பல வேலைகளை செய்வதில் கில்லாடிகள் பெண்கள். வீட்டு சமையல் வேலை தொடங்கி அலுவலக வேலை வரை பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் முழு ஈடுபாடும் அக்கறையும் இருக்கும். ஆனால் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில், பலரும் தங்களுடைய ஆரோக்கியத்தை சமரசம் செய்கிறார்கள். கடமையை நிறைவேற்ற ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, சரியான உணவையும் எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள். இதனால் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்க தொடங்குகிறது.
பெண்கள் 30 வயதை கடந்து விட்டால் அவர்களுடைய உடல் எடையை குறைப்பது சற்று கடினமாக இருக்கலாம். ஏனெனில் இந்த குறிப்பிட்ட வயதில் ஒரு பெண்ணினுடைய வளர்ச்சிதை மாற்றம் மெதுவாக செயல்பட தொடங்குகிறது. இதனால் கொழுப்பை எரிக்கும் செயல்முறையும் தாமதமாகும். மேலும் இந்த காலகட்டத்தில் இருக்கக்கூடிய மன அழுத்தத்தால் உடல் எடையும் தொடர்ந்து அதிகரிக்கலாம். அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்…
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 5 நிமிடங்கள் செய்தால் போதும், கழுத்து சதையை விரைவில் குறைத்திடலாம்!
30 வயதிற்கு உடலில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும் ஆகையால் உங்களுடைய புரத உட்கொள்ளலை அதிகரித்து கொள்ளலாம். இதனால் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பை வேகமாக எரிக்கலாம். மேலும் இது போன்ற உணவுகளை சாப்பிடும் பொழுது, அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்காது. முடிந்தவரை புரதம் நிறைந்த காலை உணவை சாப்பிடுங்கள்.
உணவு அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் பானத்தில் அதிகமாக சர்க்கரை சேர்பவரராக இருந்தால், இந்த பழக்கத்தை கைவிடுங்கள். அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வதால் அழற்சி, உடல் பருமன், புற்றுநோய் போன்ற பல மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். போதுமானவரை சர்க்கரை உட்கொள்ளலை குறைத்துக் கொள்ளுங்கள்.
உணவை சிறிய பகுதிகளாக பலமுறை சாப்பிடும் படி ஊட்டச்சத்து நிபுணரான மஞ்சரி அவர்கள் பரிந்துரை செய்கிறார். 30 வயதில் உள்ள பெண்கள் ஒரு நாளைக்கு 5 சிறிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்
உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்தமான நடனம், நீச்சல், சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளையும் செய்யலாம். குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்கவும். உங்களுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படலாம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தண்ணீர் குடிக்க ஒரு போதும் மறக்காதீர்கள். இது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது.
இப்போது பல வகையான ஃபிட்னஸ் செயலிகள் உள்ளன. நீங்கள் எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள், எவ்வளவு கொழுப்பை குறைத்துள்ளீர்கள் போன்ற விவரங்களை இந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பயன் தரக்கூடிய இது போன்ற ஒரு செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கும் பொழுது அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது உண்மைதான், இருப்பினும் உடலின் செயல்பாட்டிற்கு கடினமான கார்போஹைட்ரேட்டுகளும் நல்ல கொழுப்புகளும் அத்தியாவசியமானவை. ஆகையால் புரத உணவுகள் மீது அதிக கவனம் செலுத்தாமல், அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
பசியுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர் மஞ்சரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். இதனால் வயிற்றில் அமிலம் உருவாகலாம். இதை தவிர்க்க நல்ல ஆரோக்கியமான சீரான காலை உணவை சாப்பிடுங்கள்.
ஒரு சில பெண்கள் இரவு உணவிற்கு பிறகு உடனே தூங்கி விடுவார்கள். இதற்கு உடல் அசதியும் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் தூங்கப் போகும் நேரத்திற்கு 2-3 மணி நேரங்களுக்கு முன்பு இரவு உணவை சாப்பிடுங்கள். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பாலும் பழமும், இந்த காம்பினேஷன் உண்மையில் ஆரோக்கியமானது தானா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]