மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை முழங்கி தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
1991ல் முதன்முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது அவருக்கு நிர்வாகப் புரிதல் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதன் பிறகு தமிழகத்தில் சிக்கலான பிரச்சினைகள் உருவானபோதெல்லாம் திடமான முடிவுகளை எடுத்து இரும்பு பெண்மனி என்ற பட்டத்தை வசப்படுத்தினார். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா செயல்படுத்திய சில திட்டங்கள் அவரை அம்மா என்று அன்போடு அழைக்க வைத்தது.
1991 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டமும் ஒன்றாகும். பெண் சிசுக்கொலை மற்றும் பாலின அடிப்படையிலான கருக்கலைப்புகள் தமிழகத்தில் தலைவரித்தாடி கொண்டிருந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கியமான திட்டம் இது.
குழந்தையை பராமரிக்க முடியாத தாய்மார்களிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்ட அரசாங்கம் சுமார் 20 ஆண்டுகளுக்கு அவர்களை பராமரித்தது. அதேபோல மீட்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுக் குடும்பத்துடன் மறுவாழ்வு பெற்றனர். இதனால் அனாதை இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதெல்லாம் இந்த திட்டத்தை பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தினார். தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாலின விகிதமும் அதிகரித்தது.
பெண்களின் குறைகளைக் களைய 1992 ஆம் ஆண்டு முதல் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 200 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளன. நாட்டிலேயே நான்கில் ஒரு பங்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்.
மேலும் படிங்க இந்திய கால்பந்து அணியில் ஜொலிக்கும் தமிழகத்தின் தங்க தாரகைகள்
2011 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவித் தொகையை ஆறாயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மூன்று தவணைகளில் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான உணவுகளை வாங்கிச் சாப்பிடவும், தாய்மைப் பருவத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டுவதற்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை குறைவாகப் பிறப்பதைத் தவிர்ப்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தாலிக்கு தங்கம் திட்டம் அல்லது திருமணத்திற்கு தங்கம் திட்டம் 2011ல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரபல சமூக ஆர்வலர் மூவலூர் ராமாமிர்தம் பெயரிடப்பட்டது. பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணத்திற்காக நான்கு கிராம் தங்கம் மற்றும் 50,000 ரூபாய் வரை ரொக்கமாக வழங்கப்பட்டது.
வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 விழுக்காடு மானியம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட மகளிர் மூன்று சக்கர வாகனங்களை பெறலாம்.
மேலும் படிங்க பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் “புதுமைப் பெண்” திட்டம்
ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் ஒவ்வொரு தாய்க்கும் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான 16 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த கிட்டில் பேபி டவல், உடை, கொசுவலை, பேபி ஆயில், சோப்பு, சானிடைசர், பொம்மை, மருந்து ஆகியவை அடங்கும்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் கல்லூரி படிப்பிலும் சிறந்து விளங்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்து மாணவர்களும் கையில் மடிக்கணினியுடன் கல்லூரிக்கு மகிழ்ச்சியாக செல்வதை பார்க்க முடிந்தது.
தற்போதைய அரசு இதில் பல திட்டங்களை நிறுத்திவிட்டது. ஜெயலலிதாவின் புகழை மறைக்க பல்வேறு சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் அவர் மக்களால் போற்றப்பட்ட மாபெரும் தலைவர் என்பதை மறக்கமுடியாது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]