தியேட்டரில் சென்று திரைப்படம் பார்க்கும் நம் அனைவரையும் நடுங்க செய்யும் அளவுக்கு ஒரு ஹாரர் ட்ரில்லர் கதைகளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது ஜென்ம நட்சத்திரம். மணிவர்மன் இயக்கத்தில் சுபாஷினி தயாரிப்பில் நடிகர் தமன் நடிகை மாள்வி மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். இந்த படத்தில் நடிகர் காலி வெங்கட், சந்தான பாரதி, முனிஷ் காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மக்களின் மனதில் இந்த படத்தை குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்துக் கொண்டிருந்த நடிகை மாள்வி மல்ஹோத்ரா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நடிகை மாள்வி மல்ஹோத்ரா இந்த படத்தின் அனுபவம் குறித்து நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
பாலிவுட், மாலிவுட், டாலிவுட்டில் பணியாற்றிய பிறகு, இப்போது கோலிவுட் சினிமாவில் டெப்யூ படம் கொடுப்பது எப்படி இருக்கு? உங்களுக்கு பிடித்த திரைத்துறை எது?
அனைத்து திரைத்துறைகளிலும் நடித்த பிறகு, பஞ்சாப், தெலுங்கு, மலையாளம் அல்லது தமிழ் என இருந்தாலும், ஒவ்வொரு திரை துறைக்கும் அதன் சொந்த படைப்பாற்றல் உள்ளது. நான் அனைத்திலும் பணிபுரிவதை விரும்புகிறேன். ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் நீங்கள் வற்புறுத்தி கேட்டால், மலையாளம் மற்றும் தமிழ் படங்களை நான் மிகவும் விரும்புகிறேன், ஏன் என்றால் அவை கதை-சார்ந்த படங்கள். ஒரு நடிகராக, அங்கு நிறைய அனுபவம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அந்தத் துறைகளில் இன்னும் அதிமாக பணியாற்ற ஆசைப்படுகிறேன்.
ஜென்ம நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?
ஜென்ம நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பில் எனது அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது, ஏன் என்றால் இந்த படக்குழு மிகவும் படைப்பாற்றல் மிக்கது. அவர்கள் இந்த படத்தை எடுக்கும் முறை மிகவும் உற்சாகமாக இருந்தது, குறிப்பாக எனது கதாபாத்திரம், இந்த கதை நடிகையின் மூலம் நகர்கிறது. படத்தில் நான் நிறைய பயந்திருக்கிறேன். இது வேடிக்கையாகவும் இருந்தது, உண்மையான பேய் எதுவும் இல்லை என்று தெரிந்தே பயப்படணும். நீங்கள் எல்லாவற்றையும் கற்பனை செய்ய வேண்டும். சவுண்ட் எபெக்ட்ஸ் போன்றவை போஸ்ட் ப்ரொடக்ஷனில் செய்யப்படும், ஆனால் நாம் படப்பிடிப்பின் போது கற்பனை செய்ய வேண்டியிருந்தது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உங்கள் கற்பனை திறன் மிகவும் முக்கியம். பெரும்பாலும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடந்ததால், அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
உங்களுக்கு தமிழ் புரியுமா? படப்பிடிப்பின் போது எப்படி சமாளித்தீர்கள்?
இப்போது தமிழ் 80% புரிகிறது, ஏனெனில் நான் நிறைய தமிழ் படங்கள் பார்த்து வருகிறேன். சமீபத்தில் தமிழ் வகுப்புகளில் சேர்ந்தேன், தமிழில் பேசுவதில் 50% மேனேஜ் செய்ய முடிகிறது. சிறிய உரையாடல்களை பேசுவேன் உதாரணமாக எங்க இருக்க, என்ன பண்ற அது போல. இன்னும் சில மாதங்களில், தமிழில் ஃப்ளூயண்டாகிவிடுவேன் என்று நினைக்கிறேன். தமிழ் துறையில் பணியாற்றும் போது, இன்னும் நன்றாக தமிழ் கற்று கொள்ளலாம். இந்த படத்தில் எனக்கு அதிக சவால்கள் இல்லை, ஏனெனில் தமிழில் பெரிய டயலாக்குகள் இல்லை, பெரும்பாலும் ரியாக்ஷன்ஸ் தான். சில நேரங்களில் டயலாக்குகளை முன்பே ரீஹெர்ஸல் செய்து விடுவேன்.
உங்கள் கோ-ஸ்டார் நடிகர் தமனைப் பற்றி சில வார்த்தைகள்?
நடிகர் தமன் ஒரு அருமையான நடிகர் மற்றும் ஸ்வாரஸ்யமான மனிதர். நாங்கள் ஷூட்டிங் செட்டில் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், படத்தின் காட்சிகளை எப்படி மேம்படுத்தலாம் என்று யோசிப்போம். அவர் ஒரு எழுத்தாளர் கூட, எனவே கதை எழுத்திலும் ஈடுபாடு காட்டுவார். படப்பிடிப்பின் போது அவர் நிறைய விஷயங்கள் சொல்லுவார், காட்சிகளை உடனடியாக மாற்றி, அது நன்றாக வேலை செய்தது. அவர் மிகவும் கிரியேட்டிவ். இந்த படத்திற்குப் பிறகு, தமிழில் நிறைய படங்கள் செய்வார் என நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் இப்போது தமிழில் பணியாற்றிய பிறகு, உங்களுக்கு பிடித்த தொழில் துறை எது?
மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஹிந்தி துறைகளில் பணியாற்றிய பிறகு, தமிழ்த் துறையில் பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி, நான் பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் ரசிகை. மணிரத்னம் படங்கள் பார்ப்பேன், ரஜினியின் படையப்பா, கமல்ஹாசன் படங்கள் போன்றவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமா துறையில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் பெருமையான விஷயம்.
சினிமாவைத் தவிர, உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்ன?
நான் ஒரு எழுத்தாளரும் கூட. சமீபத்தில் "Alfaas Sitarun Jaisai" என்ற கவிதை புத்தகத்தை எழுதியுள்ளேன் (ஹிந்தி & உருது கவிதைகள்). எனது பொழுதுபோக்கு நடனம், உடல் பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது மற்றும் பயணம் செல்வது.
மேலும் படிக்க: Pushkar Gayathri Exclusive: திரைக்கதை எழுதுவது கஷ்டமா? படம் எடுப்பது கஷ்டமா?
தமிழ்நாட்டைப் பற்றி உங்களுக்கு பிடித்த விஷயம்?
தமிழ்நாட்டின் உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். ரசம் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். மேலும், தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். இங்கு கோவில்களும் அழகாக இருக்கின்றன, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் அடுத்த படத் திட்டங்கள்?
சில படங்கள் தொடங்க வேண்டியுள்ளது, விரைவில் அது குறித்து விவரங்களைப் பகிர்வேன். இப்போது, "ஜென்ம நட்சத்திரம்" தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இதைத் தவிர, இந்த ஆண்டு ஒரு பஞ்சாபி படம் வெளியாகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation