இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மக்கள் மது பானங்களை குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆண்கள் மட்டுமின்றி, இப்போது பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் மது அருந்துகின்றனர். அதில் பலரும் தங்கள் பழக்கம் எப்போது போதைக்கு அடிமையாகிறது என்பதை கூட உணராமல் இருக்கின்றனர். இந்த மது அருந்தும் பழக்கம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன நலத்தையும் கடுமையாக பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுவதாவது, மிதமான அளவு மது நுகர்வு கூட உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், கல்லீரல் பாதிப்புகள் மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குகிறது. மேலும், இது தலை-கழுத்துப் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே, மது பழக்கத்தை தவிர்ப்பதே சிறந்தது. மது அருந்துவதிலிருந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இடைவெளி வைத்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். அது என்ன மாற்றங்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
2025 புத்தாண்டை தொடங்கும் போது, நம்மில் பலரும் "இனி மது அருந்த மாட்டேன்" அல்லது "30 நாட்கள் மது தவிர்க்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்திருப்பீர்கள். மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், 30 நாட்கள் மது தவிர்த்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. இப்போது அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மது தவிர்ப்பதன் நன்மைகள்:
மது பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் மனத் தெளிவு, ஆழமான தூக்கம், எடை குறைதல் மற்றும் நச்சு நீக்கம் போன்ற நன்மைகளை உணர முடியும். ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் என்னென்ன நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
கல்லீரல் ஆரோக்கியம்:
தொடர்ச்சியான மது பழக்கம் கல்லீரல் சிரோசிஸை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான, மீளமுடியாத நோயாகும். சிரோசிஸ் ஒரே இரவில் வராவிட்டாலும், விரைவாக மது நிறுத்தினால் இதன் விளைவுகளைத் தடுக்கலாம். மது நிறுத்திய பிறகு, கல்லீரல் உடலின் நச்சுகளை சரியாக சுத்திகரிக்கும் திறனை மீண்டும் பெறுகிறது.
இதய நோய் அபாயம் குறைதல்:
அதிக மது பயன்பாடு கல்லீரலில் உள்ள டீஹைட்ரோஜினேஸ் எனும் நொதியை அதிகரிக்கிறது, இது கெட்ட கொழுப்பை (LDL) உயர்த்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. மது நிறுத்தினால், நல்ல கொழுப்பு (HDL) அதிகரிக்கிறது.
புற்றுநோய் அபாயம் குறைதல்:
அமெரிக்க சுகாதாரத் துறையின் ஆய்வுகளின்படி, மது பழக்கம் பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 30 நாட்கள் மட்டுமே மது தவிர்த்தாலும், இந்த ஆபத்து குறையும்.
எடை குறைதல்:
மது பானங்களில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. மது தவிர்த்தால், எடை குறைவதோடு, வயிற்றுக் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவுகளும் குறையும்.
மூளைத் திறன் மேம்பாடு:
மது பழக்கம் நினைவாற்றல் மற்றும் உங்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. மது குடிப்பதை நிறுத்தினால், மூளையின் கவனம் மற்றும் ஞாபக சக்தி மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
மது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. மது குடிப்பதை நிறுத்தியவுடன், உடல் தன்னை சரிசெய்து கொள்ளும் திறன் பெறுகிறது.
தூக்க தரம் மேம்படுதல்:
படுக்கைக்கு செல்லும் முன் மது அருந்துவது தூக்கத்தை கெடுக்கிறது. மது தவிர்த்தவர்களுக்கு ஆழமான, தடையற்ற தூக்கம் கிடைக்கிறது.
பாலியல் வாழ்க்கையில் முன்னேற்றம்:
மது பழக்கம் ஆண்களில் விறைப்புத் தன்மையையும், பெண்களில் பாலியல் ஆர்வத்தையும் குறைக்கிறது. மது குடிப்பதை தவிர்த்தால், உங்கள் பாலியல் வாழ்க்கை மேம்படுகிறது.
மது பழக்கத்தை தவிர்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. ஒரு மாதம் மட்டும் மது தவிர்த்தாலும், கல்லீரல், இதயம், மூளை மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். எனவே இன்று முதல் மது பழக்கத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation