நம்மில் பலரும் தங்கள் காதுகளை அடிக்கடி குச்சி, ஹேர் பின் அல்லது இயர்பட்களால் குடைந்து சுத்தம் செய்கின்றனர். இது அவர்களின் தினசரி பழக்கமாகவும் மாறியிருக்கலாம். சிலர் காதுகளில் ஏற்படும் குடைச்சல் அல்லது மெழுகு காரணமாகவும், சிலர் தினசரி சுத்தம் செய்வதாக நினைத்தும் இந்தப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பலருக்கு இயர்பட்கள் அவர்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான சீப்பு, கிரீம் போன்றவற்றுடன் இருப்பது போல தினசரி பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அடிக்கடி காது கொடைய கூடாது என்றும் காதில் இருக்கும் மெழுகை தேவையானால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வரிசையில் தினசரி காது கொடையும் பஞ்சு பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இயர்பட்களின் பயன்பாடு நல்லதா?
காதுகளுக்குள் இயர்பட்களை செருகுவது மிகவும் ஆபத்தானது. இவை காதுகளின் வெளிப்புறப் பகுதியை மட்டுமே சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையில், காதுக்குள் உள்ள மெழுகு (Earwax) முக்கியமான பணியைச் செய்கிறது. இது தூசி, நுண்ணுயிரிகள் மற்றும் பிற துகள்களைப் பிடித்து, உணர்திறன் மிக்க உள் காதுப் பகுதியைப் பாதுகாக்கிறது. மேலும், இது காது உள்பகுதி தோல் வறட்சியைத் தடுக்கிறது. இயர்பட்களை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம்.
இயர்பட்கள் காது மெழுகை மோசமாக்கும்:
பெரும்பாலானவர்கள் காதுகளை "சுத்தம்" செய்ய பஞ்சு இயர்பட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தவறானது. காதுக்குள் இயர்பட்களைச் செருகுவது, மெழுகை உள்ளே தள்ளி, காதில் அடைப்பை ஏற்படுத்தும். மேலும், இது காது உள்பகுதியில் மென்மையான தோலில் கீறல்களை ஏற்படுத்தி எரிச்சல், வீக்கம் மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.
காது அடைப்பு மற்றும் அதன் விளைவுகள்:
இயர்பட்களின் தவறான பயன்பாடு காது மெழுகை உள்ளே அழுத்தி, கடினமான அடைப்பை உருவாக்கும். இது காது கேளாமை, வலி, டின்னிடஸ் (காதில் சத்தம் கேட்டல்) மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலைகளில், காதில் இருக்கும் அழுக்கை நீக்க சுயமாக முயற்சிப்பதை விட, மருத்துவரை அணுகுவது நல்லது.
காதில் தொற்று ஏற்படும் அபாயம்:
இயர்பட்கள் காது உள்பகுதியில் பாக்டீரியாக்களைச் சேர்ப்பதன் மூலம் தொற்றுக்கு வழிவகுக்கும். காதின் உணர்திறன் மிக்க புறணியை சேதப்படுத்துவதால், பாக்டீரியாக்கள் எளிதாக ஊடுருவி வலிமிகுந்த தொற்றுகளை உருவாக்கும்.
காது கேளாமை மற்றும் சமநிலைப் பிரச்சினை:
இயர்பட்களின் தவறான பயன்பாடு செவிப்புலன் மற்றும் உள் காதின் சமநிலைக் கட்டமைப்புகளை சேதப்படுத்தும். இது நிரந்தரமான காது கேளாமை, தலைச்சுற்றல் மற்றும் சமநிலை இழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
காது சுகாதாரத்திற்கான பாதுகாப்பான முறைகள் என்ன?
பெரும்பாலும், காதுகள் தானாகவே சுத்தமாகும் திறன் கொண்டவை. அதிகப்படியான மெழுகு காதுக் கால்வாயிலிருந்து தானாகவே வெளியேறும். சுத்தம் செய்ய வேண்டுமென்றால், குளித்த பிறகு சுத்தமான ஈரத் துணியால் காதின் வெளிப்பகுதியை மெதுவாகத் துடைக்கலாம். காது அடைப்பு, வலி அல்லது கேளாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.
காது மெழுகு அதிகரிப்பை எவ்வாறு தடுப்பது?
- முதலில் இயர்பட்களால் அடிக்கடி காதுகளைக் குடைவதைத் தவிர்க்கவும்.
- மருத்துவரின் ஆலோசனையின்படி காது சொட்டு மருந்து பயன்படுத்தலாம்.
- குச்சிகள், ஹேர் பின்கள் போன்றவற்றை காது கொடைய தவிர்க்கவும்.
- நீச்சல் அல்லது குளித்த பிறகு காதுகளை நன்றாக உலர வைக்கவும்.
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?
காதில் கடுமையான வலி ஏற்பட்டால், கேட்கும் திறன் திடீரெனக் குறைந்தால், தொடர்ந்து காது தொற்றுகள் ஏற்பட்டால் மற்றும் வீட்டு மருத்துவம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். காது மெழுகு அதிகரிப்பு பல காரணங்களால் ஏற்படலாம். இது தொடர்ச்சியாக ஏற்பட்டால், எந்தவொரு கடுமையான பிரச்சினையையும் தவிர்க்க மருத்துவ உதவி பெறுவது நல்லது.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation