கை நடுக்கம் என்பது பெரும்பாலும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் பிரச்சனைகளின் அறிகுறியாகவோ அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவாகவோ கருதப்படுகிறது. ஆனால், பல சூழல்களில் இதன் அடிப்படை காரணம் மிகவும் எளிமையானதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
குறிப்பாக, வைட்டமின் பி12, பி6, அல்லது பி1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடு கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற சமயங்களில், சரியான நேரத்தில் நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12, பி6, மற்றும் பி1 ஆகிய மூன்று வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உடலில் இந்த ஊட்டச்சத்துகள் குறையும் போது, நரம்புகள் பலவீனமடைந்து, நரம்பு தளர்ச்சி, உணர்வின்மை, பல சமயங்களில் கை நடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி12 குறைபாடு கை நடுக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த வைட்டமின் நரம்பு செல்களை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமானது. அதன் குறைபாடு, நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் சோர்வு, நடப்பதில் சிரமம் மற்றும் நடுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். அசைவ உணவுகளான இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் வைட்டமின் பி12 இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால், சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் மருந்துகளில் இருந்து இவற்றை பெற வேண்டிய சூழல் இருக்கிறது. அதன்படி, சைவ உணவுகளை உண்பவர்கள், செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் அல்லது நீண்டகாலமாக மருந்து உட்கொள்பவர்கள் இந்த வைட்டமின் குறைபாட்டினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும் 7 பழங்கள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே
வைட்டமின் பி6 குறைபாடும் கை நடுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். இந்த வைட்டமின் குறைபாடு கை நடுக்கம் மட்டுமின்றி, எரிச்சல், மன அழுத்தம் மற்றும் குழப்பம் போன்ற மனநல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இருப்பினும், அதிகப்படியான பி6 சப்ளிமெண்ட்டுகள் நரம்புகளை பாதுகாக்க உதவுவதற்கு பதிலாக, அவற்றை சேதப்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வாழைப்பழங்கள், கோழி, மீன், உருளைக்கிழங்கு மற்றும் தானியங்கள் ஆகியவை வைட்டமின் பி6 குறைபாட்டை தடுக்க உதவும்.
வைட்டமின் பி1 குறைபாடு, மது அருந்துபவர்களுக்கும் மற்றும் உடலில் சத்துகளை உறிந்து கொள்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கும் அதிகமாக காணப்படுகிறது. பி1 குறைபாடு அதிகமாகும் போது 'வெர்னிக் என்செபலோபதி' (Wernicke encephalopathy) என்ற நிலைக்கு வழிவகுக்கும். இதனால் குழப்பம் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நடுக்கம் ஆகியவை ஏற்படலாம். முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் கொழுப்பில்லாத இறைச்சி ஆகியவை இந்த அபாயங்களிலிருந்து இயற்கையாகவே பாதுகாக்க உதவுகின்றன.
கை நடுக்கத்தை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. மேலும், இதற்காக சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் வைட்டமின் குறைபாடு தான் இதற்கு காரணமா என்பதை கண்டறியலாம். அதன் பிறகு, உணவு மாற்றம் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் வாயிலாக நீண்டகால சிக்கல்களை தடுக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]