மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்படும் முன்பாக தென் இந்தியாவின் தலைநகராக மெட்ராஸ் மாகாணம் திகழ்ந்தது என சொல்லலாம். அந்தக் காலக்கட்டத்தில் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக ஆந்திரா, கேரளாவை சேர்ந்த பெண்களும் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர். ஏற்கெனவே சொர்ணத்தம்மாள், சிவகாமி அம்மையாரின் வீர வரலாற்றை இங்கு பகிர்ந்துள்ளோம். இந்த பதிவில் ஆந்திராவில் வெகுண்டெழுந்து மெட்ராஸ் மாகாணத்தில் பிரிட்ஷ் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கர்ஜித்த ருக்மிணி லட்சுமிபதியின் வரலாற்றைப் பற்றி பார்ப்போம்...
காந்தி, ராசகோபாலச்சாரி, சரோஜினி நாயுடுவின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட ருக்மிணி லட்சுமிபதி 1923ல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1926ல் பாரிஸில் நடைபெற்ற மகளிருக்கான சர்வதேச வாக்குரிமை கூட்டணி காங்கிரஸில் இந்தியாவின் சார்பாக ருக்மிணி பங்கேற்றார். 1930ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கீழ்படியாமை இயக்கத்தில் திறம்பட செயல்பட்டு ஆந்திராவில் சத்தியாகிரகத்தை விரிவுபடுத்தினார். வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற காரணத்திற்காக முதல் பெண்ணாக சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தார்.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிட்டிஷ் அரசால் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் ருக்மிணி லட்சுமிபதி. 1934ல் மெட்ராஸ் மாகாணத்தின் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவியேற்றார். 1946ல் மெட்ராஸ் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சரும் இவரே.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகைகளில் போராடிய இவர் 1951ல் ஆகஸ்ட் 6ஆம் தேதி உயிரிழந்தார். இவரது நினைவாக சென்னை எழும்பூரில் உள்ள மார்ஷல் ரோடு ருக்மிணி லட்சுமிபதி சாலை என மாற்றியமைக்கப்பட்டது. அதே போல 1997ல் ருக்மிணி லட்சுமிபதியின் தபால் தலையும் வெளியிடப்பட்டது. நாட்டின் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்த சமூக சீர்திருத்தவாதியின் புகழை உலகிற்கு உரைப்போம்...
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முக நூலில் பின்தொடர்வதற்கு Her Zindagi கிளிக் செய்யவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]