"Enough is Enough", பாடம் கற்றோமா ? மறதி எனும் அருவருப்பு... பெண்களின் பாதுகாப்பு பற்றி குடியரசுத் தலைவர் கவலை

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு நேர்மையாக சுய பரிசோதனை செய்துகொண்டு வேர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

President Droupadi Murmu

நாட்டு மக்களுக்கு அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலையுண்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அரங்கேறுவது வருத்தப்பட வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள் நீதி கேட்டு போராடிய நேரத்தில் குற்றவாளிகள் எளிதில் உலாவிக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெண் குழந்தைகளும் உள்ளனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த சமூகம் எப்போதும் நாட்டின் மகள்களுக்கு இதை அனுமதிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக மிருகத்தனமான செயல்

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தானே உதாரணம். எனினும் இந்தியாவில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான செயல்கள் தன்னை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி இருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட வந்திருந்த பள்ளி மாணவர்கள் அப்பாவியான முகத்தோடு எதிர்காலத்தில் நிர்பயா சம்பவம் போல மீண்டும் நிகழாது என உறுதியளிக்க முடியுமா என்று கேட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களை பாதுகாப்பது அரசின் கடமை எனவும் பெண்கள் தற்காப்பு கலைகளை கற்பது அவர்களை வலிமையாக மாற்றும் என மாணவர்களிடம் கூறியிருக்கிறார். பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய பதில் சமூகத்தில் இருந்தே வர வேண்டும் என்று திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சுயபரிசோதனை தேவை - குடியரசுத் தலைவர்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பாரபட்சமின்றி நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சமூகமாக இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் பதிவிட்டுள்ளார். எங்கு தவறு செய்தோம், எங்கு சரி செய்ய வேண்டும் என்பதை கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு மறதி எனும் அருவருப்பு

தேசத்தின் தலைநகரில் நிர்பயாவுக்கு நிகழந்த கொடூரம் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதே போல பல பகுதிகளில் கொடூரங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில மட்டுமே தேசிய கவனம் பெறுகிறது அதையும் நாம் எளிதில் மறந்துவிடுகிறோம். முந்தைய நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றோமா ? இந்த கூட்டு மறதி அருவருப்பானது என தெரிவித்துள்ளார். இது போன்ற குற்றங்களை மறக்கக் கூடாது. மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்ட பாவமான பெண்களை நினைவு கொண்டு கொடூரங்களை நமது தோல்வியாக கருதி எதிர்காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் மகள்களுக்கு தடைகளை நீக்குக

அச்சத்தில் இருந்து விடுதலை பெற வழிவகுத்து வெற்றிப் பாதைக்கான தடைகளை நீக்கிட நாட்டின் மகள்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் எனவும் அடுத்த ரக்‌ஷா பந்தனுக்கு அப்பாவியான முகத்தோடு கேள்வி எழுப்பிய பள்ளி மாணவர்களிடமே பதிலை பெறலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு நாம் கூட்டாக Enough is Enough எனக் கூற வேண்டும் என்று அறிக்கையை முடித்துள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP