கொண்டைக்கடலையில் அடிக்கடி பூச்சி வருகிறதா? அதை சேமிப்பதற்கான சரியான முறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
சமையல் கூட எளிதாக செய்திடலாம், ஆனால் மளிகை பொருட்களை சேமித்து வைப்பது சற்று கடினம் தான். இவற்றை சேமிப்பதில், முக்கியமான நிறைய விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பருப்பு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் தானியங்களை சரியான முறையில் சேமிக்காவிட்டால், அதில் பூச்சி மற்றும் வண்டு வந்து கெட்டுப்போகலாம். நீண்ட நாட்களுக்குக் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலையை மூடிய ஜாரில் வைத்திருக்கும்போது, அதில் சிறிய பறக்கும் பூச்சிகள் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
இந்த பூச்சிகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவை கொண்டைக்கடலையில் துளைகளை உருவாக்கி, அதன் உள்ளே நுழைகின்றன. நாம் கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைக்கும்போது, அவை தண்ணீரின் மேலே மிதந்து வரும். இந்த பூச்சிகள் நாம் சேமித்து வைத்திருக்கும் தானியங்களை சேதப்படுத்துகின்றன, மேலும் இவற்றை உணவுகளில் பயன்படுத்தினால், இவை பல உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
அதனால் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலைகளில் பூச்சி, வண்டு வராமல் பாதுகாத்து வைப்பது அவசியம். இவற்றை சேமித்து வைக்கும்போது ஒரு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், பூச்சிகள் வராது. கொண்டக்கடலையை சேமிக்கும் சரியான முறையை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்.
நீங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டைக்கடலையை சேமித்து வைக்கும்போது, அந்த ஜாரில் சில காய்ந்த மிளகாய்களை போட்டு வைக்க வேண்டும். இது பூச்சிக்கொல்லியாகச் செயல்பட்டு பூச்சி, புழுக்களை அண்ட விடாமல் வைத்துக்கொள்கிறது.
எல்லா வகையான பருப்பு மற்றும் தானியங்களையும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க காய்ந்த சிவப்பு மிளகாய் பயன்படுத்தலாம். அவற்றை சேமிக்கும் ஜாரில் காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் போதும், இதன் நெடிக்கு பூச்சிகள் வராது.
நீண்ட நாட்களுக்குக் கொண்டைக்கடலையை சேமிப்பதற்கான சிறந்த வழி, சிறிய அளவுகளில் சேமித்து வைப்பது தான். ஒரே ஜாரில் அதிக அளவிலான கொண்டைக்கடலையை சேமித்து வைத்தால் அதில் பூச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொண்டைக்கடலையில் பூச்சி இருப்பதாகத் தோன்றினால், உடனடியாக அவற்றை ஒரு மணிநேரம் வெயிலில் வைத்து எடுக்கவும்.
தானியங்களை வெயிலில் வைக்கும்போது, ஈரப்பதம் முற்றிலும் நீங்கி, அதில் பூச்சிகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது. வெயில் இல்லாத பருவ காலத்தில், கொண்டைக்கடலையை லேசாக வறுத்து, அதில் பூச்சிகள் வராதவாறு சேமித்து வைக்கலாம். கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலையை எப்போதும் காற்று புகாத கண்ணாடி ஜாரில் சேமித்து வைப்பது நல்லது. இதன் உள்ளே பூச்சிகள் செல்ல முடியாது. ஈரப்பதம் இல்லாத ஜாரில் சேமிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கொண்டைக்கடலையை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க ஜாரில் சில பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுகின்றன. அதனுடன், இலைகளின் வாசத்திற்கு பூச்சிகளும் வராது, இதில் உள்ள புழுக்களும் வெளியேறிவிடும். மேலும் இந்த இலைகளின் வாசனை கொண்டைக்கடலையில் சேர்ந்து, சமைக்கும்போது அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
நீங்கள் கொண்டைக்கடலையை நீண்ட நாட்களுக்கு சேமித்துவைக்க விரும்பினால், அதன் ஜாரில் சில துண்டு இலவங்கப்பட்டை போட்டு வைக்கவும். இலவங்கப்பட்டையின் வாசனை பூச்சிக்கொல்லியாக செயல்படுவதால், இது பூச்சிகளை வெளியேற்ற உதவுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி கொண்டைக்கடலை மற்றும் தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]