியுடன் கொஞ்சம் தின்பண்டம், காலை ஐந்து மணி அளவில் வேலை செய்யும் நிறுவனம் கொடுக்கும் டீ காஃபி என இரவிலேயே ஏறக்குறைய இரண்டு முறை சாப்பிடுகிறோம். வீட்டிற்கு சென்றவுடன் எட்டு மணி அளவில் காலை உணவு சாப்பிடுகிறோம். இரவு பணிக்கு செல்லும் போதெல்லாம் வயிற்றில் எதாவது நிரப்பி கொண்டே இருக்கிறோம். இது தான் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.
கண் விழித்து வேலை பார்க்க முடியவில்லை. அதனால் சாப்பிட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது என நீங்கள் கூறலாம். இதில் மாற்றம் செய்யாவிட்டால் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்படும்.
இரவு பணிக்கு செல்வதாக இருந்தால் ஏழு அல்லது எட்டு மணிக்கே சாப்பிட்டு விடுங்கள். இரவு செல்வதாக இருந்தால் புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவும். புரதச்சத்து உணவுகள் உங்களை முழுமையாக உணரவைத்து பசியை கட்டுப்படுத்தும்.
சப்பாத்தி, முட்டை, சிக்கன் அல்லது சப்பாத்தி, சுண்டல், ஒரு கப் காய்கறி சாப்பிட்டு இரவு பணிக்கு செல்லுங்கள். மாவுச்சத்து உணவுகள் மூன்று மணி நேரத்திற்குள் செரிமானம் ஆகி பசி எடுக்கும். இரவு 12 மணியில் இருந்து காலை ஆறு மணி வரை சாப்பிடாமல் இருக்க புரத உணவுகளே சரியான தேர்வாகும்.
மேலும் படிங்க தொடர்ச்சியாக மூக்கடைப்பு ஏற்படுகிறதா ? வீட்டு வைத்தியத்தில் குணப்படுத்தலாம்
ஒரு வேளை பசி எடுத்தால் 10 மணி அளவில் இனிப்பு குறைவான பழங்கள், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகள் சாப்பிடலாம். இதையும் 30 கிராமுக்கு மேல் சாப்பிடாதீர்கள். தூக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை எனில் கடுங்காப்பி குடிக்கவும். கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலர் இரவு நேரத்தில் கூல் டிரிங்க் குடிக்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கம் ஆகும்.
முடிந்தவரை இரவு பணிக்கு செல்வதை தவிர்க்கவும். அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]