அம்மா, இரும்பு பெண்மணி என மக்களால் அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. அவர் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தவர். சூழ்ச்சிகளும், துரோகிகளும் நிறைந்த அரசியல் களத்தில் பெண் முதலமைச்சர் உருவெடுப்பது அவ்வளவு எளிதல்ல. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தமிழக அரசு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கலைக்கப்பட்டது. 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார் ஜெயலலிதா. அதன் பிறகு 1991, 2001, 2011,2016 என நான்கு சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை ஜெயிக்க வைத்து முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். அவர் மகளிரின் மேம்பாட்டுக்காக செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் தொடரும் வகையில் இந்திய
அரசமைப்பு சட்டத்தைத்திருத்த ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1993ல் கூடிய தமிழக சட்டப்பேரவை
இடஒதுக்கீட்டிற்கான தனிச் சட்டமுன்வரைவு தாக்கல் செய்து நிறைவேற்றியது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரசிம்மராவை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். அதன் பிறகு குடியரசு தலைவர் சங்கர்தயாள் சர்மா தனிச் சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளித்தார்.
2000ல் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு என்றே சொல்லலாம். கையில் குடங்களோடு மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருந்த காலம் அது. இதையடுத்து 2001ல் வீடுகளிலும், கட்டடங்களிலும் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்திட எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழக கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்த விஸ்வநாதன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மாநகராட்சியின் பழைய விளையாட்டரங்கை புதிய வசதிகளோடு புதுப்பிக்க கோரிக்கை விடுத்தார். 1992ல் வெறும் 234 நாட்களில் நேரு விளையாட்டரங்கம் நவீன வசதிகளோடு பொலிவு பெற்றது. 1965ல் கிரிக்கெட் களமாக பயன்படுத்தப்பட்ட அந்த ஸ்டேடியம் 1992க்கு பிறகு கால்பந்து, இதர போட்டிகளுக்கான அரங்காக மாறியது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு பரிசை நம்பி பணத்தை இழந்தவர்கள் ஏராளம். குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதை விட லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக 2003ல் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தமிழகத்தில் நிறுத்தியதோடு பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனைக்கும் தடை விதித்தது.
ஜெயலலிதா ஆட்சியில் 2014ல் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தர்மபுரியில் மிகப்பெரிய சுகாதார முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரத்து 37 பேர் மார்பக புற்றுநோய் பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இது கின்னஸ் சாதனை புத்தக்கத்திலும் இடம்பெற்றது.
2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாய மொழிப் பாடமாக பயில வேண்டுமென சட்டம் நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அரசு.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு முதன் முதலில் ஜெயலலிதா தலைமையிலான அரசு நிதியை ஒதுக்கியது.
மேலும் படிங்க Budget 2025 : வருமான வரி விலக்கு முதல் ரூ.2 கோடி கடன் வரை; பட்ஜெட்டின் டாப் 10 சிறப்பம்சங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]