ராமநாதரபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அருகே குந்துகால் கடற்கரை உள்ளது. இந்த இடத்தை உள்ளூர்வாசிகள் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். குந்துகால் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் படகில் பயணித்தால் குருசடை தீவை அடையலாம். தென் தமிழகத்திற்கு சுற்றுலா செல்லும் நபர்கள் இந்த தீவை கட்டாயம் தவறவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை குருசடை தீவு பயணத்தில் நீங்கள் பார்க்க முடியும். குருசடை தீவு பயண விவரம், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குருசடை தீவு சுற்றுலா
குருசடை தீவு சுற்றுலா திட்டமானது தமிழக வனத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலாவை மேற்கொள்ள நீங்கள் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் பாலம் செல்லும் வழியில் 14 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அங்கு குந்துகால் கடற்கரை வரும். குந்துகால் கடற்கரை செல்வதற்கு பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. குந்துகால் கடற்கரை சென்ற பிறகு கட்டணம் செலுத்தி குருசடை தீவுக்கு படகில் பயணிக்கலாம்.
குருசடை தீவு கட்டணம்
இந்த குருசடை தீவு மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளில் ஒன்றாகும். குருசடை தீவு மன்னார் வளைகுடாவில் இரண்டாம் தீவு என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். குருசடை தீவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வனத்துறையால் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை உள்ளூர் படகோட்டிகள், மீன்பிடிப்பவர்கள் சென்று வந்துள்ளனர். குருசடை தீவுக்கு செவ்வாய்கிழமை தவிர்த்து மீதி ஆறு நாட்களுக்கும் படகில் சுற்றுலா செல்லலாம். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே குருசடை தீவு பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு தலா 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிங்க மதுரைவாசிகளே ரெடி ஆகுங்க... ரூ.3 கோடி செலவில் தயாராகும் குட்லாடம்பட்டி அருவி! உற்சாக குளியல் போடலாம்....
குருசடை தீவு சுற்றுலா விவரம்
நீங்கள் அழைத்துச் செல்லப்படும் மோட்டார் படகில் 10 பேர் அமரும் வசதியுண்டு. இதன் காரணமாக 10 பேருக்கான கட்டணம் வசூலித்த பிறகே பயணம் தொடங்கும். ஆட்கள் குறைவாக இருந்தால் இரட்டிப்பு கட்டணம் செலுத்த நேரிடும் அல்லது ஆட்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். குந்துகால் கடற்கரையில் இருந்து மோட்டார் படகில் பயணித்து குருசடை தீவை அடைவீர்கள்.
குருசடை தீவில் டால்பின்கள்
பயணிக்கும் வழியில் தண்ணீருக்கு அடியில் வண்ண வண்ண மீன்கள், பவள பாறைகள் தென்படும். மிதக்கும் பவள பாறைகளையும் காணலாம். குருசடை தீவின் நுழைவுவாயிலில் திமிங்கலம், சுறா, ஆமை, டால்பின்களின் மண்டை ஓடுகள் காட்சிபடுத்தப்பட்டு இருக்கும். இந்த தீவை நீங்கள் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்கலாம். உங்களுடன் வனத்துறை வழிகாட்டி ஒருவர் வருவார். உள்ளே செல்லும் பாதையில் எண்ணற்ற தாவரங்கள் வளர்ந்து கிடக்கும். பச்சை பசேலென இருந்தாலும் எரியக்கூடிய செடிகளை காண்பிப்பார்கள். தீவிற்குள் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கடல் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு நீண்ட காலமாக பதப்படுத்தப்பட்டு வரும் கடல் வாழ் உயிரினங்களை காணலாம்.
தீவின் மறுபகுதிக்கு வந்த பிறகு டால்பின்கள் சுற்றித் திரியும் இடங்களை பார்க்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனடியாக டால்பின்கள் தென்படும். அந்த இடம் அந்தமான் தீவு, மாலத் தீவு, லட்சத் தீவில் நிற்பது போன்ற அனுபவத்தை தரும். மழை, புயல், கடல் கொந்தளிப்பு போன்ற சமயங்களில் இந்த தீவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும் இந்திய கடற்படையின் படகுகள், தமிழக கடலோர காவல்படை படகுகளை பார்க்க இயலும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation