தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடியும் தருணத்தில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில வருடப்பிறப்பையொட்டி அளிக்கப்படும் பத்து நாட்கள் விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டாட அனைவருமே விரும்புவோம். இந்தாண்டும் நீங்கள் சுற்றுலா செல்ல விரும்புனால், இந்த இடங்கள் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.
டிசம்பர் மாதத்தில் அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் முடிந்தவுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏறக்குறைய பத்து நாட்கள் விடுமுறை கிடைப்பதால் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பெரும்பாலானோர் சுற்றுலா செல்வதற்கான இடங்களைத் தேர்வு செய்துவிடுவர். தமிழகத்திற்குள் மட்டும் சுற்றுலா பயணங்களைத் திட்டமிடாமல் இம்முறை மிகப்பெரிய பயணத்திற்கு திட்டமிடுங்கள். ஏனென்றால் இந்தக் குளிர்காலத்தில் காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்கள் உள்ளன. தனித்துவமான இடங்களை நீங்கள் தேடுகிறீர்களானால் இந்தக் கட்டுரை மிக உதவிகரமாக இருக்கும். நண்பர்களுடனும், குடும்பத்துடனும் நீண்ட தூரம் பயணித்து மறக்க முடியாத அனுபவங்களைத் தரும் குளிர்காலத்திற்கான டாப் 5 சுற்றுலா தலங்களின் தகவல்களைப் பகிர்கிறோம்.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மேகமலை குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. மேகங்களின் மலை என்பதே மேகமலை என்ற வார்த்தையின் பொருளாகும். அங்கு மலைகள் வழியாக மேகங்கள் கடந்து செல்வதை கண்டுகளிக்கலாம். மேகமலையை தென் இந்தியாவின் ஆராயப்படாத அழகாகும். சமீபத்தில் இவ்விடம் தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அங்குத் தங்கி இயற்கையை ரசிப்பதற்கு ஹோட்டல்கள், விடுதிகள் என அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
மேலும் படிக்க: தீபாவளி விடுமுறையில் இந்தியாவினுள் சுற்றுலா செல்வதற்கு உகந்த டாப் 5 இடங்கள்
இயற்கையை ரசிப்பதற்கு இந்தியாவின் சிறந்த இடங்களாக வடகிழக்கு மாநிலங்களைக் குறிப்பிடலாம். இங்குள்ள பல இடங்கள் சுற்றுலாவிற்கு உகந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் மாவட்டம். இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 48 மீட்டர் உயரத்தில் இருப்பதால், இங்கிருந்து பல்வேறு அழகான இடங்களைக் காண முடியும். இங்கு நீங்கள் பனிப்பொழிவையும் அனுபவிக்கலாம். குளிர்காலத்திற்கான நட்சத்திர சுற்றுலா தலங்களின் பட்டியலில் சிம்லா, மணலியை போலத் தவாங்கும் இடம்பெறுகிறது. இம்மாவட்டத்தை மறைக்கப்பட்ட பொக்கிஷம் என்றும் கூறலாம்.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நாகோ பகுதி குளிர்காலத்தில் சிறந்த அனுபவங்களைத் தரக்கூடிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள கிராமங்களுக்கு நீங்கள் சென்றால் திபெத்திய கலாச்சாரத்தை அனுபவிக்கலாம்.
பரபரப்பான நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு இவ்விடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகாகத் தென்படும். இங்கே நீங்கள் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையும், பனியால் மூடப்பட்டு இருக்கும் மலைகளையும் காணலாம். நாகோ ஏரி, நாகோ கோம்பா ஆகியவை இந்த இடத்தின் சிறப்பு அம்சங்கள்.
கடற்கரைகளை விரும்பும் நபர்களுக்குக் கோபால்பூர் சிறந்த இடமாக விளங்குகிறது. இங்குப் பல தூய்மையான கடற்கரைகள் உள்ளன. இங்கு ஏராளமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும். தென்னை மரங்கள் மற்றும் கேசுவரினா சூழப்பட்ட இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் அழகாக இருக்கும்.
மேலும் படிக்க: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி!
பழங்கால சிற்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை காணும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், பீம்பேட்காவிற்கு கட்டாயம் செல்லுங்கள். இவ்விடம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. பழைய குகைகள், பாறைகள் இருப்பதால் இவ்விடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் மலையேற்றத்தையும் அனுபவிக்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]