கிச்சா சுதீப்பின் மேக்ஸ் திரைப்படம் விமர்சனம்; நம்பி வாங்க சந்தோஷமா போங்க

விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்துள்ள மேக்ஸ் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இதை கன்னட படம் என்று சொல்வதை விட கன்னட - தமிழ் கலப்பு படம் எனக் குறிப்பிடலாம்.
image

கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், இளவரசு, வம்ஸி கிருஷ்ணா, சுனில், பாண்டிய நாடு படத்தின் வில்லன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சில கன்னட நட்சத்திரங்கள் நடித்துள்ள மேக்ஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி டிச 25ஆம் தேதி வெளியானது. தொடக்கத்தில் இதை கன்னட - தமிழ் கலப்பு படம் என குறிப்பிட்டதற்கு காரணம் என்னவென்றால் கன்னட நடிகர்களை விட தமிழ் நடிகர்களுக்கு மேக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு ? தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா ? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேக்ஸ் கதை சுருக்கம்

காவல் நிலையத்தில் பணியில் சேரவிருக்கும் பணியிடை நீக்கத்தில் உள்ள அதிகாரி சக காவலர்களால் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்னையை எப்படி அவர் சரி செய்கிறார் என்பதே கதை. மொத்த படமும் ஒரு நாள் இரவில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ் படத்தின் பாஸிடிவ்ஸ்

  • முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது. எங்கும் தொய்வு இல்லை. கிச்சா சுதீப் ஒற்றை ஆளாக மேக்ஸ் படத்தை சுமந்து செல்கிறார்.
  • காவல் நிலையத்தில் அமைச்சர்களின் மகன்கள் இறந்த பிறகு அதை மறைத்து தப்பிக்க எடுக்கப்படும் முயற்சிகள், இறுதியில் சொல்லப்பட்ட ட்விஸ்ட் ரசிக்க வைக்கின்றன.
  • வழக்கமான போலீஸ் - ரவுடி படமாக இல்லாமல் காட்சிகளை வேறுபடுத்தியுள்ளனர்.
  • கிச்சா சுதீப் 100 பேரை அடித்து பறக்கவிட்டாலும் அதை நம்பும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். சிங்கம் - நரி தந்திரம் மோதலே இந்த மேக்ஸ் திரைப்படம்.
  • படத்திற்கு பின்னணி இசை வலு சேர்க்கிறது. சில லாஜிக் இன்றி பார்த்தால் நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை எடுத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

படத்தின் நெகடிவ்ஸ்

  • முதல் காட்சியில் இருந்தே சுதீப்பை தவிர காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் ரவுடிகளுக்கு பயப்படுகின்றனர். ரவுடிகள் தானே காவலர்களை கண்டு பயப்பட வேண்டும். இங்கு தலைகீழாக உள்ளது.
  • மிகப்பெரிய ரவுடியான வம்ஸிக்கு சுதீப்பை பற்றி முன்பே தெரிந்திருந்தும் அவரை எதிர்ப்பதற்கு வண்டி வண்டியாக ஆட்களை அனுப்புகிறார். அவரே களத்தில் வந்திருக்கலாம்.
  • இயக்குநர் விஜய் கார்த்திகேயன் லோகேஷ் கனகராஜின் ரசிகராக இருப்பார் போல. மேக்ஸ் படம் ஒரு கட்டத்தில் கைதியின் சாயலை தந்தது.
  • வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் தொடக்கத்தில் ஒரு எதிர்பார்ப்பை கொடுக்கிறது. கதையின் போக்கில் அவருடைய கதாபாத்திரம் வலு இழக்கிறது.
  • படத்தில் ஒரு பாடல் காட்சி இருக்கிறது. அது படத்திற்கு தேவையில்லை என்றே சொல்லலாம்.

ரேட்டிங் - 3.5/5

நிறைய சண்டை காட்சிகள் இருந்தாலும் மேக்ஸ் படத்தை அனைவரும் கண்டு ரசிக்கும்படி எடுத்துள்ளனர். அநேகமாக பிரசாந்த் நீலிடம் இருந்து விரைவில் கிச்சா சுதீப்புக்கு அழைப்புகள் வரலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP