herzindagi
pallipalayam chicken easy recipe tips

ஹோட்டல் ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் - வீட்டிலேயே செய்வது எப்படி?

நாம் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி வாங்கி சாப்பிடும் பள்ளிபாளையம் சிக்கனை வீட்டிலேயே செய்வது எப்படி?
Editorial
Updated:- 2022-12-09, 09:00 IST

தென்னிந்திய சமையலில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு பிரசித்தி பெற்றதாக இருக்கும். காரசாரமான உணவு என்றால் பலரும் ஆந்திரா உணவுகளைக் குறிப்பிடுவார்கள். ஆனால் ருசித்துப் பார்த்தால் தெரியும் ஆந்திரா காரத்தையும் நம்ம ஊரின் சில உணவுகள் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும். அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபியை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து செய்யப்படும் பள்ளிபாளையம் சிக்கனுக்கு தமிழ்நாட்டில் மவுசு அதிகம். பிராய்லர் அல்லது நாட்டு கோழி இரண்டிலும் இந்த ரெசிபியை செய்யலாம். நாட்டுக்கோழி என்றால் சுவை இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். பொதுவாக நம் வீடுகளில் சிக்கனை வைத்து பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் வறுவல் போன்ற ரெசிபிக்களை தான் அடிக்கடி செய்வோம். குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் நல்ல காரசாரமாக, வித்தியாசமாக சிக்கன் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக பள்ளிபாளையம் சிக்கனை வீட்டில் செய்து பார்க்கலாம்.

கொங்குநாட்டு ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் செய்முறையை இங்கே பகிர்கிறோம்.

தேவையான பொருட்கள்

pallipalayam chicken recipe

  • சிக்கன் - 500 கிராம்
  • தேங்காய் – 2 துண்டுகள்
  • காய்ந்த மிளகாய் – 10 கிராம்
  • சின்ன வெங்காயம் – 120 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • பூண்டு – 8 பல்
  • பச்சை மிளகாய் – 2
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்

செய்முறை

how to do pallipalayam chicken

  • முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு காய்ந்த சிவப்பு மிளகாயை இரண்டாகக் கிள்ளி அதில் இருக்கும் விதைகளை மட்டும் நீக்கி விடவும். விதைகள் இருந்தால் காரம் அதிகமாகத் தெரியும் என்பதால் விதைகளை எடுத்து விட்டு மிளகாயின் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அம்மியில் இடித்துக் கொள்ளவும். (மிக்ஸியிலும் இதை அரைத்துக் கொள்ளலாம்)

இந்த பதிவும் பயனளிக்கலாம்: கடை சுவையையே தோற்கடிக்கும் ஒரு சிக்கன் மசாலா! வீட்டிலேயே செய்வது எப்படி?


  • பின்பு அடுப்பில் இரும்பு கடாய் அல்லது மண் சட்டியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
  • இப்போது அதில் கடுகு சேர்த்து வெடித்ததும் சோம்பு, விதை எடுத்த காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து இளசான தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
  • இப்போது இடித்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கி அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.
  • சிக்கனில் மசாலா இறங்கும்படி நன்கு கலந்து விட்டு அதன் மேல் கொத்தமல்லியை தூவவும்.
  • இப்போது சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். சிக்கன் வெந்து வரும் போது தண்ணீர் விடும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது.
  • இறுதியாக, கடாய் அல்லது சட்டியை மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் தயார்.
  • இதை சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இந்த செய்முறையை பின்பற்றி நீங்களும் பள்ளிபாளையம் சிக்கன் செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]