herzindagi
vyishali

Women's Day Special: பேஸ்கட் பால் என் முதல் காதல்.. இந்தியா ஜெர்சிய வாங்கினப்போ அழுதுட்டேன்..

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பது போல விளையாட்டும் முக்கியம் தான் என்று சாதித்துக் காட்டிய தேசிய பேஸ்கட் பால் வீராங்கனை வைஷாலியிடம் சில கேள்விகள் கேட்டிருந்தோம். 
Editorial
Updated:- 2024-03-30, 09:06 IST

தனது 20 வயதில் ஜூனியர் FIBA ஆசிய போட்டியில் இந்தியாவிற்காக பேஸ்கெட் பால் விளையாடி வெள்ளி பதக்கம் வென்ற வைஷாலி கேம்கர் உடன் ஓர் சிறப்பு நேர்காணல். தமிழநாடு பேஸ்கெட் பால் அணியில் மூன்று முறை கேப்டனாக இருந்த வைஷாலி சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்கெட் பால் மீது ஆர்வம் துவங்கியது எப்படி?

பேஸ்கெட் பால் என்று ஒரு விளையாட்டு இருக்கிறது கூட எனக்கு முதலில் தெரியாது. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு தடகள வீராங்கனை. பள்ளியில் இருந்து ஒரு முறை நேஷனல் கேம்ப் செல்லும்போது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டை தேர்வு செய்ய சொன்னார்கள். அப்போ தான் நான் பேஸ்கெட் பால் தேர்வு செய்தேன். நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது பேஸ்கெட் பால் விளையாட வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கிருந்த பேஸ்கெட் பால் கோச்  எனக்கு சிறந்த ஆதரவாக இருந்தார் என்று சொல்லலாம். வெறும் ஆறே மாதத்தில் என்னுடைய பேஸ்கெட் பால் கோச் உதவியால் தமிழ்நாடு அணிக்காக விளையாடினேன். அதற்குப் பிறகு ஒரு வருடத்தில் இந்தியா கேம்பில் சேர்ந்து பேஸ்கெட் பால் விளையாட தொடங்கினேன்.

நீங்க சந்தித்த சவால்கள் என்ன? 

நான் பேஸ்கட் பால் விளையாட ஆரம்பித்த காலத்தில் நிறைய கஷ்டங்கள் இருந்தது. குறிப்பாக பேஸ்கெட் பால் அணியில் இருந்த பெண்கள் பலருக்கும் ரயில்வே துறை வேலைகள் மட்டும் தான் அப்போ கிடைக்கும். இதுவே ஆண்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்திருந்தது. ஆனால் இப்போ இருக்க விளையாட்டு வீராங்கனைகளுக்கு பல துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியே வேலை வாய்ப்பு கிடைத்தாலும் பெரும்பாலும் தமிழகத்தில் கிடைக்காது. அதே சமயம் பேஸ்கெட் பால் போட்டிகளில் வெற்றி பெற்றால் பரிசு தொகை சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று மூன்றாவது பரிசு பெறுவோர்களுக்கு தலா ஒரு லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படுகிறது. இது நம் பெண்கள் விளையாட்டு துறையில் ஒரு பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன்.

vyishali inside

தமிழ்நாட்டுக்கு விளையாடிய அனுபவம்? 

2011 - 2012 ஆம் ஆண்டில் தான் நான் தமிழ் நாட்டிற்காக விளையாடினேன். எனக்கு மொபைல் ஃபோன் யூஸ் பண்ற பழக்கமே இல்லை. எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் பேஸ்கெட் பால் விளையாடுவேன். அதுதான் என் முதல் காதல். தமிழ்நாட்டிற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாடினேன். அந்த அனுபவம் இன்றும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக உள்ளது.

மறக்க முடியாத பேஸ்கெட் பால் போட்டி? 

பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஜூனியர் நேஷனல் பேஸ்கெட் பால் போட்டி எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். அப்போ செமி பைனல் சுற்றில் மகாராஷ்டிரா அணியை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தோம். மகாராஷ்டிரா அணி மிகவும் ஸ்ட்ராங்கான அணியாக இருந்தது. எப்படியாவது ஜெயித்து விடுவோம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கடைசியில் எதிர்பாராத விதமாக போட்டி டிரா ஆகிவிட்டது. அதற்க்கு பிறகு எக்ஸ்டிரா 5 நிமிஷத்தில் கடைசி நொடியில் ஒரே ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. அந்த தோல்வியை ஏதுக்கவே முடியல. இருந்தாலும் அந்த ஒரு போட்டி இன்றும் மறக்க முடியாத அனுபவம் தான். கடைசி நொடி வரைக்கும் எங்க பெஸ்ட் ஆன ஆட்டத்தை நாங்க கொடுத்ததினால் எந்த விதமான ஹார்ட் பீலிங்சும் இல்லை என்று கூறலாம். ஜூனியர் நேஷனல் பேஸ்கெட் பால் போட்டியில் முதலாவது இடத்தில் சத்தீஸ்கர் அணியும் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா அணியும் நம் தமிழ்நாடு அணி மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றது.

vyishali inside

சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் எப்படி இருந்துச்சு? 

இந்தியா ஜெர்சியை கையில வாங்கினப்போ நிஜமா அழுதுட்டேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது என் பல வருட கனவு. இதற்கு முன்னதாகவே நான் இந்தியா கேம்பில் இருந்தபோது டாப் 10-ல் இருந்தாலும் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அப்போ ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். இருந்தாலும் அதே காதலுடன் பேஸ்கெட் பால் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படிதான் இந்தியாவிற்காக விளையாடும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜூனியர் FIFA ஆசிய பேஸ்கட்பால் போட்டியில் இந்திய அணியில் வெறும் 4 பெண்கள் மட்டும் தான் இருந்தோம். அதில் இரண்டு சத்தீஸ்கர் பெண்களும், ஒரு மகாராஷ்டிரா பெண்ணும் இருந்தனர். இந்தியாவிற்காக இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி நாங்கள் தான் என்ற பெருமையும் இருக்கு. நான் அப்போதான் முதல் முறையாக மற்ற நாடுகளில் இருக்கும் பேஸ்கெட் பால் வீரர்கள் விளையாடுவதை நேரில் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப உயரமாகவும் பார்க்கவே பயங்கர புஷ்டியாகவும் இருந்தனர். இருந்தாலும் எங்கள் அணியில் ஒரு பெண் வீராங்கனை ஏழு அடி உயரம் இருந்தார். எப்படியோ இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வாங்கி கொடுத்தோம்.

உங்க எதிர்கால திட்டங்கள் என்ன?

பேஸ்கட் பால் முதல் காதல் என்றால் இரண்டாவது காதல் சினிமா. ஒரு சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன குறும்படங்களில் நடித்தேன். சினிமாவும் பெண்களுக்கு ஒரு கஷ்டமான துறை தான். சில சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தேன், மாடலிங் செய்துள்ளேன். எனக்கு பேசிக்கிட்டே இருக்க ரொம்ப பிடிக்கும். அதனால இப்போ ஒரு பிரபல தமிழ் ரேடியோ சேனலில் வீடியோ ஜாக்கியாக (VJ) இருக்கிறேன். சினிமாவில் இன்னும் பல விஷயங்களை ட்ரை செய்து பார்க்கவேண்டும் என்று ஆசை. பெண்ணாக பிறந்தால் கண்டிப்பாக நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கும். அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]