herzindagi
do dindigul biryani recipe

திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

பலருக்கும் பிடித்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்முறையை இப்பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2022-12-22, 10:00 IST

“வரலாறு முக்கியம் அமைச்சரே” என்பது போல் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக்கு நீண்ட வரலாறு உள்ளது. திண்டுக்கலில் இருந்த நாகசாமி என்ற விவசாயி தொடங்கிய பிரியாணி கடை தான் திண்டுக்கல் தலப்பாகட்டி. முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் தான் பிரியாணி சமைக்கப்படும். அதை சாப்பிடுவதற்காகவே ஜனங்கள் முந்தி அடித்துச் செல்வார்கள். இதை மனதில் கொண்டு நாகசாமியின் மனைவி ஐடியா கொடுக்க, அதை வைத்து 4 மாதம் பிரியாணி செய்யப் பயிற்சி எடுத்து, திண்டுக்கல் ரத வீதியில் நாகசாமி ஆரம்பித்த சிறிய ஹோட்டல் தான் இப்போது உலகமெங்கும் கிட்டத்தட்ட 100 கிளைகளுக்கும் மேலாக வளர்ந்து ஆலமரமாக நிற்கிறது. நாகசாமியின் மறைவுக்கு பிறகு அவரது பேரன் தனபாலன் கடையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து இவ்வளவு தூரத்திற்கு கடையை நிறுத்தி இருக்கிறார்.

இதற்கு தலப்பாகட்டி என பெயர் வர காரணம் ஹோட்டலில் நாகசாமி தலையில் தலப்பா கட்டி அமர்ந்து இருப்பாராம். அதை பார்த்து மக்கள் வைத்த அடைமொழி தான் இப்போது திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியாக இயங்கி கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என உச்ச நட்சத்திரங்கள் பலரும் திண்டுக்கல் போனால் இந்த பிரியாணியை ருசி பார்க்காமல் திரும்பமாட்டார்களாம். இந்த பிரியாணியின் முக்கியமான ரகசியம் சுவை. சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியின் சுவை எல்லா கிளைகளிலும் ஒரே மாதிரி தான் இருக்கும். அது சென்னையில் இருக்கும் தலப்பாகட்டியில் சாப்பிட்டாலும் சரி, மதுரை, கோயம்புத்தூரில் சாப்பிட்டாலும் சரி சுவை மாறாது. இதற்கு காரணம் அவர்கள் அரைத்துப் பயன்படுத்தும் பிரியாணி மசாலா பொடி.

ஒருமுறை நீங்களும் மசாலா பொடி அரைத்து பிரியாணி செய்து பாருங்கள், சுவை அட்டகாசமாக இருக்கும். அப்படி செய்ய ஆசைப்படுபவர்களுக்காக இந்த பதிவில் திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்முறையை விவரிக்கிறோம்.

தேவையான பொருட்கள்

dindigul biryani easy recipe

  • சிக்கன் - ½ கிலோ
  • சீரக சம்பா அரிசி - 2 கப்
  • தனியா - 2 டீஸ்பூன்
  • மிளகு - ½ டீஸ்பூன்
  • சோம்பு - ½ டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 6-8
  • ஜாதிபத்திரி – 1
  • பிரியாணி இலை - 1
  • கிராம்பு - 10
  • ஏலக்காய் – 3

இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் - வீட்டிலேயே செய்வது எப்படி?

  • அண்ணாச்சி பூ- 1
  • கல்பாசி - 1
  • முந்திரி - சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - 200 கிராம்
  • பூண்டு பல் – 10-12
  • இஞ்சி துண்டு - 2
  • கொத்துமல்லி, புதினா - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - 4
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • தயிர் - 4 டீஸ்பூன்
  • தண்ணீர் - 4 கப்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை

step to do dindigul biryani recipe

  • முதலில் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிபத்திரி, பிரியாணி இலை, அண்ணாச்சி பூ, கல்பாசி, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை மிக்ஸி அல்லது அம்மியில் நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • பின்பு சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா இலைகளை மைய அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: வேற லெவல் டேஸ்டில் திருநெல்வேலி அல்வா! ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்!

  • பச்சை வாசனை போன பின்பு அரைத்த மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
  • இப்போது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
  • மசாலா வதங்கியதும் அதில் அலசி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து உப்பு போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • சிக்கன் வெந்து வரும் போது அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து வேக விடவும்.
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் குக்கரை மூடி சரியாக 10 நிமிடம் வேக விடவும்.
  • இப்போது குக்கரைத் திறந்து பார்த்தால் சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி தயார்.

நீங்களும் இந்த செய்முறையை பின்பற்றி திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்து பாருங்கள். வீடே மணக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]