பிப்ரவரி ராசிபலன்: இந்த மாதம் யாருக்கு எப்படி? ஏற்றம் யாருக்கு, ஏமாற்றம் யாருக்கு ?

பிப்ரவரி மாதத்தில் குறிப்பிடத்தக்க கால இடைவெளியில் சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. கிரக பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் என்பதை இங்கே காணலாம்.
  • Alagar Raj
  • Editorial
  • Updated - 2025-01-30, 11:25 IST
image

ஆண்டின் முதல் மாதத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் மாதமான பிப்ரவரியில் அடியெடுத்து வைத்துளோம். பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரக பெயர்ச்சிகள் நிகழ்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு ஏற்றத்தையும், சில ராசிகளுக்கு ஏமாற்றத்தையும் தர போகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். அதேபோல் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த கிரக பெயர்ச்சிகள் மார்ச் மாதத்தில் நிகழும் சனி பெயர்ச்சியின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த கிரகங்களின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினரே பிப்ரவரி உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பிப்ரவரியில் நிகழும் புதன் பெயர்ச்சி பல எதிர்பாராத வாய்ப்புகளை கொடுக்கும். அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். நிதிநிலை சீராக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சில நோய்களால் பாதிக்கப்படலாம் என்பதால் உணவு முறையில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு பிப்ரவரி மாதம் லாபகரமான மாதமாக இருக்கும். புதனின் இரட்டை பெயர்ச்சியால் இந்த வருடத்தின் சிறந்த மாதமாக பிப்ரவரி இருக்கும். பணியிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். தொழிலில் பல மடங்கு லாபத்தை ஈட்டுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பல மாதங்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இடையே நீடித்த கருத்து வேறுபாடுகள் களையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் மன அழுத்தம் உங்களை ஆட்கொள்ளும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு உற்சாகமான மாதமாக பிப்ரவரி இருக்க போகிறது. பல நாட்களாக கிடப்பில் கிடந்த பணிகளை இம்மாதம் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் இணைய வாய்ப்புண்டு. புதன் உங்கள் ராசியில் கர்ம வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார் என்பதால் இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். உங்கள் கடந்தகால முயற்சிகளுக்கு சிறந்த முடிவுகளை வெகுமதியாக பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம். ஆரோக்கியத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக பிப்ரவரி இருக்கும். இம்மாதம் பணவரவு இருந்தாலும் அதற்கு இணையான செலவுகளும் வர செய்யும். குடும்பம் மற்றும் காதல் உறவில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் புதிய தொடக்கத்தின் மாதமாக இருக்க போகிறது. உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கு சாதகமான சூழல் அமையும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக குரு லாபத்தில் இருப்பதால் நகை, வாகனங்கள் போன்ற அசையும் சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. அடுத்தவர்கள் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தம்பதியினர் இடையே இருந்த பிரச்னைகளுக்கு பரஸ்பர புரிதல் மூலம் தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான 2025 ராசி பலன்

கன்னி

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு பல வழிகளில் நன்மைகள் தேடி வர போகிறது. உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் எந்த வேலை அல்லது வியாபாரத்தை தொடங்கினாலும் பெரிய வெற்றியைப் பெறலாம். இம்மாதம் நிதிநிலை நன்றாக இருக்கும்.இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்கள் பிப்ரவரி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பணியிடத்தில் ஏற்படும் புதிய சவால்களை சமாளிக்க பொறுமையும் நிதானமும் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படவும். நண்பர்களுடனான பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உங்கள் நிம்மதியைக் பாதிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு பிப்ரவரி பொறுமையை சோதிக்கும் மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் மெதுவான முன்னேற்றம் இருக்கும் ஆனால் பொறுமையாக இருந்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். வாக்கு ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு உங்களை பார்ப்பதால் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளில் அதிக பணத்தை இம்மாதம் செலவு செய்வீர்கள். அதனால் இவற்றில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் உங்களை பற்றிய எதிர்மறை பேச்சுக்கள் ஏற்படும்.

மேலும் படிக்க : பூப்பெய்திய நேரம்! ருது ஜாதகம் எழுதி திருமண பொருத்தம் பார்க்கலாமா? அவசியமா?

தனுசு

தனுசு ராசியினருக்கு பிப்ரவரி புதிய அனுபவங்களை பெற போகும் மாதமாக அமையும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கான வெகுமதியை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் பரிவர்த்தனையில் ஆட்சி நிலைப் பெறுகிறார். இதனால் சொந்த வீடு, நிலம் வாங்குவத்கான சூழல் அமையும். இம்மாதம் புதிய இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், காதல் உறவில் அன்பும் பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கைதேவை.

மகரம்

மகர ராசியினரே பிப்ரவரி உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மாதமாக இருக்கும். அலுவலகத்தில் ஏற்படும் அரசியல் சச்சரவுகள் உங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை அவசரமான நேரங்களில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி, புதன் சேர்வதால் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்னைகளால் ஏற்படலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் மற்றும் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு யோகமான மாதமாக பிப்ரவரி இருக்கும். புதன் மற்றும் சூரியன் சனி பகவானின் அதிபதியான கும்ப ராசியில் சஞ்சரிப்பது வரப்பிரசாதமாக அமையும். உத்தியோகத்தில் புதிய உச்சத்தை அடைவதற்கான வாய்ப்புகளும், நிதி நிலையும் வலுப்பெறும். உங்களுடைய யோகாதிபதி தன ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். காதல் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

மீனம்

மீன ராசியினருக்கு பிப்ரவரி அமோகமான மாதமாக அமையப்போகிறது. புதன் மீன ராசியில் சஞ்சரிப்பது, சுக்கிரன் மற்றும் ராகு மீன ராசியில் உச்ச நிலையில் இருப்பது உங்களுக்கு பல வகைகளில் நல்ல பலனை தரும். பணியிடத்தில் உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். இந்த மாதம் முழுவதும் உங்கள் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில சவால்கள் இருக்கலாம். உழைக்கும் நேரத்திற்கு இணையான ஓய்வு எடுப்பது அவசியம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP