வள்ளிமலை முருகன் கோயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் இடம்பெற்றிருந்தது. வேலூர் மாநகரில் இருந்து இக்கோயிலை அடைய 25 கிலோ மீட்டர் பயணிக வேண்டும். அதுவே ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் வள்ளிமலை கோயில் உள்ளது. முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயர் வந்தது. வள்ளி இந்த ஊரில் பிறந்து வளர்ந்ததும் வள்ளிமலை என பெயர் பெற காரணமாகும். 9ஆம் நூற்றாண்டில் உருவானதாக சொல்லப்படும் இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
வள்ளிமலை முருகன் கோயில்
வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகளில் பயணித்து நீங்கள் வள்ளிமலைக்கு சென்றடையலாம். அங்கிருந்து நடந்தால் மலை அடிவாரத்தின் நுழைவில் முருகப்பெருமானுக்கு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தை சுற்றி வள்ளியை முருகர் சந்தித்த நிகழ்வுகளை படங்களாக வைத்திருப்பார்கள். பயணத்தை தொடர்ந்தால் வலது புறத்தில் மிகப்பெரிய குளத்தை காணலாம். மலைபயணத்தை தொடங்கும் முன்பாக அடிவாரத்தில் வள்ளியம்மை கோயிலில் தரிசனம் செய்யுங்கள்.
வள்ளிமலை முருகன் கோயில் பயணம்
மலைப் பயணம் சுமார் 454 படிக்கட்டுகளை கொண்டதாகும். சுற்றி ஆயிரக்கணக்கான மரங்களை காணலாம். மழைக்காலத்தில் இந்த மரங்கள் மிகப் பசுமையாக காட்சியளிக்கும். காலை நேரத்தில் மலை ஏறுவது நல்லது. ஆங்காங்கே தண்ணீர் வசதியும் உள்ளது. 30 நிமிடங்களுக்கு மலையை ஏறிவிடலாம். விறுவிறுப்பாக நடந்தால் 20 நிமிடங்களில் உச்சியை அடையலாம்.
மேலே வந்தவுடன் கம்பீரமான கொடி மரத்தையும் அருகில் வள்ளிமலை முருகன் குன்றினையும் பார்க்கலாம். குன்று வெளியில் இருந்து காண்பதற்கு சிறிதாக தெரியும். ஆனால் உள்ளே நீண்டு கொண்டே போகும். குகையின் இடது பக்கத்தில் வள்ளியம்மை சன்னதியும் அதை தொடர்ந்து விநாயகர் சன்னதியும் இருக்கும்.
வள்ளிமலை முருகன் கோயில் நேரம்
அடுத்ததாக முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையோடு காட்சியளிப்பார். முருகனை தரிசித்த பிறகு குகை கோயிலை சுற்றி வர பாறைகளுக்கு இடையே படிக்கட்டு பாதை அமைந்திருக்கும். வள்ளி முருகப் பெருமான் திருமணம் நடைபெற விநாயகரும் உதவியதாக கூறப்படுகிறது. தரிசனம் இதோடு நிறைவடைவதில்லை. மலையிலேயே திருப்புகழ் ஆசிரமம், குளம், ஜெயின் கோயில் உள்ளது.
திருப்புகழ் ஆசிரமம், ஜெயின் கோயில்
இடது புறத்தில் உள்ள பாதையில் சென்றால் திருப்புகழ் ஆசிரமத்தை அடையலாம். அதற்கு முன்பாக ஆங்காங்கே சுனை, கல் மண்டபம் ஒன்றையும் காணலாம். ஒட்டுமொத்த பாதையும் மிகவும் தூய்மையாக இருக்கும். இது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒத்தையடி பாதையாகும். சரியாக பயணிக்க அம்புக்குறிகளும் வரைந்திருப்பார்கள்.
திருப்புகழ் ஆசிரமம் மரங்களால் சூழப்பட்டு இருக்கும். இங்கு பொங்கி அம்மன் சன்னதி மற்றும் சச்சிதாநந்தசுவாமி ஜீவ சமாதி அடைந்த இடம் உண்டு. சமாதிக்கு குகைக்குள் இறங்கி நடக்க வேண்டும். அந்த சமாதியில் தியானம் செய்வது அமைதியான மனநிலையை கொடுக்கும்.
மேலும் படிங்கTiruvannamalai Temple : நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
இதை தொடர்ந்து வரும் ஜைன கோயில் ஒன்றாம் ராஜமல்லனால் கட்டப்பட்டதாகும். ஜைன மதத்தை தமிழில் பரப்ப கல்வெட்டுகளில் ஜைன குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். ராணிபேட்டைக்கு வருகை தந்தால் கட்டாயம் இந்த கோயிலை தவறவிடாதீர்கள். முருகனின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation