Game changer review : ”ஓட்டுக்கு காசு நாட்டுக்கு வேட்டு” அப்பண்ணா ராம் சரணுக்கு சல்யூட்

ஷங்கர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியன், சிவாஜி, முதல்வன் வரிசையில் ஓட்டுக்கு காசு வாங்கினால் நாட்டுக்கு கேடு என்பதை தெலுங்கு மசாலா கலந்து இயக்குநர் ஷங்கர் சொல்லி இருக்கிறார்.
image

மிகப்பெரிய பொருட் செலவில் சங்கராந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கேம் சேஞ்சர் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே லஞ்சம், ஊழல் மலிந்து இருப்பது போல படங்கள் எடுத்து வந்த இயக்குநர் ஷங்கர் இம்முறை அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் சென்று ஓட்டுக்கு காசு வாங்கினால் நாட்டுக்கு கேடு என ராம் சரணை வைத்து எடுத்திருக்கும் மற்றொரு அரசியல் பாடம் இந்த கேம் சேஞ்சர். எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியரா அத்வானி, அஞ்சலி, யாஷிகா ஆனந்த், சுனில், பிரம்மானந்தம் உட்பட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி பின்வாங்கிய காரணத்தால் தெலுங்கு படமான கேம் சேஞ்சருக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. கேம் சேஞ்சர் திரைப்படத்தின் விமர்சனம் இங்கே.

கேம் சேஞ்சர் கதை சுருக்கம்

நேர்மையான அரசு அதிகாரிக்கும் வாரிசு அரசியல்வாதி மந்திரிக்கும் நடக்கும் யுத்தமே கேம் சேஞ்சர். ஆந்திர மாநிலத்தை ஊழல், லஞ்சம் இன்றி மாற்ற நினைக்கும் அதிகாரியின் முயற்சியை 2 மணி நேரம் 40 நிமிட படமாக எடுத்துள்ளனர்.

கேம் சேஞ்சர் விமர்சனம்

விஷாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரான ராம் சரண் ஊரில் நடக்கும் அட்டூழியங்களை அதிரடியாக துவம்சம் செய்கிறார். இவருடைய செயல்கள் ஆளுங்கட்சியின் வாரிசு அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு குடைச்சலாக அமைகிறது. இருவரும் முதல் முறையாக சந்தித்த பிறகு மோதல் வெடிக்கிறது. முதல் பாதி பயணிகள் இரயில் போலவும் இரண்டாம் பாதி எக்ஸ்பிரஸ் ரயில் போலவும் செல்கிறது. தெலுங்கு சினிமா என்பதால் வழக்கம் போல பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன.

கேம் சேஞ்சர் படத்தின் பாசிட்டிவ்ஸ்

  • ராம் நந்தன், அப்பண்ணா என இரட்டை வேடங்களில் ராம் சரண் கலக்கி இருக்கிறார். குறிப்பாக 30 நிமிடங்கள் வரும் அப்பண்ணா கதாபாத்திரம் படத்திற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு ஷங்கரின் திரைப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் ஓரளவு முக்கியத்துவம் பெற்றுள்ளன. கியாரா அத்வானி, அஞ்சலி இருவருமே அசத்தி இருக்கின்றனர்.
  • அரசியலை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் சாயல் தெரியாத அளவிற்கு கதையை ஷங்கர் நகர்த்தி சென்றுள்ளார்.
  • சுனில், ஜெயராம் ஆகியோரின் டைமிங் காமெடி ஆடியன்ஸிற்கு கலகலப்பு ஊட்டுகிறது.
  • நேர்மையான அரசாங்கத்தின் தேவை குறித்து படம் எடுத்ததற்காக பாராட்டுக்கள்.

கேம் சேஞ்சர் படத்தின் நெகட்டிவ்ஸ்

சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தும் படங்களில் மக்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை காட்சிப்படுத்துதல் அவசியம். இதில் இயக்குநர் ஷங்கர் கோட்டை விட்டு இருக்கிறார்.

5 பாடல்களுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக படக்குழு கூறியது. எனினும் எந்த பாடலும் மனதில் ஒட்டவில்லை. கூடுதலாக இன்ப்ரா ரெட்கேமராவில் எடுக்கப்பட்ட ஒரு பாடலை திரையரங்கில் ஒளிபரப்பு செய்வதில் உள்ள தொழில்நுட்ப சிக்கலால் தற்காலிகமாக கட் செய்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் அறிவே இல்லாத அரசியல் வாரிசாகவும், அமைச்சராகவும் காட்டுகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் ராம் சரணிடம் எதோ ஒரு விதத்தில் எஸ்.ஜே.சூர்யா தோற்று விடுகிறார். அவருடைய கதாபாத்திரத்தில் அழுத்தமே இல்லை.

மேலும் படிங்கIdentity Review : டோவினோ தாமஸின் முடிச்சுகளே இல்லாத புரியாத (தலைவலி) புதிர்

ரேட்டிங் - 3/5

லாஜிக் இல்லாமல் மேஜிக் பார்க்க விரும்பும்ரசிகர்கள் சங்கராந்தி பண்டிகைக்கு குடும்பமாக திரையரங்கிற்கு சென்று கமர்ஷியல் சினிமாவாக எடுக்கப்பட்டு இருக்கும் கேம் சேஞ்சரை ரசிக்கலாம்.

கேம் சேஞ்சர் என்ற தலைப்பு படத்திற்கு பொருந்தவில்லை. முதல்வன் 2 என்று வைத்திருந்தால் ஓரளவுக்கு பொருந்தி இருக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP