டாமினிக் விமர்சனம் : மம்மூட்டியின் மலையாள துப்பறிவாளன் எப்படி இருக்கு ?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் திரையுலகை தாண்டி எடுக்கும் முதல் படம் டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்.
image

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், சித்திக், வினீத், சுஸ்மிதா பட், மீனாட்சி உன்னிகிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படம் டாமினிக் அன்ட் தி லேடீஸ் ப்ர்ஸ். ரேகாசித்ரம் படத்தை தொடர்ந்து சிறிய இடைவெளியில் மற்றொரு கொலை குற்ற விசாரணை படமாக டாமினிக் வெளிவந்துள்ளது. பல க்ரைம் த்ரில்லர் படங்களில் போலீஸ் அதிகாரி, விசாரணை அதிகாரி, வழக்கறிஞராக நடித்துள்ள மம்மூட்டி டாமினிக் படத்தில் சற்று மாறுபட்டு துப்பறிவாளனாக நடித்துள்ளார். ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் டாமினிக் திரைப்படம் வெளியானது. படத்தின் விமர்சனத்தை இங்கே படியுங்கள்.

டாமினிக் கதைச் சுருக்கம்

தவறவிடப்பட்ட ஒரு பெண்ணின் பர்ஸை உரிமையாளரிடம் ஒப்படைப்பதில் மர்மங்கள் அதிகரிக்கின்றன. அடுத்தடுத்து இரண்டு கொலைகளுக்கான லீட் கிடைக்கிறது. இதில் மம்மூட்டி குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்.

டாமினிக் விமர்சனம்

போலி சான்றிதழ் வழக்கில் சிக்கி காவல் அதிகாரி பதவியை மம்மூட்டி இழக்கிறார். அவரது மனைவியும் விட்டுச் செல்கிறார். வாழ்க்கை நடத்துவதற்கு துப்பறிவாளனாக மாறுகிறார். சின்ன சின்ன சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்கும் மம்மூட்டிக்கு சிக்கலான வழக்கு லேடீஸ் பர்ஸில் மாட்டுகிறது. குற்றவாளியை நெருங்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அவருக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இறுதியில் சவால்களை மீறி குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே டாமினிக் படத்தின் கதை.

டாமினிக் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • மம்மூட்டி துப்பறிவாளனாக யதார்த்தமாக நடித்துள்ளார். ஒட்டுமொத்த படத்தையும் தோள்களில் சுமந்து செல்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட துப்பறிவாளனாக மிரட்டுகிறார்.
  • மம்மூட்டியின் உதவியாளர், விஜி வெங்கடேஷ், வினீத், சுஸ்மிதா பட் படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.
  • கிளைமேக்ஸில் சொல்லப்பட்ட ட்விஸ்ட் ரசிக்கும்படி இருந்தது.
  • இறுதிவரை யார் குற்றவாளி என்ற குழப்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்த கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பாராட்டுக்கள்.

டாமினிக் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். படத்தில் பாடல்களே தேவையில்லை. மார்கழி பாடல் மாண்டேஜ் ஷாட் ஆக வைத்திருக்கலாம். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கவில்லை.
  • எந்தவொரு படத்திலும் ஒரு கொலை நடந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும். தொடக்கத்தில் இருந்து தேடப்படும் ஒரு சடலமாக கிடைக்கும் போது தாக்கம் ஏற்படவில்லை.
  • ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தை இயக்குநர் பல நாட்கள் கழித்து பார்த்திருப்பார் போல.

டாமினிக் ரேட்டிங் - 3.25 / 5

இந்த படத்தை பார்த்த பிறகு கீழே எங்காவது ஒரு லேடீஸ் பர்ஸை கண்டால் அதை உரிய நபரிடம் கொடுக்க முயற்சி கூட செய்யமாட்டார்கள். ஏனெனில் நீங்கள் தேவையில்லாத குற்ற வழக்கில் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP