image

Winter Hair Care Tips: குளிர்காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கிறதா? கூந்தலை இயற்கையாக வலுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்

Hair Fall Home Remedies: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு பிரச்சனையை எவ்வாறு எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலமாக கட்டுப்படுத்தலாம் என்று இதில் காண்போம். இதற்காக ஹோம்மேட் ஹேர்பேக்குகளை பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-11-28, 13:16 IST

இயல்பாக, ஒரு நாளைக்கு சுமார் 50 முடிகள் வரை உதிர்வதாக கூறப்படுகிறது. எனினும், குளிர்காலத்தில் வழக்கத்தை விட அதிக முடி உதிர்வை நீங்கள் கவனிக்கலாம். குளிர் மற்றும் ஈரப்பதமற்ற காலநிலை, தலையில் உள்ள ஈரப்பதத்தை உறிந்து விடுவதால், உச்சந்தலை வறண்டு முடி பலவீனமடைகிறது. மேலும், வீட்டுக்குள் பயன்படுத்தப்படும் ஹீட்டர்கள் போன்ற சாதனங்கள் வறண்ட சூழலை உருவாக்கி, இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கின்றன.

குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைப்பதால், முடி ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் டி அளவும் குறைகிறது. இவை தவிர, மன அழுத்தம், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு, நீரிழப்பு மற்றும் பிற காரணிகளும் முடி வேர்க்கால்களை பாதித்து, குளிர்காலத்தில் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. எனவே, குளிர்கால காலநிலை நம் கூந்தலில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொள்வது, ஆண்டு முழுவதும் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க மிகவும் முக்கியமானது.

 

குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுக்க உதவும் இயற்கை வைத்தியங்கள், உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் பயன் அளிக்கும். அந்த வகையில் எளிதாக பின்பற்றக் கூடிய சில இயற்கை வைத்தியங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க உதவுகின்றன.

 

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஹேர்பேக்:

 

தயிர் ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர் போன்றது. இது முடிக்கு ஈரப்பதம் அளித்து, உதிர்வதை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு, உச்சந்தலையில் உள்ள பி.ஹெச் (pH) சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த ஹேர்பேக் தயாரிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்துக் கொண்டால் போதுமானது.

Curd hair pack

 

செய்முறை:

 

  • ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்ட தயிரில் சில துளிகள் எலுமிச்சை சாறை பிழிந்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் இருந்து முடி நுனிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
  • இந்த ஹேர்பேக் உச்சந்தலைக்கு ஈரப்பதம் அளிப்பதன் மூலம் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது மற்றும் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.

மேலும் படிக்க: Coconut Oil for Skin: குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் என்னென்ன?

 

தயிர் மற்றும் வேப்பிலை ஹேர்பேக்:

 

வேப்பிலை, பூஞ்சை எதிர்ப்பு (Antifungal) பண்புகளைக் கொண்டது. இது பொடுகால் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. தயிர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, மிருதுவாக்குகிறது. இதற்காக, தயிர் மற்றும் வேப்பிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

செய்முறை:

 

  • சில வேப்பிகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் சாறை தயிரில் சேர்த்து கலக்கலாம்.
  • இவை இரண்டையும் நன்கு கலந்தால் ஹேர்பேக் தயாராகி விடும். இதை உச்சந்தலை மற்றும் கூந்தலில் நன்றாக தடவ வேண்டும்.
  • இதையடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் சிகைக்காய் பயன்படுத்தி குளித்து விடலாம்.
  • பொடுகால் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராட வேப்பிலை உதவும். இது கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பை அளிக்கிறது.

 

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர்பேக்:

 

தேங்காய் எண்ணெய் முடிக்கும், உச்சந்தலைக்கும் மிகச் சிறந்த ஈரப்பதம் அளிக்கும் பொருளாகும். வேப்பிலையின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுடன், தேங்காய் எண்ணெய் சேரும் போது, முடி உதிர்வும் பொடுகும் குறையும்.

 

செய்முறை:

 

  • போதுமான அளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து, அதனுடன் சில வேப்பிலைகளை சேர்த்து நன்கு காய்ச்சி எடுக்கவும். இந்த இலைகளின் சாறு எண்ணெய்யில் இறங்க வேண்டும்.
  • பின்னர், எண்ணெய்யை வடிகட்டி அது இதமான சூட்டில் இருக்கும் போது உச்சந்தலையில் இருந்து முடி நுனி வரை தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
  • இதையடுத்து, குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் விட்டுவிட்டு, பின்னர் தலைக்கு குளித்து விடலாம்.
  • வேப்பிலை, பொடுகால் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை நீக்கி, அரிப்பு மற்றும் துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கிறது.
  • தேங்காய் எண்ணெய், உச்சந்தலை மற்றும் முடியை ஈரப்பதமாக்கி முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க: Dandruff Home Remedies: குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ

 

ஆரோக்கியமான கூந்தலுக்கான கூடுதல் குறிப்புகள்:

 

இயற்கை வைத்தியங்களுடன் கூடுதலாக, குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த சில நடைமுறைகளையும் நீங்கள் பின்பற்றலாம்.

 

  • நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல, முடிக்கும் ஈரப்பதம் அளிக்கும்.
  • சூடான தண்ணீரை தவிர்க்கவும்: தலைக்கு அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும். ஏனெனில், இது உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கி வறட்சியை அதிகரிக்கும். வெதுவெதுப்பான நீரை குளிக்க பயன்படுத்தவும்.
  • ஊட்டச்சத்துகள்: இரும்புச்சத்து, சின்க் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும்.
  • வெப்பமான கருவிகளை தவிர்க்கவும்: ஹேர் ட்ரையர்கள் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகள் பயன்படுத்துவதை குறைக்கலாம்.

 

இந்த இயற்கை வைத்தியங்கள் மற்றும் பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம், குளிர்காலத்திலும் உங்கள் கூந்தலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், உதிர்வு இல்லாமலும் பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]