herzindagi
image

Jaundice Causes and Symptoms in Tamil: மஞ்சள் காமாலை நோயின் முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

Jaundice Causes and Symptoms in Tamil: மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம். இது போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-13, 18:41 IST

Jaundice Causes and Symptoms in Tamil: மஞ்சள் காமாலை (Jaundice) என்பது ஒரு நோய் என்று சொல்வதை விட, உடலில் ஏற்படும் சில மாற்றங்களை குறிக்கும் ஒரு அறிகுறி. இந்த நிலை, நமது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை கொண்டு எளிதில் கண்டறியப்படுகிறது. இது ரத்தத்தில் பிலிரூபின் (Bilirubin) என்ற நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. பொதுவாக, கல்லீரல் இந்த பிலிரூபினை செயலாக்கி பித்த நீருடன் (bile) வெளியேற்றும். ஆனால், இந்த செயல்பாடு தடைபடும் போது, பிலிரூபின் ரத்தத்தில் அதிகரித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க: Triphala suranam benefits: திரிபலா சூரணம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

 

மஞ்சள் காமாலையின் முக்கிய அறிகுறிகள்:

 

காய்ச்சல், சோர்வு, குமட்டல்,

 

வயிற்றின் மேல் பகுதியில் வலி,

 

சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருத்தல்,

 

சருமம் மற்றும் கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல்.

Jaundice symptoms

 

மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில சமயங்களில், இவை தீவிரமான உடல்நல குறைபாடுகளை குறிப்பதாகவும் இருக்கலாம். அவற்றை இப்போது காண்போம்.

 

கல்லீரல் நோய்த்தொற்றுகள்:

 

ஹெபடைடிஸ் ஏ - ஈ போன்ற வைரஸ் தொற்றுகள் கல்லீரலை பாதித்து, அதன் செயல்பாட்டை தடுக்கும். இதனால், பிலிரூபினை செயலாக்க முடியாமல், அதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். கல்லீரல் வீக்கம், சிரோசிஸ் போன்ற பிற கல்லீரல் நோய்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

ரத்த சிவப்பணுக்களின் பாதிப்பு:

 

சில நேரங்களில், ரத்தச் சிவப்பணுக்கள் வேகமாக சிதைவடையும் (Haemolysis). இதனால் அதிக அளவில் பிலிரூபின் உற்பத்தியாகி, கல்லீரலால் அதை சமாளிக்க முடியாமல் போகும். இது தொற்றுநோய்கள், சில மருந்துகள் போன்றவற்றால் ஏற்படலாம்.

 

பித்த நாளத்தில் அடைப்பு:

 

பித்தப்பையில் உருவாகும் கற்கள், கட்டிகள் அல்லது பித்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் போன்றவை பித்த நீரின் இயல்பான ஓட்டத்தை தடுக்கலாம். இதனால் பிலிரூபின் ரத்தத்தில் தேங்கி, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.

Liver problem

 

மதுப்பழக்கம்:

 

அதிக அளவு மது அருந்துவது கல்லீரல் செல்களை பாதிக்கும். இது கல்லீரலின் திறனை குறைத்து, பிலிரூபினை முறையாக வெளியேற்ற முடியாமல் செய்யும். இதன் விளைவாக, கல்லீரல் சிரோசிஸ் போன்ற நாட்பட்ட நோய்கள் ஏற்பட்டு மஞ்சள் காமாலை வரும்.

 

பிற காரணிகள்:

 

அதிக அளவு மருந்துகள், நச்சு வேதிப்பொருட்களின் தாக்கம் போன்றவை கல்லீரலை சேதப்படுத்தலாம். மேலும், மரபணு கோளாறுகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் கூட பிலிரூபின் வளர்சிதை மாற்றத்தில் தலையிடலாம்.

 

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது தேவையற்றை சிக்கல்களை தடுக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]