சுதந்திர போராட்டத்தில் மெட்ராஸ் மாகாணம் மற்றும் தமிழ்நாட்டு பெண்களின் பங்களிப்பை உலகறியச் செய்யும் விதமாக சொர்ணத்தம்மாள், சிவகாமி அம்மையார், ருக்மிணி லட்சுமிபதி, லட்சுமி என்.மேனன், கேப்டன் லட்சுமி சாகல் ஆகியோரின் வீர வரலாற்றைப் பகிர்ந்துள்ளோம். அந்த வகையில் வெளிநாட்டு பொருட்களை எரித்து வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்ட சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் குழந்தைகள் நல செயல்பாட்டாளரான மஞ்சுபாஷினியின் வரலாற்றைப் இந்த பதிவில் பார்ப்போம். இவர் ராஜம்மா என்ற பெயரில் அறியப்படுகிறார்.
மஞ்சுபாஷினி 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார். 12 வயதிலேயே இவரை சுப்ரமணியன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். வழக்கறிஞரான சுப்ரமணியன் எதிர்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் செயல்பட்டார். கல்வியை தொடருவதற்கு கணவர் ஊக்கமளிக்கவே மஞ்சுபாஷினி 10ஆம் வகுப்பை முடித்தார். காந்தியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட மஞ்சுபாஷினி 24 வயதிலேயே 4 குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வீட்டு பணிகளை ஒதுக்கிவிட்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டார். இதற்காக சிறைவாசமும் அனுபவித்தார்.
வேதாரண்யத்தில் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற போது தம்பு செட்டித் தெருவில் துர்காபாய் தேஷ்முக்குடன் இணைந்து வெளிநாட்டு பொருட்களை எரித்தார். ஒன்றரை ஆண்டு காலம் வேலூர் சிறையில் அம்மு சுவாமிநாதனுடன் அடைக்கப்பட்டார். 1941-1942 காலகட்டத்தில் இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது மெட்ராஸில் அகதிகளுக்கான முகாமை ஏற்பாடு செய்து மறுவாழ்வு அளிக்க உதவினார்.
சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முன்பாக தி.நகரில் செயல்பட்டு வந்த தேசிய இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டார். காங்கிரஸில் மகளிர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் நபராக இருந்த மஞ்சுபாஷினி கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளை செய்தல், பெண் உறுப்பினர்களை சேர்த்தல், வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தல் ஆகியவற்றில் துரிதமாக பணியாற்றினார். காங்கிரஸில் இணைந்த 10 ஆயிரம் பெண் தொண்டர்களுக்கு பல பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு கல்விக் கண் திறந்த காமராசர் அளித்த ஊக்கத்தின் காரணமாக 1949ல் காங்கிரஸுக்கு சொந்தமான இடத்தில் பால மந்திரை பதிவு செய்து இரண்டு குடிசைகளில் இரண்டு குழந்தைகளோடு மகத்தான சமூக சேவையை தொடங்கினார். பல நபர்களின் ஆதரவைப் பெற்று பால மந்திருக்கு செயற்குழுவை உருவாக்கி அதற்கு காமராசரை தலைவராக அறிவித்தார். மேலும் பல சமூக சேவகர்களை பால மந்திரில் பணி செய்ய தூண்டினார்.
75ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பால மந்திர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பராமரிப்பு கூடமாக உள்ளது. பால மந்திரில் உள்ள குழந்தைகளின் முகத்தில் தென்படும் மகிழ்ச்சியே மஞ்சுபாஷினி செய்த தியாகங்களுக்கு அடையாளமாகும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]