மார்ச் 14ல் வெளியான Adolescence மினி டிவி தொடரில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்துள்ள ஜேமி மில்லர் கதாபாத்திரத்தில் வந்த ஓவன் கூப்பர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவன். அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச விழாக்களில் ஓவன் கூப்பருக்கு விருதுகள் குவிய போகின்றன என திரையுலகின் முன்னனி ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஸ்டார்மரும் ஓவன் கூப்பரை பாராட்டியுள்ளார். யார் இந்த ஓவன் கூப்பர் வாருங்கள் பார்க்கலாம்.
ஓவன் கூப்பர் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தொழில்நகரங்களில் ஒன்றான வாரிங்டனில் பிறந்தவன். ஓவன் கூப்பருக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு. கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஓவன் கூப்பர் மான்செஸ்டரில் வாரந்தோறும் நாடக குழுவில் நாடக பள்ளியில் நடிப்பு கற்று வருகின்றான். வெப் தொடரை பார்த்த யாருக்கும் ஓவன் கூப்பர் தான் கொலையாளி என தோன்றாது. முதல் எபிசோடில் இந்த பூனையும் பால் குடிக்குமா என யோசிக்கும் நமக்கு மூன்றாவது எபிசோடில் நடிப்பு அரக்கனாக திகழ்ந்து வியப்பை ஏற்படுத்தி இருப்பான் ஓவன் கூப்பர்.
16 வயதை பூர்த்தி செய்யாத ஓவன் கூப்பருக்கு இது அறிமுக தொடர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நான்கு எபிசோடுகளும் தலா ஒரு மணி நேரம் நீளமானவை. இதில் ஓவன் கூப்பர் வரும் இரண்டு எபிசோடுகளும் மிரட்டலானவை. குறிப்பாக மூன்றாவது எபிசோடில் மனநல மருத்துவரிடம் ஓவன் கூப்பர் உரையாடும் காட்சிகள் நம் மனதை உலுக்கி எடுத்துவிடும்.
Adolescence தொடரில் நடிக்கும் போது ஓவன் கூப்பருக்கு 14 வயது மட்டுமே. ஆடிஷனில் தேர்வான ஓவன் கூப்பரை தொடருக்கு தயார்ப்படுத்த நடிப்பு ஆசிரியரை நியமித்துள்ளனர். பல வருடங்கள் நடிப்பில் அனுபவம் கொண்ட எவராலும் ஓவன் கூப்பரின் நடிப்பை மிஞ்சுவது சிரமம் என்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள். நடிப்பதையே அறியாமல் கேமரா முன்பு மிரட்டியுள்ளான் ஓவன் கூப்பர். சிங்கிள் ஷாட் தொடர் என்பதால் நடிக்கும் போது சிலருக்கு கண்ணீர் வந்துவிடும். ஓவன் கூப்பரின் மனநலனை கவனிக்க மருத்துவரும் சூட்டிங் தளத்தில் இருந்துள்ளார். ஆனால் ஓவனுக்கு அவர் தேவைப்படவில்லை. சூட்டிங் முடிந்ததும் ஓவனை தேடினால் பந்து விளையாடி கொண்டு இருப்பானாம்.
பார்பி நாயகி மார்கட் ராபி நடிக்கும் Wuthering heights படத்தில் ஓவன் கூப்பர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளான். வார்னர் பிராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதே வருடம் ஃபிலிம் கிளப் எனும் மற்றொரு தொடரிலும் ஓவன் கூப்பர் நடித்துள்ளான். சில கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பதற்கும் வசனங்களை பேசுவதற்கும் மிகுந்த அனுபவம் வேண்டும். இவற்றை தனது அறிமுக தொடரிலேயே ஓவன் கூப்பர் சாத்தியப்படுத்தியது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மேலும் படிங்க Silvy Kumalasari : "அனான் டா பாட் சாயே" வைரல் பாடலுக்கு சொந்தக்காரி; யார் என்று தெரிகிறதா ?
கடந்த ஒரு வாரத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ஓவன் கூப்பரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஓவன் கூப்பர் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளான். ஓவன் கூப்பரின் எதிர்கால ஆசை நிறைவேறிட வாழ்த்துகள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]