First Transwoman Professor: இந்தியாவின் முதல் PhD படித்த திருநங்கை; ஆங்கில பேராசிரியர் ஜென்சி சிறப்பு பேட்டி

திருநங்கை டாக்டர் ஜென்சி ஆங்கில மொழியில் பிஹெச்டி படித்து தற்போது சென்னை லயோலா கல்லூரியில் உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
image

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை கல்வி என்ற பொன்மொழிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒருவரின் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியம் என்று அதை இந்த உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார் திருநங்கை ஜென்சி. இவர் ஆங்கில மொழியில் Phd படிப்பை முடித்த இந்தியாவின் முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை புதுரை சேர்ந்தவர் திருநங்கை ஜென்சி. இவர் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்து, திருநங்கைகள் படும் துயரங்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று பிஹெச்டி படித்து முடித்து தற்போது சென்னை லயோலா கல்லூரியில் உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் லயோலா கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியர் திருநங்கை ஜென்சி அவர்கள் நமது ஹெர் ஜிந்தகி குழுவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

நீங்கள் மூன்றாம் பாலினத்தவர் என நீங்கள் உணர்ந்து அதை வெளிப்படுத்திய போது குடும்பத்தினர் எப்படி அதை ஏற்றுக்கொண்டனர்?


எனக்கு சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா கிடையாது. என் அக்கா தான் என்ன வளர்த்தது எல்லாமே. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்கு நான் ஒரு திருநங்கை தான் என்று மனசுக்குள் தோணுச்சு. எனக்கு நான் ஒரு பெண் அப்படி என்ற ஃபீலிங்ஸ் அதிகமாக இருக்கும், ஆனால் என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் என்னை "நீ ஏன் இப்படி பொம்பள மாதிரி பேசுற? பொம்பள மாதிரி நடக்கிற? பொம்பள மாதிரி இருக்கன்னு?" எல்லாருமே குறையாக பேசிட்டே இருந்தாங்க. அதை நினைத்து பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அந்த மாதிரி இருக்கும்போது அதுக்காக நான் என்னை கொஞ்சம் கண்ட்ரோலா வச்சுக்கிட்டேன். நிறைய நாட்கள் ஆம்பள மாதிரி நடக்கணும், ஆம்பள மாதிரி பேசணும் அப்படின்னு ட்ரை பண்ணி இருக்கேன், ஆனால் அது முடியல. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அந்த மாதிரி இருக்கவே முடியல. அதுக்கு அப்புறம் தான் நான் ஒரு திருநங்கை என்று ஓபனாக எல்லாருக்கும் சொன்னேன். அப்படி சொல்லும் போது எல்லா வீட்டிலயும் அடிச்சி அழுது புலம்பற மாதிரி என் அக்காவும் ரொம்ப புலம்புனாங்க. அதுக்கு அப்புறம் அவங்க ஏத்துக்கிட்டாங்க.

10947642 (4)

நீங்க படிச்சது எல்லாம் சென்னை தானா?


தமிழ்நாட்டுல ஒரு சின்ன கிராமம் ஆர்கே பேட்டை புதூர். இதுதான் என்னுடைய ஊரு. இங்க தான் என்னுடைய பள்ளி படிப்பு எல்லாம் படித்தேன்.ஒன்னாவது இருந்து பத்தாவது வரைக்கும் அரசு பள்ளியில் தான் தமிழ் மீடியத்துல படிச்சேன். அதுக்கு அப்புறமா பி.ஏ இங்கிலீஷ் திருத்தணி பக்கத்துல ஒரு காலேஜ், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினர் கலை கல்லூரியில் தான் B.a படிச்சேன் M.a மற்றும் M.phil டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி வியாசர்பாடி. நான் B.a மற்றும் M.a படிப்பிலும் கோல்ட் மெடலிஸ்ட்.


தமிழ் மீடியம் பள்ளியில் படித்து இருக்கீங்க, ஆனா அதுக்கு அப்புறம் ஆங்கிலம் ஒரு மேஜர் சப்ஜெக்ட்டா தேர்ந்தெடுத்து படித்த காரணம் என்ன?


நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது கிளாஸ் பஸ்ட் ஆக இருந்தாலும், இங்கிலீஷ் மட்டும் ரொம்ப கம்மியான மார்க், ஏன்னா எங்களுக்கு இங்கிலீஷ் டீச்சர் கிடையாது. ஆசிரியர் ஆக வேண்டும் என்று நான் பத்தாவது படிக்கும்போதே முடிவு செய்து விட்டேன். ஆனால் இந்த 12வது எக்ஸாம் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான் இங்கிலீஷ்ல கம்மியா மார்க் இருக்கு, அப்படி இதுல என்ன தான் இருக்கு நாம பாக்கணும் என்பதற்காகவே இங்கிலீஷ் எடுத்து படிச்சேன்.

நீங்க கல்லூரி படிப்பு படிக்கும்போது நீங்க சந்தித்த கஷ்டங்கள் என்ன?


முதலில் ரொம்பவே கஷ்டம் இருந்தது. டாக்டர் சத்யபிரியா மேம் அவங்க என்னோட கல்லூரி ஹச்ஓடி அவங்ககிட்ட போய் என்னை டிபார்ட்மெண்ட் மாத்துங்க அப்படின்னு சொன்னேன், அந்த டைம்ல அவங்க சொன்னாங்க நீங்க ஒரு செமஸ்டர் அட்டென்ட் பண்ணுங்க, அதுக்கு அப்புறமா நீங்க வந்து சொல்லுங்க. அதே மாதிரி ஒரு செமஸ்டர் அட்டென்ட் பண்ணும் போது பார்த்தா என் வகுப்பில் இருந்த 58 பேரில் நான் மட்டும்தான் பாஸ் ஆகி இருந்தேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் நான் அந்த இடத்தை விடவே கூடாது என்பதற்காக நான் தான் எப்பவுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட். அதுக்கு அப்புறம் டிகிரி முடிக்கும்போது கோல்ட் மெடல் வாங்கிட்டேன்.

WhatsApp Image 2025-06-24 at 21.48.30

பல துறைகள் இருந்தும், நீங்க ஏன் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்தீங்க?


சின்ன வயசுல இருந்தே இதுதான் எனக்கு ஆசை. அதாவது சின்ன சின்ன பசங்க பக்கத்து வீட்டு பசங்க எல்லாம் கூட்டிட்டு வந்து அவங்களுக்கு எல்லாம் நான் ஃப்ரீயாக பாடம் சொல்லித் தருவேன். அப்போ இருந்தே நான் ஒரு திருநங்கை பேராசிரியராக வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். அதனால தான் 12 ஆம் வகுப்புக்கு அப்புறம் இங்கிலீஷ் தேர்ந்தெடுத்து படித்தேன்.


உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது இருக்காங்களா?


நான் படித்த பள்ளி, கல்லூரி எல்லாமே எனக்கு புடிச்ச ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க. டாக்டர் தேவி கமலா மேம், டாக்டர் பிரபு சார், டாக்டர் ஏஞ்சலின் மேம், அதுக்கு அப்புறம் டாக்டர் சாதனா மேம், ஏற்கனவே நான் சொன்ன டாக்டர் சத்திய பிரியா மேம். இவங்க எல்லாமே என்னுடைய ஃபேவரட் டீச்சர்ஸ் தான். இன்னும் கூட சில ஆசிரியர்கள் எனக்கு பிடிக்கும். அவர்கள் பெயரையும் சொல்லணும் என்று ஆசைப்படுகிறேன். அனந்தலட்சுமி மேம், அலெக்சாண்டர் சார், ஸ்ரீலட்சுமி மேம், பிரியா மேம், சுதா மேம் இவங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

transwoman jency

யாரை முன்மாதிரியாக கொண்டு வாழ்க்கையில் பயணிக்கிறீர்கள் ?


என்னோட வாழ்க்கையில் என்னோட பேராசிரியர்கள் தான் பெரிய ரோல் மாடல்கள். ஆனால் இப்போதைக்கு என்னுடைய guide டாக்டர் பி.மேரி வித்யா பொற்ச்செல்வி என்னுடைய ரோல் மாடலாக உள்ளார். இவங்க லயோலா கல்லூரியில் ஆங்கில டிபார்ட்மெண்ட் HOD. அவங்களோட பொறுமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்க ரொம்ப பொறுமையானவங்க. கோபமே பட மாட்டாங்க, சில கல்லூரிகளில் நிறைய ஆசிரியர்கள் பணத்தை வாங்கி படிக்க சொல்லுவாங்க, ஆனா இவங்க எனக்கு மாதம் 2000 ரூபாய் கொடுத்து படிக்க வச்சாங்க. இவர்களிடமிருந்து நானும் பொறுமையை கத்துக்கணும் என்று நினைக்கிறேன்.

jency

லயோலா கல்லூரியில் ஆசிரியராக முதல் நாள் அனுபவம் எப்படி இருக்கு?


இந்திய அளவில் ஆங்கில துறையில் பிஹச்டி படித்த உதவி பேராசிரியர் முதல் திருநங்கை நான்தான். கல்லூரிக்கு சென்ற முதல் நாள் அனுபவம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப பெருமையா இருக்கு ஆனா இது முழுமை அடையாமல் இருக்கு என்று தான் சொல்லுவேன். ஏன்னா எப்போ நான் அரசு கல்லூரியில் நிரந்தர பணியில் உதவி பேராசிரியராக இருக்கேனோ அது என்னுடைய வளர்ச்சி மட்டும் இல்லை என்னுடைய சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் பார்க்கிறேன். அதுதான் நான் கஷ்டப்பட்டு படித்ததற்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும். லயோலா காலேஜ் மாதிரியானகல்லூரிகளில் வசதியான வீட்டு பிள்ளைகள் மட்டும்தான் வந்து படிப்பார்கள். ஆனால் எனக்கு அரசு கல்லூரியில் சேர்ந்து கஷ்டப்படும் வீட்டு பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தர வேண்டும் என்றுதான் ஆசை.

மேலும் படிக்க: Actress Malvi Malhotra Exclusive: தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு பெருமை, ஜென்ம நட்சத்திரம் பட நடிகை மாள்வி மல்ஹோத்ரா சிறப்பு பேட்டி

மூன்றாம் பாலினத்தவருக்கு இன்னும் எந்தெந்த விஷயங்களில் அரசு சலுகை தர விரும்புகிறீர்கள்?


அரசு எங்களுக்கு முதலில் ரிசர்வேஷன் கொடுக்கணும். ரிசர்வேஷன் இல்லாம நாங்க எந்த டிபார்ட்மெண்ட்க்கும் போக முடியாது. இப்போது நான் குவாலிஃபைடாக இருக்கிறேன், பிஎச்டி முடிச்சிருக்கேன். ஆனால் எனக்கு ஒரு அரசு கல்லூரியில் சேர முடியாது. இதை நான் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். எனக்கு அப்பா அம்மாவே கிடையாது. தமிழக முதல்வர் சமூக நீதியை பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. ஒரு திருநங்கைக்கு ஒரு அரசு கல்லூரியில் ஆங்கில டிபார்ட்மெண்டில் உதவி பேராசிரியர் பணி நிரந்தரம் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும். அதிலும் கருணையின் அடிப்படையில் தான் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த தருணம் பற்றி ஒரு சில வார்த்தைகள்?


ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரை நான் நேரில் பார்த்த உடனே அப்பா என்று தான் கூறினேன். அவரிடமும் இந்த கோரிக்கை தான் வைத்துள்ளேன். "எங்களுக்கு ரிசர்வேஷன் கொடுக்க வேண்டும், கருணை அடிப்படையில் ஆவது ரிசர்வேஷன் கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறேன். ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த பிறகு என்னால் முடிந்த பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவி செய்யணும் என்பது என்னுடைய கனவு.

WhatsApp Image 2025-06-24 at 21.45.55

படம் பார்க்கும் ஆர்வம் உண்டா ? பிடித்த நடிகை நடிகர் யார் ?


நான் ரொம்ப அதிகமா படங்கள் பார்க்க மாட்டேன், பிடித்த ஹீரோ அப்படின்னு யாரும் இல்லை. நான் கடைசியாக பார்த்த படம் சூரி நடித்த மாமன். புடிச்ச ஹீரோ அப்படின்னா ராகவா லாரன்ஸ் அவர்களை பிடிக்கும். ஏனென்றால் அவர்கள் எங்கள் சமுதாயத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து நிறைய உதவிகள் செய்து வருகிறார், எங்களை மையப்படுத்தி படங்கள் கூட எடுக்கிறார். அவரை கூட நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.


இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


ஆண் பெண் என்பது இயற்கை தான். அதே போல திருநங்கைகளும் திருநம்பிகளும் கூட இயற்கை தான். எங்களையும் அப்படியே ஏத்துக்கோங்க.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP