herzindagi
image

குளிர்காலத்தில் தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும்

குளிர்காலத்தில் சிலருக்கு தொண்டை வலி பாதிப்பு இருக்கும். இதனை கட்டுப்படுத்துவதற்காக எளிமையான 5 வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம். இவற்றை பின்பற்றுவதற்கும் மிக சுலபமாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-14, 14:57 IST

குளிர்காலம் நம்மில் பலருக்கு இதமான உணர்வை தந்தாலும், தொண்டையில் ஒருவித அரிப்பு, வலி, எரிச்சல் போன்ற உபாதைகளும் கூடவே வந்துவிடும். இந்தத் தொண்டை வலி (Sore Throat) சோர்வை அளிப்பதுடன், பேசுவதற்கும், உணவை விழுங்குவதற்கும் கஷ்டத்தை கொடுக்கும். இதற்காக மருத்துவரை அணுகி சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் பலர் இருக்கின்றனர். எனினும், வீட்டு வைத்திய முறையில் இதற்கு தீர்வு காண முடியுமா என்று சிந்திப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

அதன்படி, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி இதற்கு நம்மால் தீர்வு காண முடியும். குறிப்பாக, தொண்டை வலி ஆரம்ப நிலையில் இருந்தால் இந்த வழிமுறைகள் நிச்சயம் பலன் அளிக்கும் வகையில் இருக்கும். ஏனெனில், இதில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனடிப்படையில், தொண்டை வலிக்கான வீட்டு வைத்திய முறைகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: Benefits of tulsi water: தினமும் காலையில் துளசி நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

 

தேன்:

 

தொண்டையில் ஏற்படும் அந்த எரிச்சல் போன்ற உணர்வுக்கு ஒரு ஸ்பூன் தேன் அல்லது ஒரு கோப்பை சூடான தேன் கலந்த தேநீர் அருந்துவது ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். தேன் இயற்கையாகவே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இது தொண்டையில் ஏற்பட்டுள்ள அழற்சியை கட்டுப்படுத்தி, வலி மற்றும் எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேன் ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.

Honey

 

உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தல் (Saltwater Gargle):

 

இது காலங்காலமாக பின்பற்றப்படும் மிகவும் நம்பகமான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாகும். அரை டீஸ்பூன் உப்பை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதை பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும். உப்பு நீர் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது, சளியை தனியாக பிரிக்கிறது, அத்துடன் தொண்டை பகுதியில் ஏற்படக் கூடிய தொற்றுகளை தடுக்கவும் உதவுகிறது. இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்வது நல்லது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான உணவுகள்; இவற்றை தவிர்ப்பது உடலுக்கு நல்லது

 

மஞ்சள் பால்:


மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற மூலப்பொருள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே, இரவில் தூங்குவதற்கு முன் சூடான பாலுடன் மஞ்சள் கலந்து பருகுவது தொண்டை வலிக்கு மிகச் சிறந்த தீர்வாகும். இதன் சுவையும் மருந்து போன்று அல்லாமல் ஒரு புத்துணர்ச்சி பானம் போன்று இருப்பதால் பலராலும் இது விரும்பப்படுகிறது.

Turmeric milk

 

புதினாவின் பங்களிப்பு:

 

புத்துணர்ச்சியான தன்மையை விரும்பும் அனைவருக்கும் நிச்சயம் புதினா மிகவும் பிடித்ததாக இருக்கும். புதினா கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் தொண்டையை குளிர்வித்து, மூக்கடைப்பை போக்க உதவுகிறது. காய்ந்த புதினா இலைகளை சூடான நீரில் சேர்த்து, பின்னர் அதை வடிகட்டி, நிதானமாக பருகலாம். இது தொண்டை வலியை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கும். இது ஒரு எளிதான முறையாகும்.

 

வெதுவெதுப்பான மூலிகை தேநீர்:

 

இஞ்சியினால் தயரிக்கப்படும் தேநீர் அல்லது கிரீன் டீ (Green Tea) ஆகியவை தொண்டைக்கு இதமளிக்கவும், உங்கள் உடலை நீர்ச்சத்துடன் (Hydrated) வைத்திருக்கவும் ஒரு சிறந்த தேர்வாகும். இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் தொண்டை அழற்சியை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் விரைவான நிவாரணத்தை வழங்குகின்றன.

 

கூடுதல் பலன் தரும் செயல்முறை:

 

இவற்றை எடுத்துக் கொள்ளும் போது கூடுதலாக, வெந்நீரில் ஆவி பிடிப்பது தொண்டையின் வறட்சியை நீக்கி, அழற்சியை குறைத்து, வலியை கட்டுப்படுத்தும். இதன் காரணமாக தொண்டை வலி விரைந்து குணமடையும். இவற்றை பின்பற்றும் போது கூடுமானவரை ஓய்வாக இருந்தால் விரைவான பலன்களை காணலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]