பாரத நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரது பங்களிப்பு இருந்துள்ளது. இதில் சுதந்திர போராட்ட வீராங்கனைகளும், பெண் தலைவர்களும் அடங்குவர். நாம் ஏற்கெனவே வீரம் விளைந்த மதுரை மண்ணில் இருந்து சுதந்திர முழக்கமிட்ட சொர்ணத்தம்மாளின் வீர வரலாற்றைப் பகிர்ந்துள்ளோம். இந்தப் பதவில் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வீர பெண்மணி சிவகாமி அம்மையாரைப் பற்றி பார்க்கலாம். 1993ல் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் கிராமத்தில் மாரிமுத்து முதலியார் - சின்னத்தாய் தம்பதிக்கு பிறந்தவர் சிவகாமி அம்மையார். இவரது தந்தை மலேசியாவில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த காரணத்தால் சிவகாமி அம்மையார் குடும்பத்தினரோடு அங்கு செல்ல வேண்டிய நிலை உருவானது.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஜெய்ஹிந்த் இந்து பாடசாலையில் கல்வி பயின்றார். தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேச்சால் ஈர்க்கப்பட்ட சிவகாமி அம்மையார் இந்திய ராணுவத்தின் பாலக் சேனா குழுவில் சிறுவர்களோடு 11 வயதிலேயே இணைந்தார். 1942 முதல் 1945 வரை சமூக விடுதலை விடுதியின் பராமரிப்பாளராகவும் தலைவராகவும் செயல்பட்டார்.
தனது தம்பியோடு தெரு தெருவாக சென்று தெருமுனை நாடகங்களை நடத்தி மக்களிடையே சுதந்திர போராட்டத்திற்கான உணர்வை தூண்டினார். மேலும் மக்களிடம் நிதி திரட்டி அதை இந்திய ராணுவத்திற்கு வழங்கினார். சிவகாமி அம்மையாரின் செயல்களை கண்டு வியந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவரை பர்மாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் சிவகாமி அம்மையார் நேதாஜியின் அழைப்பை மறுத்துவிட்டார்.
இரண்டாம் உலகப் போரின் போது தனது தம்பி பரந்தாமனோடு சேர்ந்து சர்கார் முகாமில் குண்டு வீச்சு தாக்குதலால் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். 1943ல் சிவகாமி அம்மையார் தலைவராகச் செயல்பட்ட சமூக விடுதலை விடுதியை பிரிட்டிஷ் படையினர் கைப்பற்றினர். அப்போது சிவகாமி அம்மையாரை நடனமாட பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆயுதங்களை கண்டு அஞ்சாமல் சிவகாமி அம்மையார் பிரிட்டிஷ் அதிகாரிகளின் வற்புறுத்தலை எதிர்த்தார்.
1973ல் தமிழக அரசு சிவகாமி அம்மையாருக்கு தியாக செம்மல் விருது வழங்கி பாராட்டியது. இதையடுத்து 1993ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சிவகாமி அம்மையாருக்கு விருதுகளை வழங்கி உரிய கெளரவத்தை செய்தார்.
சுதந்திர போராட்ட வரலாறு மிகவும் நீண்ட பயணமாகும். தற்போது இதில் ஒரு சிலர் மட்டுமே போற்றப்படுகின்றனர். இந்த தியாக வீராங்கனையின் செயல்களை மறக்காமல் வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிவகாமி அம்மையாரை போற்றிப் புகழ்வோம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]