
2024ல் நூற்றுக்கணக்கான தமிழ் படங்கள் வெளியாகின. இந்தாண்டில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 2023ல் ஜெயிலர் 600 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலித்தது. இந்த வருடம் எந்த தமிழ் படமும் 500 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை. விஜய் நடித்த கோட் திரைப்படம் 450 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2 படங்கள் தோல்வியை தழுவின. 2024ன் சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, கதை, வசூல், திரையரங்கில் அதிக நாட்கள் நீடித்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், காளி வெங்கட், சஞ்சனா, பால சரவணன் நடித்திருந்த லப்பர் பந்து திரைப்படம் 2024ன் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 10 மடங்கு லாபம் பெற்று 45 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும் லப்பர் பந்து படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை திரையில் கொடுத்தது. அனைவருக்கும் பிடித்தமான ஜனரஞ்சக படம் என்று லப்பர் பந்தை குறிப்பிடலாம்.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாமிடம் பிடிக்கிறது. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் 50வது படமான மகாராஜா வசூலிலும் சாதனை படைத்தது. ஓடிடியில் வெளியான பிறகு இந்தியா முழுவதும் பாராட்டுக்களை பெற்றது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், வலுவான கதைக்களம் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்தியேகன், சாய் பல்லவி நடித்திருந்த அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருந்தது. மறைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் ரசிகர்களிடையே கண்ணீரை வரவழைத்தது.
2024ல் காதல் ஜோடிகள், ஒரு தலை காதல் கொண்ட நபர்கள் மிகவும் ரசித்த படம் லவ்வர். காதலில் பிரிவு வலியை தரும் என்று உணர்ந்தாலும் காதலிக்கு அளித்த கஷ்டங்களை புரிந்தும் புரியாமலும் அருண் விலகி செல்லும் இடம் வேதனைக்குரியது. கெளரி பிரியா, மணிகண்டனை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்க முடியாது. டாக்ஸிக் காதலை திரையில் காண்பித்த பிரபு ராமுக்கு பாராட்டுக்கள்.
96 பிரேம்குமாரின் மற்றொரு கலை படைப்பான மெய்யழகன் திரைப்படம் இந்த பட்டியலில் 5ஆம் இடத்தை பிடிக்கிறது. கார்த்தி மெய்யழகன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். உண்மையான உறவுகளின் முக்கியத்துவத்தை தெரியாதவர்கள் இந்த படத்தை ஒரு முறை கட்டாயம் பார்க்கவும்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் 2024ன் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலில் 6வது இடம் பிடிக்கிறது. மாணவன் - ஆசிரியர் இடையேயான காட்சிகளில் சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் கருதினர். சிவநைந்தன் கதாபாத்திரத்திற்கு விருதுகள் பல காத்திருக்கின்றன.
அரசியல் அதிகாரம் கிடைத்தாலும் பட்டியலின, பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களை அதிகார வர்க்கம் எப்படி கட்டுப்படுத்துகிறது, பணி செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை ஆழமாக காட்டியிருந்த படம் நந்தன். சமூகத்திற்கு தேவையான படத்தை எடுத்த எரா சரவணனுக்கு பாராட்டுக்கள்.
மேலும் படிங்க கோட், அமரன், கங்குவா ? எது நம்பர் 1; 2024ல் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 தமிழ் படங்கள்
கம்யூனிசம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்கைக்கு எந்த வகையில் உதவியது என்பதை விடுதலை 2 திரைப்படம் வெளிக்காட்டியது. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
சூரி நடிப்பில் வெளியான கருடன் இந்த வருடத்தின் மற்றொரு ஜனரஞ்சகமான படமாகும். இந்த வருடத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் அரண்மனை 4-ம் இருக்கிறது. தமன்னா, ராஷி கண்ணாவை காணவே ரசிகர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்தனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]