உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
பெண்கள் பருவமடைந்த பிறகு எந்த வயதிலும் மார்பக புற்றுநோய் உருவாகலாம். இன்றைய பதிவை மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம். மார்பக புற்றுநோய் தொடர்பாக கூகுளில் அடிக்கடி தேடப்படும் 10 கேள்விகளுக்கான பதில்களை BLK-Max சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புற்றுநோயியல் மூத்த இயக்குநர் டாக்டர் சஜ்ஜன் ராஜ்புரோஹித் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே வாரத்தில் எடை குறைய, நிபுணர் பரிந்துரை செய்யும் அட்டகாசமான டயட் டிப்ஸ்!
மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறிகள் என்ன?
மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறிகளில் வலியற்ற கட்டி அல்லது மார்பக திசு தடித்தல் ஆகியவை அடங்கும் என்று டாக்டர் ராஜ்புரோஹித் கூறியுள்ளார். எல்லா கட்டியும் புற்றுநோய் கட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், முலைக்காம்பு வெளியேற்றம், தோலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புதிய கட்டி போன்றவற்றை கண்டால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டுயது அவசியம்.
மார்பக புற்றுநோயின் 5 அறிகுறிகள் என்ன?
- மார்பகங்களின் அளவு மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள்
- மார்பகங்கள் அல்லது அக்குள்களில் ஒரு புதிய கட்டி
- தாய்ப்பால் அல்லாத முலைக்காம்பு வெளியேற்றம்
- தொடர்ந்து மார்பக வலி
- தோலில் ஏற்படும் மாற்றங்கள்.
மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
மரபணு மாற்றங்களால் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஏற்படும்பொழுது, அது மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. இது ஹார்மோன் தாக்கங்கள், மரபணு, சுற்றுச்சூழல், மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவுகளால் உண்டாகிறது.
மார்பக புற்றுநோய் எந்த வயதில் தொடங்குகிறது?
மார்பக புற்றுநோய் உருவாக குறிப்பிட்ட வயது ஏதும் இல்லை. இது பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் இது இளம் பெண்களையும், ஆண்களையும் கூட பாதிக்கலாம்.
மார்பக புற்றுநோயின் ஸ்டேஜ் 1 எப்படி இருக்கும்?
மார்பக புற்றுநோயின் முதல் கட்டத்தில், மார்பக திசுக்களில் ஒரு சிறிய கட்டியை மருத்துவர் கண்டறியலாம். இந்த கட்டத்தில் மார்பக சுய பரிசோதனை அல்லது மேமோகிராம் பரிசோதனையின்போது மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்களுடன், வலியற்ற கட்டியையும் கண்டறியலாம்.
மார்பக புற்றுநோய் வலியை ஏற்படுத்துமா?
ஆரம்ப கட்டங்களில், பொதுவாக மார்பக புற்றுநோய் வலியை ஏற்படுத்தாது. புற்றுநோய் பரவும்போது வலி தொடங்குகிறது மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளுக்கு பரவுகிறது. தொடர்ந்து மார்பகத்தில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று நிபுணர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய் திசுக்களின் பரவலைக் கட்டுப்படுத்துவது, சுற்றியுள்ள பகுதியை பாதிக்காதவாறு அவற்றை அகற்றுவதும் இந்த சிகிச்சையில் அடங்கும். மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பலரும் சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாக நிபுணர் கூறியுள்ளார். ஆனால் புற்றுநோயின் வகை மற்றும் நோயாளியின் தனிப்பட்ட குணநலன்களைப் பொருத்து சிகிச்சையின் விளைவுகள் மாறுபடலாம்.
மார்பக புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது?
மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற மருத்துவ பரிசோதனைகள்மூலம் கண்டறியலாம். முன்கூட்டியே கண்டறிந்தால் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பிரா அணிவதால் மார்பகங்களில் கட்டிகள் உருவாகுமா?
இது பலரும் நம்பும் ஒரு கட்டுக்கதை. பிரா அணிவதால் மார்பகங்களில் கட்டிகள் ஏற்படாது. நீர்க்கட்டிகள், ஹார்மோன் மாற்றங்கள், புற்றுநோய் அல்லது ஃபைப்ரோடெனோமா போன்ற காரணங்களால் கட்டிகள் ஏற்படுகிறது.
மார்பகப் புற்றுநோயின் நான்கு நிலைகள் என்ன?
ஸ்டேஜ் 0 : பால் குழாய்கள் மற்றும் லோபுல்களில் மட்டுமே புற்றுநோய் இருக்கும், வேறு எங்கும் பரவாது.
ஸ்டேஜ் 1 : ஒரு சிறிய நிணநீர் முடிச்சுகள் அல்லாத கட்டி உருவாகி இருக்கலாம்.
ஸ்டேஜ் 2: ஒரு பெரிய கட்டியுடன் ஒரு சில நிணநீர் முடிச்சுகள் இருக்கலாம்.
ஸ்டேஜ் 3: புற்றுநோய் அதிக நிணநீர் மண்டலங்களுக்குப் பரவி இருக்கும்.
ஸ்டேஜ் 4 என்பது மிகவும் மேம்பட்ட கட்டமாகும், இந்த கட்டத்தில் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளான உறுப்புகள் அல்லது திசுக்களுக்கு பரவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வேகமாக உடல் எடையை குறைக்க, இப்படி காபி போட்டு குடிங்க
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation