நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக் இந்த வேர்க்கடலை. மழை காலத்தில் மாலை வேலைகளில் இந்த வேர்க்கடலையை வறுத்து சூடாக சாப்பிடுவது சூப்பராக இருக்கும். அதே போல பலரும் இந்த வேர்க்கடலையில் மசாலா சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சை வேர்க்கடலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிக அளவு நன்மைகள் உள்ளது. பாதாம் பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கு நிகரான ஆரோக்கிய நன்மைகள் இந்த வேர்க்கடலையில் கிடைக்கிறது. நாம் இந்த பச்சை வேர்கடலையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் அந்த நாள் முழுக்க நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் இதய நோய் பிரச்சனைகள் உள்ளவர்களும் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் குறைவான அளவில் இந்த வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிட்டு வரலாம். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக வேர்க்கடலையை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் இந்த வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. வறுத்த வேர்க்கடலையை சாப்பிடுவதற்கு பதிலாக பச்சை வேர்க்கடலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதில் அதிக கலோரிகள் உள்ளதால் நம் வயிறு நிரம்பிய உணர்வை தரும்.
சுமார் 100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் புரதச்சத்து, 46 கிராம் கொழுப்பு சத்து, 16 கிராம் கார்போஹைட்ரேட், 9 கிராம் நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் வேர்கடலை அளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு இரும்பு சத்தும் மூன்றில் ஒரு பங்கு கால்சியம் சத்தும் உள்ளது.
மக்னீசியம், காப்பர், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இந்த பச்சை வேர்க்கடலையில் அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் இந்த பச்சை வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் தீவிர முயற்சியில் உள்ளவர்கள் முதலில் அவர்கள் டயட்டில் தவிர்ப்பது முந்திரி மற்றும் வேர்க்கடலை தான். இந்த நட்ஸ் வகைகளில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று இவர்கள் நினைத்து தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் நம் உடலுக்கு நன்மை செய்யும் கொலஸ்ட்ரால் தான் இந்த வேர்க்கடலையில் அதிக அளவு உள்ளது. இந்த வேர்க்கடலையில் உள்ள புரதச்சத்தும் கொழுப்பு சத்தும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தந்து அதிக கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க பெரிதும் உதவுகிறது. நம் தினசரி உணவில் இந்த பச்சை வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் எலும்புகள் தேய்மான பிரச்சனை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த எலும்பு தேய்மான பிரச்சனை அதிக அளவு உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் உணவில் போதுமான கால்சியம் சத்து இல்லாதது தான். பாலில் இருந்து மட்டுமே நம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதனால் கால்சியம் நிறைந்த வேறு எந்த உணவுகளையும் அவர்கள் தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். ஆனால் இது தவிற கால்சியம் நிறைந்த ஒரு சிறந்த உணவு இந்த வேர்க்கடலை. இந்த பச்சை வேர்க்கடலையில் பாஸ்பரஸ் மாங்கனிஸ் அதிக அளவு நிறைந்து இருப்பதால் இது நம் எலும்புகளை உறுதியாக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட், குக்கீஸ் என ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பதை தவிர்த்து விட்டு ஊற வைத்த பச்சை வேர்க்கடலையை சாப்பிட கொடுக்கலாம். இது வளரும் குழந்தைகளுடைய கவனத்திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் அவர்கள் ஞாபக திறனையும் அதிகரிக்க செய்கிறது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது இந்த வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக மாறும். வைட்டமின் பி1, போலேட், நியாஸின் மற்றும் போலிக் அமிலங்கள் இந்த பச்சை வேர்க்கடலையில் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]