நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு பரிச்சயமான நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். கோட்டா ஸ்ரீனிவாசின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
image

சாமி, திருப்பாச்சி, கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, சாமி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் கோட்டா ஸ்ரீனிவாசன். எண்ணற்ற படங்களில் வில்லனாக நடித்து முத்திரை பதித்தவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலேயே அதிகாலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது.

கோட்டா ஸ்ரீனிவாச திரையுலக பயணம்

கோட்டா ஸ்ரீனிவாஸ் 1978ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பிராணம் கரீது என்ற படத்தில் அறிமுகமானவர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் முதல் படமும் இதுவே. திரைப் பயணத்தில் வில்லன், துணை நடிகர் என 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ஒன்பது முறை பெற்றுள்ளார். திரையுலகில் கோட்டா ஸ்ரீனிவாசின் பங்களிப்பிற்காக 2015ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழில் 25க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். சாமி படத்தின் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தை எவராலும் மறக்க இயலாது. ஜென்டில்மேன், இந்தியன், நரசிம்மா, பாபா, சிவாஜி தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிங்கிற்கு குரல் கொடுத்துள்ளார். இரண்டு படங்களில் பாடவும் செய்திருக்கிறார். யாரடி நீ மோகினி ( தெலுங்கு ஒரிஜினல் ) வெங்கடேஷிற்கு தந்தையாக நடித்திருப்பார்.

கோட்டா ஸ்ரீனிவாசின் வாழ்க்கை

கோட்டா ஸ்ரீனிவாஸ் 1942ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள கண்கிபடு பகுதியில் பிறந்தவர். அப்போது விஜயவாடா நகரம் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டு இருந்தது. 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக செயல்பட்டு இருக்கிறார். திரையுல பயணத்தை தொடங்கும் முன்பாக வங்கி ஊழியராக கோட்டா ஸ்ரீனிவாஸ் பணியாற்றியுள்ளார்.

தெலுங்கில் கடைசியாக 2023ல் சுவர்ண சுந்தரி படத்திலும், தமிழில் கடைசியாக காத்தாஇ என்ற படத்திலும் நடித்திருந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு உயிர் பிரிந்துள்ளது. கோட்டா ஸ்ரீனிவாஸின் மறைவு தென் இந்திய திரையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP