சிறு துளி பெருவெள்ளம் என்று கூறுவார்கள். அதற்கேற்ப சிறு சேமிப்பின் தொடக்கமே, ஒரு வளமான எதிர்காலத்திற்கு ஆரம்பமாகும். சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரை இல்லாத வீட்டுக்குச் சமம். நாம் காணும் எறும்புகள் கூட , தனக்கான உணவைக் கோடை காலத்தில் சேமித்து வைக்கும். பின்பு மழை நாட்களில் அதனை கொண்டு உயிர் வாழும். இது போல மனிதர்களும் எதிர்காலத்துக்கு வேண்டியவற்றை சேமித்து வைப்பது நல்லது.
“ஒரு குடும்பத்தில் வரவு செலவு விஷயங்களை நிர்வகிப்பது பெரும்பாலும் பெண்களே. குடும்பத்தின் பணத் தேவைகளுக்குப் பெரிதும் சிரமப்படுபவர்களும் பெண்களே!!!” என்று, சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட், ஒரு பிரபல நாளிதழில் குறிப்பிட்டு இருக்கிறார்.
1. சிறுவாட்டுச் சேமிப்பு
இது நாம் அனைவரும் பின்பற்றும் பழங்கால சேமிப்பு முறை ஆகும். நம் கையில் புழங்கும் பணத்தில் 10, 50, 100 ரூபாய் எனக் கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தரசிகள் ரகசியமாக சேமிக்கும் இந்தச் சேமிப்புதான், குடும்பத்தின் அவரசத் தேவைக்குக் கைகொடுக்கும். வங்கியில் அக்கவுண்ட் இல்லாத பெண்களும், இன்றைக்கும் இந்தச் சேமிப்பை மேற்கொள்கிறார்கள். இதனை மறந்த பெண்கள் திரும்பவும் இந்த புது வருடத்திலிருந்து தொடருங்கள். ஒரு உண்டியல் வாங்கி தினசரி குறிப்பிட்ட ரூபாயை அதில் போடவும். ஒரு நோட்டு புத்தகத்தில் நீங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை எழுதிக் கொண்டே வரவும். சேமிப்பு அதிகமாவதைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு இன்னும் அதிகமாகச் சேமிக்க வேண்டிய எண்ணம் வரும்.
உங்கள் குழந்தையையும் இந்த சேமிப்பு முறையை பின்பற்ற வையுங்கள்.
2. வங்கி சேமிப்பு
தற்போது வங்கி சேமிப்பு தான் மிகவும் பாதுகாப்பானது. மீடியமான வட்டி என்பதால் வங்கிச் சேமிப்பைப் பலரும் மேற்கொள்கிறார்கள். குறுகிய கால வங்கி சேமிப்பாக, ரெக்கரிங் டெபாசிட்டில் சேமிக்கலாம். உதாரணமாக, இந்தச் சேமிப்புக்கு தற்போது 6.65% வட்டி தரப்படுகிறது. அதன்படி நீங்கள் மாதம் 1000 ரூபாய் என, இரண்டு ஆண்டுக்குச் சேமிப்பதாக வைத்துக்கொள்வோம், அப்போது சேமிப்பின் முடிவில் 25,735 ரூபாய் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
வங்கியில் மூன்று ஆண்டுக்கும் மேலாக எத்தனை ஆண்டுக் காலம் கொண்ட நீண்ட கால சேமிப்பாக (ஃபிக்ஸட் டெபாசிட்) இருந்தாலும், 6.5% வட்டிதான் தரப்படுகிறது.
குறிப்பு: வட்டி விகிதம் வங்கியை பொருத்து வேறுபடும்
3. தபால் நிலைய சேமிப்பு
வங்கி பயன்பாட்டுக்குப் பழக்கப்படாத காலம் வரையில், தபால் நிலைய சேமிப்பை தான் மக்களில் பலரும் மேற்கொண்டார்கள். அதிகபட்சமாக 10 ஆண்டுகள், 3 மாதங்கள் கொண்ட நீண்ட கால சேமிப்பில் (‘கிஷான் விகாஸ் பத்ரா’ திட்டத்தில்) சேமிக்கலாம். அந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பில் தற்போது 7.1 % வட்டி தரப்படுகிறது. சேமிப்புக் காலம் முடிந்ததும், பணத்தை எடுத்து, தேவைப்பட்டால் புதிய சேமிப்பைத் தொடங்கலாம். அல்லது, நம் சேமிப்பைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் மாதந்தோறும் அதே தொகையில் சேமிப்பைத் தொடரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமா?
4. நம்பிக்கையான சீட்டில் சேருங்கள்
பட்டாணி சுண்டல் வாங்குவது முதல் பட்டா போட்ட மனையை வாங்குவது வரையில் எல்லாமே எங்களுக்குச் சீட்டுதான் என்று சொல்பவர்களும் உண்டு.
தெளிவாகத் திட்டமிட்டு, மாதம் ஒரு தொகையை ஒதுக்கி, சீட்டில் சேர்ந்து, மொத்தமாக வருடக் கடைசியில் கிடைக்கும் பணத்தைத் தேவைக்காகப் பயன்படுத்துவது நம்முடைய பழக்கம்தான். தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆனாலும் சரி, பிள்ளைகளுக்கான அட்மிஷன் ஆனாலும் சரி, நம்மில் பலரும் நம்புவது மாதச் சீட்டுக்களைத்தான். இப்படிச் சீட்டுச் சேருவதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
நீங்கள் வேலை செய்யும் ஆபீஸில் பத்து பேர் சேர்ந்து சிறிய தொகை சீட்டு போடுவது, அபார்ட்மெண்டில் அல்லது ஒரே தெருவில் குடியிருக்கும் நம்பிக்கையான நண்பர்கள் சேர்ந்து சீட்டுப் போடுவது நல்ல பலனைத் தரும். சின்ன அளவில் சீட்டுச் சேருவதில் பணம் மட்டுமல்ல, உறவும் வலுப்பெறும். அதில் பெரிய சிக்கல் வரும் வாய்ப்பும் இல்லை. அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலும் சீட்டுச் சேரலாம்.
பெண் குழந்தைகளுக்கான திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா
குழந்தைகளின் நலம், எதிர்காலம், கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்தத் திட்டத்தில் இணையலாம். அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை 15 ஆண்டுகளுக்குச் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளின் முடிவில் கணிசமான தொகை கிடைக்கும். இந்த திட்டத்தின் தற்போதைய வட்டி 7.6% ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: திருமணமான பெண்கள் மறந்தும் இந்த நாட்களில் தலை குளிக்க கூடாதாம்! ஏன் தெரியுமா?
சில கூடுதல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்பிக்கும் பெற்றோரின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சிறு சேமிப்பே ஆகும். 10 வயதிற்கு மேற்பட்ட உங்கள் குழந்தைகளுக்கு இந்த வருடமே வங்கியில் அவர்கள் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்யுங்கள், அவர்களையே அதை நிர்வகிக்கவும் சொல்லுங்கள்.
நீங்கள் வாங்கும் மாத சம்பளத்தில் 20% சேமிப்பிற்காக முழுமையாக ஒதுக்கி விடுங்கள். 50% அடிப்படைத் தேவைகளுக்கும், 5% அவரச தேவைகளுக்காகவும் ,5% பிள்ளைகளின் படிப்பு தேவைகளுக்காகவும் மீதி 10% உங்கள் ஆசைகள் மற்றும் குடும்ப ஆசைகளுக்காக செலவளியுங்கள். இந்த வருடத்திலிருந்து உங்கள் கணவருடன் ஆலோசித்து உங்கள் பட்ஜெட்க்கு ஏற்றவாறு பிரித்துச் சேமிக்க ஆரம்பிக்கலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation