herzindagi
crab soup recipe for cold

Crab Soup for Cold : நெஞ்சு சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இடிச்ச நண்டு சாறு

நெஞ்சு சளி மற்றும் இருமலிலிருந்து விரைவில் நிவாரணம் பெற மிளகு, சீரகம் மற்றும் இஞ்சியை கொண்டு செய்யப்படும் இந்த இடிச்ச நண்டு சாறை குடிக்கலாம்…
Editorial
Updated:- 2023-03-25, 12:13 IST

அடிக்கடி சளி பிடிக்கும் பொழுது தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்தால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு வீட்டு வைத்தியம் கை கொடுக்கும். அதுவும் ரசம், சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும்.

அந்த வகையில் சளி மற்றும் இருமலை குணப்படுத்தக்கூடிய ஒரு அருமையான சூப் ரெசிபியை இன்று பார்க்கப் போகிறோம். சளி அல்லது இருமலால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு முறை இந்த இடிச்ச நண்டு சாறை செய்து கொடுங்கள். அடுத்த முறை சளி பிடித்தால் நண்டு சாறு கிடைக்குமே என்று குஷியாகி விடுவார்கள். ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். அதற்கு முன் இடிச்ச நண்டு சாறு ரெசிபியை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பானங்கள்

தேவையான பொருட்கள்

  • நண்டு - ½ கிலோ (3-4)
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி - 4 சிறிய துண்டு
  • பூண்டு - 10-15
  • சின்ன வெங்காயம் - 20
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  • தனியா தூள் - ½ டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • தண்ணீர்

crab for cough and cold

முன் ஏற்பாடுகள்

  • சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
  • நண்டை சுத்தம் செய்து கழுவிய பின் லேசாக இடித்து கொள்ளவும்.

சூப் செய்வதற்கான மசாலா

  • ஒரு மிக்ஸர் ஜாரில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பின்பு அரைத்த மிளகு, சீரகத்துடன் இஞ்சி, பூண்டு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அரைத்த கலவையில் சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒன்றும் பாதியுமாக லேசாக அரைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: திண்டுக்கல் தலப்பாகட்டி ஸ்டைல் சேமியா பிரியாணி ரெசிபி

செய்முறை

soup for cough and cold

  • ஒரு குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை எண்ணெயில் சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.
  • இதனுடன் இடித்து வைத்துள்ள நண்டு சேர்த்து கிளறவும். சூப்பிற்கு லேசான புளிப்பு சுவை கொடுப்பதற்கு நறுக்கிய ஒரு நாட்டு தக்காளியை நண்டுடன் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்ததாக மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
  • இந்த சமயத்தில் நண்டு மூழ்கும் அளவிற்குய் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சூப்பிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்த பிறகு குக்கரை மூடவும்.
  • 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து உப்பு மற்றும் காரத்தை சரி பார்க்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]