நவீன வாழ்க்கை முறையில், சூரியனால் ஏற்படும் பாதிப்பு முதல் மன அழுத்தம் வரை பல காரணங்களால் சருமம் மழுங்கிவிடுகிறது. இவை அனைத்தும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறிக்கின்றன. மேலும் இவை உங்கள் தன்னம்பிக்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே சரும சேதத்தை எதிர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ள உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.
உடல் உறுப்புகளில் மிகப் பெரிய பொக்கிஷமான சருமத்தை பராமரிக்க அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது போதாது. இயற்கையான பருவகால உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவது என அனைத்துமே ஒரு அங்கமாகும். முக அழகிற்கான யோகா ஒரு உணர்வுபூரணமான பயிற்சி. இது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் மாற்றும்.
இந்த பதிவும் உதவலாம்:மாதவிடாய் வலியை நொடியில் போக்கும் ஓமம் டீ
இந்த உடற்பயிற்சிகள் முகத்தை இலக்காகக் கொண்டவை. இவை சருமத்தை உறுதிப்படுத்தி, வயது முதிர்வின் அறிகுறிகளைக் குறைக்கின்றன. இதற்கான யோகாசனங்களை இப்பதிவில் படித்தறியலாம்...
நிபுணர் கருத்து
உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறீர்களா? செயற்கையானவற்றைத் தவிர்த்துவிட்டு யோகாவிற்கு மாறவேண்டிய நேரமிது என்று யோகா மற்றும் உடற்பயிற்சி நிபுணர் பிரியங்கா ஜி அவர்கள் குறிப்பிட்டிள்ளார்.
இதற்கு பின்வரும் 6 யோகாசனங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். இந்த யோகாசனங்களை செய்வது உச்சந்தலை மற்றும் முகப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, மேலும் இது இயற்கையாகவே சரும நிறத்தை மேம்படுத்துகிறது.
1. திரிகோனாசனம்
இந்த ஆசனம் மார்பு, நுரையீரல் மற்றும் இதயத்திற்கு நல்லது. இவை சருமத்திற்கு அதிக ஆக்ஸிஜனை வழங்கி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
செயல்முறை
- முதலில் உங்கள் கால்களைச் சற்று விலக்கி வைத்து நேராக நிற்கவும்.
- உங்கள் வலது குதிகாலை உட்புறமும், பாதத்தை வெளிப்புறமும் பார்க்கும்படி திருப்பி வைக்கவும்.
- இரண்டு குதிகால்களும் வரிசையாக இருக்க வேண்டும்.
- மூச்சை உள்ளிழுத்து உடம்பின் இடுப்பு பகுதியை வலது பக்கம் திருப்பவும்.
- இடது கையை நேராக மேலே உயர்த்தவும்.
- வலது கையை உங்கள் கணுக்கால், தாடை அல்லது பாயில் வசதிக்கேற்ப வைக்கலாம்.
- இதைச் செய்யும்போது, உங்கள் இடது உள்ளங்கையை நீங்கள் பார்க்கலாம்.
- ஒவ்வொரு சுவாசத்திலும் உங்கள் உடலுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.
2. உத்தனாசனம்
இது சரும செல்களுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. மேலும் பிரீ ரேடிக்கல்களால் ஏற்படக்கூடிய செல் சேதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
செயல்முறை
- இதைச் செய்ய முதலில் நேராக நிற்கவும்.
- உங்கள் இரு கைகளையும் இடுப்பில் வைக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்து முன்னோக்கி இடுப்பை வளைக்கவும்.
- இதை செய்யும்போது உங்கள் முழங்கால்களை வளைக்க கூடாது.
- பின்னர் உங்கள் கைகளால் கணுக்காலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- தலையைக் கீழே சாய்க்கவும்.
- இந்தத் தோரணையில் 15-30 வினாடிகள் வரை நிலையாக இருக்கவும்.
3. தனுராசனம்
தனுராசனம் வயிற்றுப் பகுதியில் தீவிரமான அழுத்தத்தை செலுத்துவதில் திறம்பட செயல்படுகிறது, இது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி உங்களுக்கு ஆரோக்கியமான பிரகாசத்தை வழங்கும்.
செயல்முறை
- உங்கள் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொண்டு தொடங்குங்கள்.
- கால்களை வளைத்து பின்னோக்கி நகர்ந்து கணுக்கால்களைப் பிடிக்கவும்.
- மூச்சை உள்ளிழுக்கும்போது மேல் உடலையும் கீழ் உடலையும் தரையிலிருந்து உயர்த்தவும்.
- மெதுவாகக் கீழ் தாடையை மேல்நோக்கி உயர்த்தவும்.
- மூச்சை வெளியேற்றியவுடன் இந்த தோரணையிலிருந்து வெளியேறலாம்.
- சில சுவாசங்களுக்கு ஓய்வெடுங்கள்.
- ஆசனத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு முறை திரும்ப செய்யவும்.
4. ஹலாசனம்
இயற்கையான முறையில் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற ஹலாசனம் உதவுகிறது. பளபளப்பான சருமத்திற்கு முக்கியமான செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் இந்த ஆசனம் உதவும்.
செயல்முறை
- இதைச் செய்ய உங்கள் முதுகு தரையை தொடும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் உள்ளங்கைகளை உடலுக்கு அருகில் தரையில் வைக்கவும்.
- வயிற்று தசைகளைப் பயன்படுத்தி கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
- உள்ளங்கைகளை தரையில் வழுவாக ஊனி, உயர்த்திய கால்களை மெதுவாகக் கீழ் இறக்கி தலைக்குப் பின்னால் இருக்கும் தரையை தொட அனுமதிக்கவும்.
- கால்விரல்கள் பின்னால் இருகக்கூடிய தரையைத் தொடும் வகையில் நடுத்தர மற்றும் கீழ் முதுகை தரையிலிருந்து தூக்கவும்.
- உள்ளங்கைகளை தரையில் தட்டையாக வைக்கவும்.
- உங்கள் வசதிக்கேற்ப உள்ளங்கைகளால் பின்புறத்தை ஆதரிக்கலாம்.
- சிறிது நேரம் இந்த தோரணையில் இருக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
5. சர்வாங்காசனம்
இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தின் அமைப்பையும், தன்மையையும் மேம்படுத்துகிறது.
செயல்முறை
- உங்கள் முதுகு தரையை தொடும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
- உடலின் பக்கவாட்டில் கைகளை வைக்கவும்.
- கால்களை மெதுவாகத் தரையிலிருந்து வானத்தை நோக்கித் தூக்கவும்.
- அடுத்ததாகத் தரையிலிருந்து மெதுவாக இடுப்பையும் மேலே தூக்கவும்.
- முன்பக்கத்தில் தரையிலிருக்கும் கைகளைத் தூக்கி, உங்கள் ஆதரவுக்காக உள்ளங்கைகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளவும்.
- தோள்கள், தலை, இடுப்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஒரு நேர் கோட்டைக் கொண்டு வர முயற்சிக்கவும்.
- மார்பில் கீழ் தாடையை தொட்டு, பாதங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கவும்.
- பிறகு பழைய நிலைக்குக்கு திரும்பவும்.
6. சவாசனம்
ஆழ்ந்த, தியானமான ஆசுவாச நிலையைக் கொண்டு செல்கிறது இந்த சவாசனம். இது திசுக்களை சரிசெய்து பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது.
செயல்முறை
- இதை செய்ய, முதலில் உங்கள் முதுகு தரையை தொடும்படி படுத்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் கால்களை வெளிப்புறமாக விரிக்கவும்.
- உடலின் அருகில் உங்கள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்.
- உள்ளங்கைகளை வானத்தை நோக்கித் திறந்து வைக்கவும்.
- கண்களை மூடிக்கொண்டு, உங்கள் முழு கவனத்தையும் சுவாசத்தில் செலுத்துங்கள்.
- இந்த நிலையில் 10-15 நிமிடங்கள் இருந்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation