ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களில் தசைகள் அதிகமாக வலிக்கும். பாடி பில்டிங் செய்யும் ஆசை இருந்தால் தசையை அதிகரிக்க புரோட்டீன் பவுடர் சாப்பிட அறிவுறுத்துவார்கள். புரோட்டீன் பவுடர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி உள்ள நிலையில் சாதாரண மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை, புரத குறைப்பாடு இருந்தால் உணவுப் பழக்கத்தின் மூலம் அவற்றை அதிகரிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கடைகளில் புரோட்டீன் பவுடர் வாங்கச் சென்றால் அதிக விலை சொல்கிறார்களே வாங்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் நமக்கு ஏற்படும். எனவே மலிவான விலையில் கிடைக்கும் புரதங்களை பற்றி பார்ப்போம். தினமும் ஒரு நபர் தனது எடைக்கு ஏற்ப புரத உணவு எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் 70 கிலோ எடை கொண்ட நபர் என்றால் 70 கிராம் புரதம் தேவை. இந்த 70 கிராம் புரதமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே கிடைத்துவிடும்.
பருப்புகள் மட்டுமல்ல நாம் சாப்பிடும் தானியங்களிலும் புரதம் இருக்கிறது. பருப்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடும் நபராக இருந்து 150 மில்லி லிட்டர் பால் குடிப்பவராக இருந்தால் இவற்றிலேயே 40 கிராம் புரதம் கிடைக்கும். இவையெல்லாம் அடிப்படை புரதங்கள்.
இதைவிட சிலருக்கு அதிக புரதங்கள் தேவைப்படலாம். உதாரணமாக கர்ப்பிணிகள். 60 கிலோ எடை உள்ள கர்ப்பிணிக்கு 90 கிராம் புரதம் தேவை. உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் நபராக இருந்தால் புரதம் அதிகம் தேவைப்படும். அதே போல விளையாட்டு துறையில் உள்ள நபர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபடுவோருக்கு அதிக புரதம் தேவை. அதாவது 60 கிலோ உடல் எடை என்றால் தினமும் 120 கிராம் புரதம் தேவை.
மேலும் படிங்க நீண்ட ஆயுளுக்கு உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து உணவுகள்
ஒரு முட்டையில் ஆறு கிராம் புரதம் உள்ளது. ஏற்கெனவே வழக்கமான உணவுகள் மூலம் 40 கிராம் புரதம் கிடைக்கும் நிலையில் மூன்று முதல் ஐந்து முட்டை சேர்த்து சாப்பிட்டால் 30 கிராம் புரதம் வரை கிடைக்கும். ஐந்து முட்டைக்கு மேல் சாப்பிட்டால் வாயு கோளாறு வரும்.
100 கிராம் அசைவத்தில் 25 கிராம் புரதம் இருக்கிறது. 200 கிராம் கோழிக்கறி சாப்பிட்டால் எளிதாக 50 கிராம் புரதம் கிடைத்துவிடும். முழுக்க சைவம் சாப்பிடும் நபராக இருந்தால் 500 கிராம் அளவிற்கு சுண்டல், பருப்பு வகைகள் சாப்பிட்டால் மட்டுமே 100 கிராம் புரதம் கிடைக்கும். அதிலும் சுண்டல், பருப்பு வகைகளை வேக வைத்தால் புரதச் சத்து பாதியாக குறையும்.
100 கிராம் பன்னீரில் 25 கிராம் புரதம் இருக்கிறது. அதேபோல சோயா மீல் மேக்கர் 100 கிராமில் 50 கிராம் புரதம் உள்ளது. சோயா அதிகம் சாப்பிட்டால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சோயா அதிகம் சாப்பிடாதீர்கள்.
மேலும் படிங்க பருவகால மாற்றத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்
வழக்கமான உணவுபழக்கத்தில் 40 கிராம் புரதம் கிடைத்துவிடுவதால் இரண்டு முட்டை, சோயா மீல் மேக்கர் உட்கொண்டு 100 கிராம் புரத அளவை எட்டலாம். அசைவ பிரியராக இருந்தால் சிக்கன், மீன் சாப்பிட்டு அதிக புரதம் எடுத்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]