herzindagi
image

"பத்ம பூஷன் அஜித்குமார்" தமிழகத்தின் பெருமைக்கு விருதளித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

கலைத்துறையில் மகத்தான பங்களிப்பிற்காக நடிகர் அஜித்குமாருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருதினை வழங்கினார். அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அஜித் இனி பத்ம பூஷன் அஜித்குமார் என அழைக்கப்படுவார்.
Editorial
Updated:- 2025-04-28, 18:28 IST

நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை நடிகர் அஜித்குமார் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வருடம் குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்குமாருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருதினை வழங்கினார்.விருது விழாவில் பிரதமர் மோடி, குடியரது துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள் இருந்தனர். 

ஸ்ரீ பத்ம பூஷன் அஜித் குமார் 

பத்ம விபூஷன் விருதுகளை தொடர்ந்து பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அஜித்திற்கு விருது வழங்கும் போது பிரபல தமிழ் நடிகர் மற்றும் ரேஸர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயர் அறிவிக்கப்பட்டதும் அஜித் எழுந்து நின்று அனைவரையும் கை கூப்பி வணங்கி முன்னே சென்று பிரதமர் மோடியையும் வணங்கினார். இதையடுத்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அஜித்தின் உடையில் பத்ம பூஷன் விருதினை அணிவித்து அதற்கான சான்றையும் கொடுத்தார்.

அப்போது அஜித் குடியரசு தலைவரிடம் நன்றி தெரிவித்தார். அஜித் விருது பெற்ற போது அவருடைய மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, மகன் ஆத்விக்,  அண்ணன் அனில் குமார், உறவினரும் நடிகருமான ரிச்சர்ட், அஜித்தின் தனி மேலாளர் சுரேஷ் சந்திரா எழுந்து நின்று கை தட்டினார். அஜித் கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தார். முன்னதாக நந்தமூரி பாலகிருஷ்ணா பாரம்பரிய ஆந்திர உடை அணிந்து பத்ம விருதினை பெற்றுக் கொண்டார். விளையாட்டு துறையில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

பத்ம விருதுகளும் தமிழ் நடிகர்களும் 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1988ல் பாரத ரத்னாவும், நடிப்பு திலகம் சிவாஜி 1984ல் பத்ம பூஷனும், ரஜினிகாந்த் 2000ல் பத்ம பூஷனும், 2016ல் பத்ம விபூஷனும், கமல்ஹாசன் 2014ல் பத்ம பூஷனும், விஜயகாந்த் 2024ல் பத்ம பூஷனும் பெற்றிருந்தனர். தற்போது நடிகர் அஜித்குமார் 2025ல் பத்ம பூஷன் விருதினை பெற்றுள்ளார். 

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]