2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சட்டப்பேரவையில் மார்ச் 20ஆம் தேதி மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் வெளியிடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குதான் இப்போது ட்விஸ்ட்டே. தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு, இப்போது செய்திருப்பது வேறு என்ற தொனியில் சலசலப்புகள் தொடங்கியுள்ளன.
யார் யார் பெற முடியாது?
அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்தும் நபர்கள், சொந்தவீடு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. NPHH-S, NPHH-NS ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத் தொகை அளிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காது.
இந்த பதிவும் உதவலாம்:பெண்களுக்கு ரூ.1000 தொடங்கி தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்
யார் யார் பெற முடியும்?
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை வழங்க வாய்ப்புண்டு. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உரிமைத் தொகை அளிக்கப்படும். முதியோர் உதவித் தொகை பெற்றாலும் அந்த பெண்களுக்கு மாத உரிமைத் தொகை வழங்கப்பட வாய்ப்புண்டு.
சொன்னது என்ன? செய்தது என்ன?
2021ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக கூட்டணியின் வெற்றிக் காரணிகளுள் ஒன்றாக பேசப்பட்ட திட்டம் இந்த மகளிர் உரிமைத்தொகை. ஆனால், ஆட்சி அமைத்தபிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ முன்னெடுப்புகள் எதுவும் துரிதமாக நடைபெறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், வந்தவுடன் இப்படி குறை சொல்வது சரியில்லை என்று எதிர்தரப்பினரும் பேச இந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர், ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இன்னும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுகள் மீண்டும் தொடங்கின. கஜானாவில் இருப்பில்லை என்ற அலுவல்பூர்வமற்ற விளக்கங்ளும் வெளியாகின. இந்த நிலையில்தான் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் தகுதியுடைய பெண்களுக்கு என்றும் ஒரு எல்லைக்கோடு கீறப்பட்டுள்ளது.
புதிய குழப்பம்
அனைத்து பெண்களுக்கும் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக அரசு, தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் சில கேள்விகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.ஒரு வீட்டில் அரசுப் பணியாளர் இருந்தால் உரிமைத் தொகை கிடையாது. எனில், அந்த அரசுப் பணியாளரின் ஊதியம் என்னவாக இருக்கும் என்பதை அரசு கவனிக்க வேண்டுமா இல்லையா? சொந்த வீடு வைத்திருப்போருக்கு கிடையாது என்றால், சொந்தவீடுகளில் குடும்பப் பிரச்னைகளால் தவிக்கும் கூரைவீட்டு பெண்களும் கூட இந்த சட்டகத்துக்குள் வருவார்களா?
இப்படி, தனித்தனியாக தகுதியை முடிவு செய்வதை விட, குறிப்பிட்ட வரம்பை வைத்து அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கிடையாது என்று சொல்வது கூட பொருந்தலாம். அதுவும் கூட குறைந்தபட்ச நன்மை பயக்கும் திட்டம்தான். வருமான வரி செலுத்தும் குடும்பங்களிலும் கூட, சுயமான குறைந்தபட்ச பொருளாதார சுதந்திரம் அற்ற பெண்கள் ஏராளம் உள்ளனர். அவர்களுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்கப்போகிறது இந்தத் திட்டம்? சலுகையோ, உதவியோ அல்ல. உரிமைத் தொகை என்றுதான் பெயர் வைத்திருக்கிறோம் என்று திமுக கூட்டணிக் கட்சியினர் பெருமைப்படும் வேளையில், தகுதித் தொகை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்றுதான் அறிவிப்பு உணர்த்துகிறது. அனைத்து பெண்களுக்கும் என்றால் அது துர்கா ஸ்டாலின் முதல் மாநிலத்தின் கடைக்கோடி பெண் வரை எல்லோரையும் உள்ளடக்கியது தான்.
தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை என்றால், என்ன தகுதி என்பதை அறிவித்த பிறகு மக்கள் கருத்தையும் கேட்டு மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அப்படியல்லாமல் போகும்பட்சத்தில், திமுக அரசு வாக்குக்காக பெண்களின் பெயரால் ஒரு ஏமாற்றுத்திட்டத்தை அறிவித்துவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்த்ததாகும்.
இதற்கான செயல்திட்டம் இறுதியாகி அமலுக்கு வரும் முன்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்போது அரசு இதுபோன்ற அம்சங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்:பெண்களுக்கான புது சிறுசேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation