மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர் கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு பூரணத்தின் கணவர் உக்கிர பாண்டியன் காலமானார். அதன் பிறகு வாரிசு வேலை அடிப்படையில் கணவர் உக்கிர பாண்டியனின் வங்கி ஊழியர் பணி பூரணத்திற்கு கிடைத்தது. தற்போது மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பூரணம் தனது மகளான ஜனனியை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜனனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தனக்கென இருந்த ஒரே உறவான மகள் ஜனனி இறந்ததும் பூரணத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. மகள் ஜனனி இறக்கும் தருவாயில் நமது பூர்வீக நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் பூரணம் வசித்து வரும் தனது சொந்த ஊரான கொடிக்குளத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனது பெயரில் இருந்த சுமார் 7 கோடி மதிப்பிலான 1.52 ஏக்கர் நிலத்தினை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி 5ம் தேதி இவரது சொந்த நிலத்தை அரசின் பெயரில் பத்திரப்பதிவு செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் அதற்கான சான்றிதழ்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூடுதலாக 3.5 கோடி மதிப்பிலான 91 சென்ட் தனது சொந்த நிலத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு தானமாக பூரணம் அம்மாள் வழங்கியுள்ளார் இந்த செயல் தமிழக முழுவதும் பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளது.
குழந்தைகளின் கல்விக்காக தனது 10.5 கோடி மதிப்பிலான சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்மணி பூரணம் அம்மாளிடம் ஹெர்ஜிந்தகி தமிழ் சார்பில் சிறப்பு நேர்காணலை விரிவாக பார்க்கலாம்.
என்னுடைய பொண்ணு சில வருஷத்துக்கு முன்னாடி உடல்நிலை சரி இல்லாம இறந்திருச்சு. அது நினைவா ஏதாச்சு செய்யணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அடிக்கடி என் பொண்ணு நம்ம ஸ்கூலுக்கு ஏதாவது பண்ணனுமா அப்படின்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும். நானும் கொடிக்குளம் ஸ்கூல்ல தான் ஐந்தாவது வர படிச்சேன். அந்த ஸ்கூல் இப்ப வர நடுநிலைப் பள்ளி அதான் இருக்கு. அந்த ஸ்கூல் பக்கத்துலயே எங்களுக்கு நிறைய நிலம் சொந்தமா இருந்துச்சு என் பொண்ணு பேருல இருந்துச்சு. அந்த அரசு பள்ளியை உயர்நிலைப் பள்ளி மாத்தணும்னா இடம் வேணும் கொஞ்சம் இடம் இருந்தா மாத்தலாம் என்று கேள்விப்பட்டேன். உடனே என்னோட 1.52 ஏக்கர் சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானம் செட்டில்மெண்ட் செஞ்சிட்டு என்னோட வேலைக்கு வந்துட்டேன் அதோட மதிப்பு 7.5 கோடின்னு அரசாங்கம் சொன்னாங்க சத்தியமா எனக்கு தெரியாது. அப்புறம் மீண்டும் 91 சென்ட் அதே இடத்துல எனக்கு இருந்துச்சு அதையும் அரசு பள்ளிக்காக பத்திர பதிவு செஞ்சு கொடுத்துட்டேன்.
என் கூட பிறந்தவங்க 5 சகோதரிகள் அவர்கள் யாருமே என்னை திட்டவில்லை. என்னோட இந்த செயலை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எனக்கு அடுத்து யாருமே இல்ல இருந்த என் மகளும் இறந்து போயிட்டா அவளோட பேரு நிக்கணும் அதுக்கு தான் இந்த வேலையை நான் செஞ்சிருக்கேன். சொத்துலாம் முக்கியம் இல்லைங்க நாம இறக்குரப்ப எங்க கொண்டு போக போறோம். என் பொண்ணு பேர சொல்லி பள்ளி குழந்தைங்க நல்லா படிச்சாங்கன்னா அதுவே போதும். என்னோட சகோதரிகளும் என் உடன் பணிபுரியும் வங்கி அதிகாரிகளும் என்ன ரொம்ப பாராட்டுனாங்க பாராட்டு நிகழ்ச்சி எல்லாம் வச்சு என்ன சந்தோஷப்படுத்தினாங்க. நான் கொடுத்த இந்த விஷயத்தை யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைச்சேன் எப்படியோ தெரிஞ்சிருச்சு....
என் பொண்ணு இருக்கறப்ப ஆடிட்டர் ஆகணும்னு அவளுக்கு ரொம்ப ஆசை அதை நான் செஞ்சிருக்கணும். அப்போ நான் அதை தடுத்தேன் அதை நினைச்சு இப்பவும் ரொம்ப வருத்தப்படுகிறேன். நம்ம கிட்ட எவ்வளவு சொத்துமா இருக்கு அதை இல்லாதவங்களுக்கு கொடுக்கணும் முக்கியமா ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கு உதவியா இருக்கணும்னு என் பொண்ணு அடிக்கடி சொல்லுவா. அவ நினைவா தான் எங்க ஊரு அரசு பள்ளிக்கு உயர்நிலைப் பள்ளி மாத்தணும்னு நான் கொடுத்து இருக்கேன்.
அந்த நிலம் எத்தனை கோடியா இருந்தாலும் இல்லாதவர்களுக்கு, குறிப்பா கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கணும் கல்வி தான் மிகச் சிறந்தது கல்வி மூலமா ஒரு நல்லது செஞ்சா என்னோட பொண்ணோட பேரு நிலைச்சு நிக்கும்.
இல்லாதவங்களுக்கு நம்ம பணம் கொடுத்தா சாப்பிட்டுட்டு போயிருவாங்க. ஆனா இப்படி படிப்புக்காக செஞ்சம்னா நம்ம பேரு நிலைச்சி நிக்கும் அதுவும் என் பொண்ணு பேரு நிலைச்சு நிக்கணும் அதுதான் என்னோட ஆசை. என் பொண்ணு ஜனனியின் பேரல்ல கொடுத்தார்கள் என்று கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியா இருக்கும். பள்ளியில் அந்த பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறவங்க. அவங்க நல்லா இருக்கணும் நல்லா வரணும் பெரிய பெரிய அதிகாரிகளா வரணும் அதுதான் என் பொண்ணோட ஆசை.
நான் கொடுத்த அந்த நிலத்துல அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டனும் அந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியை மாத்தணும் அது அரசு மாற்றி தரேன்னு சொல்லி இருக்கு. அப்படி கட்டிடாங்ன்னா அந்த ஸ்கூல்ல கட்டக்கூடிய கட்டடத்தில் என் மகளின் பெயரை வைக்க வேண்டும். முடிந்தால் என் மகளின் முழு உருவச் சிலையை அந்த கட்டிடத்தில் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒட்டுமொத்த கோரிக்கை. சொத்துக்கள் முக்கியமில்லை கல்விதான் முக்கியம் எனது மகள் ஜனனியின் பெயரில் பல மாணவர்கள் படிக்க வேண்டும் அந்த பள்ளி உயர்நிலைப் பள்ளி மாற வேண்டும் ஆத்ம ரீதியாக மிகவும் சந்தோசமா இருக்கு.
என்னோட சொத்தை வச்சு நான் இல்ல, என் கைல என் கணவர் கொடுத்த பேங்க் வேல இருக்கு. நான் யாருகிட்டயும் இத சொல்லல யாரும் என்னைய தடுக்கல என்னோட சகோதரிகளாம் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க என்னை கூப்பிட்டு வாழ்த்து நாங்க ரொம்ப உசந்துட்ட டி நீ என்று சொன்னார்கள். பணம், கோடி அதெல்லாம் முக்கியமில்ல நம்ம பேர சொல்லி பசங்க நல்லா படிச்சு நல்லா வந்தாலே அது போதும். நான் இறந்தே போனாலும் என்னுடைய மகள் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் அதுதான் என்னுடைய இறுதி ஆசையை இன்று கண்ணீர் மல்க பூரணம் அம்மா நம்மிடம் சொன்னார்.
பணம் தான் வாழ்க்கை எப்படியாவது பணத்தை சேர்த்து அடுக்கடுக்கான மாடு வீடுகளை கட்டி சமூகத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் பலரது மனதிலும் மேலோங்கி இருக்கும் இந்த காலத்திலும் 10.5 கோடி மதிப்பிலான தனது சொந்த நிலத்தை அரசு பள்ளி மாணவர்களுக்காக தானமாக வழங்கிய இந்த வங்கிப் பணியாளர் பெண்மணியை நாமும் பாராட்டலாமே!
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]