jackfruit biryani recipe : ஊரே மணக்கும் கம கம பலாக்காய் பிரியாணி செய்முறை

அசைவ பிரியாணிகளுக்கு இணையான சுவை கொண்ட பலாக்காய் பிரியாணி எப்படி செய்வது என இங்கே பகிர்ந்துள்ளோம்

jackfruit biryani

பொங்கல் விடுமுறை எப்படி முடிந்தது என்பதே தெரியாதது போல அதற்குள் வார விடுமுறை வந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு சுவைமிக்க இனிப்பு உணவுகள் மற்றும் பலகாரங்களையே அதிகம் சாப்பிட்டு இருப்போம். காரசாரமான மசாலா கொண்ட பொருட்களை சாப்பிட்டு இருக்க வாய்ப்பு குறைவே. அதனால் வார விடுமுறையில் காரசாரமான உணவை சுவைத்து மகிழ கத்தல் பிரியாணி எனும் பலாக்காய் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கப் போகிறோம். இது சைவ பிரியாணி என்றாலும் கூட மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையாக இருக்கும். இதை செய்வதற்கு பேபி பலாக்காய் போதுமானது.

பலாக்காய் பிரியாணி செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்குமா என நீங்கள் சந்தேகிக்கலாம் ஆனால் இது ஒரு மணி நேரத்தில் தயாரிக்ககூடியது.

jackfruit

பலாக்காய் பிரியாணி செய்யத் தேவையானவை

  • பேபி பலாக்காய்
  • தண்ணீர்
  • நெய்
  • பிரிஞ்சி இலை
  • பட்டை
  • ஏலக்காய்
  • கிராம்பு
  • வெங்காயம்
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கரம் மசாலா
  • உப்பு
  • தயிர்
  • கொத்தமல்லி
  • புதினா
  • பாஸ்மதி அரிசி
  • குங்குமப் பூ
  • உப்பு
  • தாழம்பூ தண்ணீர்

கவனம் கொள்க

பிரியாணி செய்வதற்கு தரமான அரிசி, புதிய கொத்தமல்லி மற்றும் புதினா கட்டு பயன்படுத்தவும். அப்போது தான் பிரியாணியின் சுவை நன்றாக இருக்கும்.

சமைக்கும் முன்பாக பேபி பலாக்காயின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி விடவும். பலாக்காயை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 60 விழுக்காடு அளவிற்கு வேகவைக்கவும். ஏனென்றால் மீதி பலாக்காய் பிரியாணி மசாலா சமைக்கும் போது வெந்து விடும். அதனால் பலாக்காயை நாம் முழுவதுமாக வேக வைக்க போவதில்லை.

அதேநேரம் 350 கிராம் பாஸ்மதி அரிசியை பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு ஒரு தட்டையான கடாய், இரண்டு பெரிய பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். இதற்கான காரணம் நாம் பலாக்காய் தம் பிரியாணி தயாரிக்க போகிறோம்

பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் மசாலா தயாரிக்கும் போது நாம் சேர்க்கும் பொருட்கள் வெளியே தெறிக்க கூடாது.

மேலும் படிங்கChilli Bread Recipe : சுவையான மொறுமொறுப்பான சில்லி பிரட் செய்முறை

பலாக்காய் பிரியாணி செய்முறை

  • பெரிய பாத்திரத்தில் 150 மில்லி லிட்டர் நெய் ஊற்றி அது சூடான பிறகு பிரியாணிக்கு சுவை சேர்க்கும் இரண்டு பிரிஞ்சி இலை, இரண்டு பட்டை, நான்கு ஏலக்காய் மற்றும் நான்கு கிராம்பு சேர்த்து வறுக்கவும்
  • இவற்றை வறுக்கும் போது நல்ல நறுமணம் கிடைத்த பிறகு மூன்று மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி போடவும்
  • வெங்காயம் பொன்னிறத்திற்கு மாறியவுடன் ஐந்து ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அதாவது 50 கிராம் அளவிற்கு சேர்க்கவும்
  • இஞ்சி - பூண்டு விழுதின் பச்சை வாடை போன பிறகு ஐந்து பச்சை மிளகாய்களை கீறி போடவும்
  • இதன் பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை சிறிதாக வெட்டி பாத்திரத்தில் போட்டு வதக்கவும்
  • இவற்றுடன் முக்கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசலா தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நாம் இனி இந்த பிரியாணியில் உப்பு சேர்க்கப் போவதில்லை. இது தம் பிரியாணி என்பதால் பாஸ்மதி அரிசியை வேக வைக்கும் போதும், பிரியாணி மசாலா தயாரிக்கும் போதும் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
  • இதுவரை நாம் சேர்த்த பொருட்கள் நன்கு வதங்கிய பிறகு 200 மில்லி லிட்டர் தயிர் சேர்க்கவும்.
  • இதைத் தொடர்ந்து 60 விழுக்காடு அளவிற்கு வேகவைத்த பேபி பலாக்காய் துண்டுகளை போடுங்கள்
  • இந்த செய்முறையில் அடி பிடிக்காமல் இருக்க இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும்
  • தற்பொது ஒரு கை அளவிற்கு புதினா மற்றும் கொத்தமல்லி எடுத்து அதை தண்ணீரில் நன்கு கழுவி நறுக்கிய பிறகு பிரியாணி மசாலாவில் சேர்க்கவும்
  • எட்டு முதல் பத்து நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் பலாக்காய் வேக வேண்டும்
  • இந்த பாத்திரத்தை மூடி விடுங்கள். நமது கவனம் தற்போது பாஸ்மதி அரிசியின் பக்கம் இருக்க வேண்டும்.
  • பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அது சற்று சூடான பிறகு 350 கிராம் பாஸ்மதி அரிசியை போடுங்கள்.
  • இதற்கு அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். ஐந்து கிராம் குங்குமப் பூவையும் சேருங்கள்
  • 75 விழுக்காடு அளவுக்கு பாஸ்மதி அரிசியை வேக வைத்தால் போதும். அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்.
  • தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு பாஸ்மதி அரிசியை தனியே எடுத்து பலாக்காய் வெந்து விட்டதா என சோதித்து பார்த்து பாத்திரத்தில் போடுங்கள்.
  • இதனுடன் பத்து மில்லி தாழம்பூ தண்ணீர் சேருங்கள். இது பிரியாணியின் சுவையை மேலும் கூட்டும்.
  • தற்போது அடுப்பில் தட்டையான கடாய் அல்லது தோசைக்கல் வைத்து அதன் மேல் பிரியாணி மசாலா இருக்கும் பாத்திரத்தை வைக்கவும். அதன் மேல் மூடி போட்டு பாஸ்மதி அரிசி வேக வைக்க பயன்படுத்திய பாத்திரத்தை பிரியாணி மசாலா இருக்கும் பாத்திரத்தின் மேல் வைத்து பலாக்காய் தம் பிரியாணி செய்யத் தொடங்குங்கள்.
  • மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு சமையலை தொடருங்கள்.
  • தற்போது பாத்திரத்தை திறந்து பார்த்தால் பாஸ்மதி அரிசி எதிர்பார்த்தபடியே உதிரி உதிரியாக இருக்கும். அடியில் உள்ள மசாலாவை பாஸ்மதி அரிசி மீது போட்டால் சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி.

தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் இந்த வார விடுமுறை கொண்டாட்டமாக அமைந்திடும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP