மூன்று நாட்களுக்கு உலகின் டாப் பிரபலங்களை குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வரவழைத்து மகனின் திருமண வைப நிகழ்ச்சிகளை திருவிழா போல் நடத்திய அம்பானி குடும்பம் அதற்கு ஒரு வாரம் முன்னதாக வன விலங்குகளின் நல்வாழ்வுக்காக மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் இரண்டாவது மகனான அனந்த் அம்பானி தனது கனவு திட்டமான வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். வந்தாரா உலகளவில் விலங்குகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்குகளின் மறுவாழ்வு மையமாக வந்தாரா உருவெடுத்துள்ளது.
வந்தாரா என்றால் காட்டின் நட்சத்திரம் என பொருள். இது வனவிலங்குகள் பாதுகாப்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அதே நேரத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 26ஆம் தேதி தொடங்கப்பட்ட வந்தாராவில் காட்டு யானைகளுக்கான பிரத்யேக வசதிகள் மற்றும் சிறுத்தைகள், சிங்கங்கள், புலிகள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கான அதிநவீன தங்குமிடங்கள் உள்ளன. தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட நீர் சிகிச்சை குளங்கள், யானைகளின் மூட்டு சிகிச்சைக்கான மையம் உட்பட பல நீர்நிலைகள் உள்ளன.
மேலும் படிங்க லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி பெறுவதற்கான வழிகள்
ஒரு லட்சம் சதுர அடியில் இங்குள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எம்ஆர்ஐ, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி, அல்ட்ராசவுண்ட் மற்றும் வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகள் மூலம் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. பிரத்யேக யானை மருத்துவமனையில் லேசர் இயந்திரங்கள் மற்றும் நோயியல் ஆய்வகம் கொண்டு யானைக்கு சிறப்பு பராமரிப்பு வழங்கப்படுகிறது. ஆயுர்வேத பயிற்சியாளர்கள் யானைகளுக்கு 24 மணி நேரமும் மசாஜ்களை வழங்குகின்றனர்.
14 ஆயிரம் சதுர அடி சமையலறையில் நிபுணத்துவ சமையல்காரர்கள் பணியமர்த்தப்பட்டு யானையின் உணவு தேவை மற்றும் வாய்வழி சுகாதாரத்திற்கான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
மீட்பு மற்றும் மறுவாழ்வு
வந்தாராவில் உள்ள விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் 43 உயிரினங்களை சேர்ந்த 2 ஆயிரம் விலங்குகள் ஆபத்தான நிலைமைகளிலிருந்து இருந்து மீட்கப்பட்டு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது. ஏறக்குறைய 2 ஆயிரத்து 100 பேர் கொண்ட அர்ப்பணிப்புடன் இந்த மையத்தின் விலங்குகளின் நல்வாழ்வுக்காக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிங்கபெங்களூருவின் பிரபலமான சுற்றுலா தலங்கள்
சுவாமி விவேகானந்தரின் ‘ஜீவ் சேவா’ தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட வந்தாரா, இந்த வனவிலங்கு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஆபத்தான உயிரினங்களைக் காப்பாற்றுவதையும் அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக வனவிலங்கு நிதியம் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் மற்றும் இந்திய விலங்கு நல வாரியம் போன்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் உயிரியல் பூங்காக்களின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்தாராவை பார்வையிட விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation